வாழ்வியல்

மன அழுத்தத்தை குறைப்போம்... இதயம் காப்போம்! - உலக இதய தினம் பகிர்வு

அரசு மருத்துவமனை இதயவியல் துறை தலைவர் ஆலோசனை

ஒய்.டேவிட் ராஜா

மதுரை: மன அழுத்தத்தை குறைத்தால் இதய ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழலாம் என அரசு ராஜாஜி மருத்துவமனை இதயவியல் துறைத் தலைவர் மருத்துவர் சரவணன் தெரிவித்தார்.

இதய நோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில், உலக இதய சம்மேளனம், உலக சுகாதார அமைப்பு சார்பில், உலக இதய தினம் செப்.29-ம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த தினத்தில், இதய நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதனைத் தடுக்கும் முறைகளை மக்களிடம் கொண்டுசேர்க்கும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இதுகுறித்து இதயவியல் துறை தலைவர் மருத்துவர் சரவணன் கூறியதாவது: நாம் உண்ணும் உணவில் உப்பு, கொழுப்பு சார்ந்த உணவுகளை தவிர்த்தால் அல்லது குறைத்தால் ஆரோக்கியமான இதயத்துக்கு வழிவகுக்கும்.

ஒருவருக்கு குறைந்தபட்சம் 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை உறக்கம் தேவை. தூக்கம் குறைந்தால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். மேலும் வாரத்தில் குறைந்தது 5 நாட்களாவது 30 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சியோ, நடைப்பயிற்சியோ மேற்கொள் வது நல்லது.

மருத்துவர் சரவணன்

இது நம் இதயத்துக்கு நல்ல ஆரோக்கி யத்தைக் கொடுக்கும். ஆரோக்கியமான இதயமே ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிவகுக்கும். தேவையற்ற மன அழுத்தத்தை குறைத்தால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

இதய நோய் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் மதுரை அரசு மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் உள்ளன. ஆரம்பக்கட்ட இதய நோய் அறிகுறிகள் தெரியும்போதே மருத்துவரை அணுகினால் நீண்ட ஆயுளுடன் வாழலாம். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT