படம்: எம்.சாம்ராஜ்

வாழ்வியல்

விழுப்புரத்தில் களைகட்டிய ‘கூவாகம் திருவிழா - 2026’

செய்திப்பிரிவு

விழுப்புரம்: தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பு சார்பில் ‘கூவாகம் திருவிழா - 2026’ எனும் நிகழ்ச்சி விழுப்புரத்தில் நேற்றிரவு நடைபெற்றது. தேசிய விருது பெற்ற திரைப் பட நடிகை அர்ச்சனா, விழுப்புரம் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஜனகராஜ் உள்ளிட்டோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தனர்.

தமிழக அரசின் சிறந்த திரு நங்கை விருது பெற்ற பொன்னி பரத குழுவினரின் பரத நாட்டி யம் அரங்கேற்றப்பட்டது. மேலும் திருநங்கைகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பல்வேறு துறைகளில் சாதித்துள்ள 25 திருநங்கைகள் கவுரவிக்கப்பட்டனர்.

முன்னாள் அமைச்சர் பொன்முடி அவர்களை பாராட்டி பரிசு வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது: திருநங்கை என பெயர் சூட்டியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. எல்லோரும் சமம், ஏற்றத் தாழ்வு இருக்கக் கூடாது என்பதற்காக திருநங்கை என அழைத்தவர் கருணாநிதி.

மேலும் 2008-ல் நலவாரியம் அமைத்து கொடுத்தார். ஒரு காலத்தில் திருநங்கைகள் படிப்பதற்கு கூட அனுமதி இல்லை. அவர்கள் வழியில் நின்று கையேந்தி இருந்தனர். இன்று பள்ளி ஆசிரியர், கல்லூரி பேராசிரியர், தமிழில் முனைவர் பட்டம் பெற்று சாதனையாளர்களாக உள்ளனர். படிப்பதில் திருநங்கைகளுக்கு ஆர்வம் இருக்கிறது.

இவர்களும் படிக்க வேண்டும் என்பதற்காக கல்லூரியில் இடம் ஒதுக்கியவர் முதல்வர் ஸ்டாலின். மாநில திருநங்கை கொள்கை அறிவித்து பல்வேறு திட்டங்கள் மற்றும் உதவியை செயல்படுத்தி வருகிறார்.

குடும்பத்தில் உள்ளவர்களால் கைவிடப்பட்ட நிலையில் இருந்த வர்களுக்கு சென்னை மற்றும் மதுரையில் அரண் இல்லத்தை தொடங்கி வைத்தவர் முதல்வர் ஸ்டாலின். நலவாரியத்தில் அலுவல்சாரா உறுப்பினர்களாக திருநங்கைகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் புறக் கணிக்கப்பட வேண்டியவர்கள் இல்லை. நம்மில் ஒருவர். அவர்களும் மனிதர்கள். படித்து முன்னேற வேண்டும். அனைத்து துறைகளிலும் சாதிக்க வேண்டும். இதுதான் திராவிட மாடல். இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து திருநங்கை களுக்கான மிஸ் திருநங்கை அழகி போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 12 பேர் பங்கேற்றனர். இதில் மிஸ் திருநங்கையாக சென்னையை சேர்ந்த ஓமனா தேர்வு செய்யப் பட்டார்.

இரண்டாவது இடத்தை சென்னையைச் சேர்ந்த சாய் ஸ்ரீயும் மற்றும் மூன்றாவது இடத்தை சென்னையை சேர்ந்த ஸ்விகியும் தட்டிச் சென்றனர்.

வெற்றி பெற்ற மூவருக்கும் கிரீடம் அணிவித்து நடிகை அர்ச்சனா உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர்.

இவ்விழாவில் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்கள் மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான திருநங்கைகள் பங்கேற்றனர்.

மேலும், திரைப்பட இயக்குநர் மரியராஜா இளஞ்செழியன், கானா பாடகர் வினோத் மற்றும் கூட்டமைப்பின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT