சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் தாயார் சூடாமணி உடல்நலக்குறைவால் வெள்ளிக்கிழமை (ஜூலை 17) காலமானார். அவருக்கு வயது 83. அவரது உடல் அன்றைய தினமே தகனம் செய்யப்பட்டது.
நீதிபதியின் தாயாரின் மறைவை அடுத்து அவரது நண்பர்கள் பலரும் அவருக்கு இரங்கல் செய்தி அனுப்பி இருந்தனர். அனைவருக்கும் நன்றி தெரிவித்து நீதிபதி வெங்கடேஷ் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தனது தாயாரின் இறுதிப் பயணம் குறித்த நெகிழ்ச்சியான தருணத்தை பகிர்ந்துள்ளார். அதன் விவரம் வருமாறு:
அன்புள்ள நண்பர்களுக்கும் நலம் விரும்பிகளுக்கும், உங்களின் மனமார்ந்த இரங்கல் செய்திகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். என் தாயாரின் இறுதிப் பயணத்தைப் பற்றிய ஒரு சிறிய பகிர்வு இது - அறிவியலைத் தாண்டி அன்பு வென்றதற்கான ஒரு சாட்சியம்.
அடிபணிய வைத்த பக்கவாதம் மற்றும் நீண்ட கால ஞாபக மறதி நோயுடனான (Dementia) போராட்டத்துக்குப் பிறகு, அறிவியல் அவளது உயிர்நாடிகளைத் துடிக்க வைத்ததே தவிர, அவளது வேதனையைத்தான் நீட்டித்தது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, சிதைந்து போயிருந்த அவளது உடலைப் பார்த்த என் மனைவி, அவளிடம் பேசுமாறு என்னைக் வற்புறுத்தினாள்; ஒரு தாயால் எப்போதுமே தன் பிள்ளையின் குரலைக் கேட்க முடியும் என்று எனக்கு நம்பிக்கையளித்தாள்.
கண்ணீர் மல்க அவளது கரங்களைப் பற்றிக்கொண்டு, அவளை அமைதியாகப் புறப்பட அனுமதித்தேன்: "அம்மா, நீ இனிமேலும் இந்த வேதனையை அனுபவிக்க வேண்டாம். நீ உன் வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்துவிட்டாய். தயவுசெய்து விடுதலை அடை அம்மா. நான் எப்போதாவது உன்னை காயப்படுத்தியிருந்தால் என்னை மன்னித்துவிடு. உன்னை நீயே விடுவித்துக்கொள்." மூடியிருந்த அவளது இமைகளுக்குப் பின்னால் ஏற்பட்ட ஒரு சிறிய அசைவு, அவள் அதைப் புரிந்துகொண்டதற்கான அறிகுறியாக இருந்தது. அந்த வார்த்தைகளுக்காகத்தான் அவள் காத்திருந்தாள்.
ஐந்து நாட்களுக்குப் பிறகு, அவள் மூச்சுவிட சிரமப்பட்டபோது, நாங்கள் அவளுக்கு செயற்கை சுவாசக் கருவி (Ventilator) பொருத்த மறுத்துவிட்டோம். அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக அவள் நேசித்த அவளது சொந்த இல்லத்திலேயே, அவள் அமைதியாகக் கண் மூட வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். நானும் என் மனைவியும் அவளது கைகளைக் கோத்தபடி, அவளது ஆன்மா பிரிந்த அந்தத் துல்லியமான தருணத்தைக் கண்டோம்; அந்த நொடியில் அவளது முகத்தில் ஒரு பேரமைதியும் நிம்மதியும் குடியேறியது.
நாங்கள் அவளுக்கு ஓர் உன்னதமான விடைபெறுதலை அளித்தோம். பெண் ஓதுவார் ஒருவர் அப்பர், சுந்தரர் மற்றும் மாணிக்கவாசகரின் திருமுறைகளைப் பாடினார். பாடும்போதே அந்த ஓதுவார் அடக்க முடியாமல் அழுதார். பின்னர் எங்களிடம் பேசுகையில், என் தாயே தன் குரல் வழியே இறைவனிடம் அழுது அழுது மோட்ச சிவபதத்தைக் கேட்பது போல் உணர்ந்ததாகக் கூறினார்.
அறிவியலால் நம் உயிர்த்துடிப்பை நீட்டிக்க முடியுமே தவிர, ஒரு கண்ணியமான இறுதிப் பயணத்தை உறுதி செய்ய முடியாது. என் தாயார் இந்த மானுட வாழ்விலிருந்து மிக உன்னதமான ஆன்ம அமைதியோடு விடைபெற்றிருக்கிறார். எங்களுடன் உறுதுணையாக நின்ற உங்கள் அனைவருக்கும் நன்றிகள் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.