பிரபாகர் பிரசாத்
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் கார்ப்பரேட் பணியில் இருந்து நீக்கப்பட்ட இந்திய இன்ஜினீயர் வெற்றிகரமாக டீ கடையை நடத்தி வருகிறார். அவரது கடையில் ஒரு டீ ரூ.735-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பிஹார் தலைநகர் பாட்னா அருகேயுள்ள பார் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகர் பிரசாத். ஐஐடி மாணவரான அவர் கடந்த 2014-ம் ஆண்டில் எம்பிஏ படிப்பதற்காக அமெரிக்காவுக்கு சென்றார். சுமார் 10 ஆண்டுகளாக அமெரிக்காவின் பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றினார்.
கடந்த ஆண்டு பிப்ரவரியில் அவர் பணியாற்றிய கார்ப்பரேட் நிறுவனத்தில் பலர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதில் பிரபாகர் பிரசாத்தும் வேலையிழந்தார்.
அடுத்த பணியைத் தேடுவதற்குப் பதிலாக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் டீ கடையை தொடங்கினார். இந்த டீ கடை தற்போது அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரபலமாகி உள்ளது. பிரபாகரின் கடையில் ஒரு டீ ரூ.735-க்கும், போஹா என்ற சிற்றுண்டி ரூ.1,512-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தனது பயணம் குறித்து பிரபாகர் பிரசாத் கூறியதாவது: பிஹாரில் கங்கை நதிக்கரையில் உள்ள சிறிய கிராமத்தில் பிறந்தேன். எனது குடும்பம் மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்தது. எனது தந்தை அடுத்தடுத்து பல்வேறு தொழில்களை நடத்தினார்.
ஆனால், அவரால் பொருளாதார தன்னிறைவை எட்ட முடியவில்லை. நான் இந்தி மொழி வழி பள்ளியில் கல்வி பயின்றேன். சில ஆண்டுகளுக்கு பிறகு எனது குடும்பம் போபாலுக்கு இடம் பெயர்ந்தது. அங்கு சிபிஎஸ்இ பள்ளியில் சேர்ந்தேன். எனக்கு இந்தி மட்டுமே நன்றாக தெரியும்.
போதிய ஆங்கில அறிவு இல்லாத காரணத்தால் சக மாணவர்கள் கேலி, கிண்டல் செய்தனர். எதையும் கண்டுகொள்ளாமல் மிகவும் கடினமாக படித்தேன். ஐஐடி கல்வி நிறுவனத்தில் சேர்ந்து இன்ஜினீயர் பட்டம் பெற்றேன்.
சாப்ட்வேர் துறையில் எனக்கு பெரிதாக ஈடுபாடு இல்லை. உடற்பயிற்சி கூடம் சார்ந்த பணிகளில் ஆர்வம் செலுத்தினேன். இதற்காக மும்பையில் குடியேறினேன். கடந்த 2014-ம் ஆண்டில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்துக்கு சென்றேன். பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றினேன்.
பல முறை வேலையில் இருந்து நீக்கப்பட்டேன். கடைசியாக கடந்த ஆண்டு பிப்ரவரியில் பணி நீக்கம் செய்யப்பட்டேன். அதோடு கார்ப்பரேட் பணியை முழுமையாக துறந்தேன். சொந்தமாக தொழில் தொடங்க முடிவு செய்தேன்.
தற்போது வெற்றிகரமாக டீ கடையை நடத்தி வருகிறேன். கார்ப்பரேட் நிறுவனங்களின் சி.இ.ஓ-வாக நான் உயர்ந்த பதவியை அடையவில்லை. ஆனால் சாய் வாலா என்ற மிகப்பெரிய பட்டம் கிடைத்திருக்கிறது. இது மன நிறைவைத் தருகிறது. இவ்வாறு பிரபாகர் தெரிவித்துள்ளார்.