கீழடியில் தனியார் தென்னந்தோப்பில் அமைந்துள்ள திறந்தவெளி அகழ் வைப்பகம்.

 
வாழ்வியல்

கீழடியில் தென்னந்தோப்புக்குள் பிரமிப்பூட்டும் திறந்தவெளி அகழ் வைப்பகம்!

இ.ஜெகநாதன்

திருப்புவனம்: கீழடியில் தென்னந்தோப்புக்குள் பிரமிப்பூட்டும் வகையில் திறந்தவெளி அகழ் வைப்பகம் அமைந்துள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 10 கட்ட அகழாய்வுகள் நடைபெற்றன.

இதன்மூலம் தமிழர் நாகரிகம் 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் கண்டறியப்பட்டது. மேலும், இங்கு கண்டறியப்பட்ட பல ஆயிரம் தொல்பொருட்களை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் கீழடியில் 31,000 சதுரஅடியில் ரூ.18.43 கோடியில் அகழ் வைப்பகம் அமைக்கப்பட்டது. இதை ஏராளமானோர் கண்டு வியந்து வருகின்றனர்.

          

இந்நிலையில் அகழாய்வு நடை பெற்ற இடத்திலேயே திறந்தவெளி அகழ் வைப்பகம் அமைக்க கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, 4, 5, 7 மற்றும் 8-ம் கட்ட அகழாய்வு நடந்த இடத்தில் ரூ.22 கோடியில் 5,917 சதுர மீட்டர் திறந்தவெளி அகழ் வைப்பகம் அமைக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள அகழாய்வு குழிகளில் செங்கல் சுவர்கள், உறை கிணறுகள், பானை ஓடுகள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கண்ணாடி மேற்கூரை மற்றும் தடுப்புகள், நடை பாலம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.

கீழடியில் அமைந்துள்ள திறந்தவெளி அகழ் வைப்பகம்.

தனியார் தென்னந்தோப்புக்கு மத்தியில் பிரமிப்பூட்டும் வகையில் அமைந்த திறந்தவெளி அகழ் வைப்பகத்தை ஜன.31-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து திறந்துவைக்க உள்ளார்.

SCROLL FOR NEXT