கோப்புப் படம்
ஆம்பூர் பிரியாணி முதல் நீலகிரி ராகி களி வரை 235 வகையான உணவுகளுடன் கூடிய பிரமாண்ட உணவுத் திருவிழா பெசன்ட் நகர் கடற்கரையில் இன்று (டிச.21) தொடங்குகிறது. இதை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், மகளிர் குழுவினரின் சமையல் திறமையையும், தரமான தயாரிப்புகளையும் வெளிப்படுத்தும் வகையில் பெசன்ட் நகரில் இன்று (டிச.21) முதல் 24-ம் தேதி வரை 4 நாள் உணவுத் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த உணவுத் திருவிழாவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
இதில் 38 மாவட்டங்களைச் சேர்ந்த பாரம்பரிய சுவைமிக்க உணவுகளான ஆம்பூர் மற்றும் திண்டுக்கல் பிரியாணி, கொங்கு மட்டன் பிரியாணி, விருதுநகர் புரோட்டா, கடலூர் மீன் புட்டு, கருவாடு சூப், அரியலூர் தோசை, மயிலாடுதுறை இறால் வடை, சேலம் தட்டு வடை, காஞ்சிபுரம் கோயில் இட்லி, நீலகிரி ராகி களி, தூத்துக்குடியின் யாழ் உணவுகள் உள்ளிட்ட 235-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் இடம்பெறுகின்றன. இதற்காக 38 பிரத்யேக உணவு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இது தவிர அடுப்பில்லா முறையில் தயாரித்த உணவுகள், பனை பொருட்கள், 90-ம் ஆண்டு காலகட்ட நினைவுகளைத் தூண்டும் தின்பண்ட வகைகள், செட்டிநாடு பலகாரங்கள் போன்றவற்றை விற்பனை செய்ய ஏதுவாக 12 சிறப்பு அரங்ககுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தொடக்க நாளான இன்று மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், நாளை முதல் 24-ம் தேதி வரை மதியம் 12 மணி முதல் இரவு 9 மணி வரையும் உணவுத் திருவிழா நடைபெறும்.
கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு: இந்நிகழ்வில் உணவு விற்பனை மட்டுமின்றி, மாலை நேரங்களில் பொதுமக்களைக் கவரும் வகையில் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் மகளிர் குழுவினருக்கு விற்பனை நுணுக்கங்கள் மற்றும் சுகாதாரம் குறித்த பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளன.