படம்: மெட்டா ஏஐ

வாழ்வியல்

Food divorce - ‘தனித்துப் புசித்திரு’ ட்ரெண்டும் பின்புலமும்!

பாரதி ஆனந்த்

நாகரிகம், தொழில்நுட்ப வளர்ச்சிகள் மனித சமூகத்தை அவ்வப்போது சில பல ட்ரெண்ட்களுக்குள் தள்ளிவிடுகின்றன. ட்ரெண்டில் ஐக்கியமாகாவிட்டால் ஏதோ படுபாதகம் என்பதுபோல் கும்பல் கும்பலாக மக்களும் ஐக்கியமாகிவிடுகின்றன. அப்புறம் அவை வழக்கொழிந்து மற்றுமொன்று முளைக்கிறது. இது ஒரு சுழற்சிபோல் நடந்து கொண்டேதான் இருக்கிறது. சில நேரங்களில் புதிய ட்ரெண்ட்கள் சில மேற்கத்திய நாடுகளில் தொடங்கி மற்ற பகுதிகளுக்குப் பரவுவதும், சில நேரங்களில் ஆசியாவில் தொடங்கி ஐரோப்பா வரை பரவுவதுமாக இருக்கின்றன.

ஆழ்ந்து பார்த்தால் நாகரிக உலகில் வளர்ச்சி என்று பட்டியலிடப்படுபவை எல்லாமே ஏதேனும் பக்கவாட்டுச் சேதாரத்தையும் இனாமாக மனித சமூகத்துக்கு வழங்கிவிடுவதாகவே தோன்றுகிறது. அதில் தப்பிப் பிழைத்தலும், சிக்கித் தவித்தலும் அவரவர் சாமர்த்தியம்.

அந்தவகையில் தற்போது ஒரு புதிய ட்ரெண்ட் உருவாகியிருக்கிறது. இளம் தம்பதிகள்தான் இந்த ட்ரெண்டின் டார்க்டெ க்ரூப். இப்போதைக்கு பிரிட்டன், அமெரிக்கா, ஜெர்மெனி என்று மேற்குலகில்தான் இது பரவலாகக் காணப்படுகிறது.

இளம் தம்பதிகளிடையே பிரபலமாகும் அந்தப் புதிய ட்ரெண்டின் பெயர் தொடங்கி அது என்ன, ஏதென்று சுருக்கமாகப் பார்ப்போம். ‘Food divorce' - இதுதான் இளம் தம்பதிகள் மத்தியில் பிரபலமாகிக் கொண்டிருக்கும் அந்த ட்ரெண்டின் பெயர்.

‘food divorce’ என்றால் என்ன?

மேலோட்டமாக சொல்ல வேண்டுமானால் தம்பதியர் தங்களுக்கான உணவுக்கான பொருட்களை தனித்தனியாக வாங்கி, தனித்தனியாகவே சமைத்து, தனியாகவே உண்ணுதல் தான் 'ஃபுட் டைவர்ஸ்' (food divorce).

எத்தனை பெரிய பிணக்காக இருந்தாலும்கூட ஒன்றாக உட்கார்ந்து ஒரு கோப்பை காபியோ தேநீரோ, ஒருவேளை உணவோ உண்ணும்போது இணக்கமான சூழல் அரும்பும். அது நண்பர்கள், தம்பதிகள், அலுவலக சகாக்கள் என எல்லோருக்குமே பொருந்தும். இதுதான் தொட்டுத் தொடரும் பாரம்பரியம் போல் உலகம் முழுவதும் இருக்கிறது. ஆனால், ‘டேக் டைவர்ஷன்’ என்பதுபோல் இப்போதைய ‘food divorce’ ட்ரெண்டில் உணவை தனித்தனியாக உண்கின்றனர்.

இதன் பின்னணியில் ஓர் அறிவியல் வாதமும் வைக்கப்படுகிறது. நவீன காலத்தில் தம்பதிகளாகவே இருந்தாலும், தனிநபர்களின் விருப்பங்கள், சுதந்திரம் முன்னுரிமை பெறுகின்றன. அதனால் அவர்களின் உணவு விருப்பங்களும் மாறுபடுகின்றன. டயட் தெரிவு, பணி நேரம், மவுன்ஜாரோ (Mounjaro), ஒசெம்பிக் (Ozempic) போன்ற GLP-1 வகையறா மருந்துகளை உட்கொள்ளுதல் ஆகியன தம்பதிகளின் உணவு நேரம், உணவுப் பழக்கம் ஆகியவற்றில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது.

GLP-1 வகையறா மருந்துகளும் விளைவுகளும்!

அதென்ன GLP-1 வகையறா மருந்துகள் என்று இன்னொரு கிளைக் கேள்வியும் எழலாம். GLP-1 (Glucagon-like peptide-1) என்பது ஒரு ஹார்மோன். இது ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், இன்சுலின் சுரப்பை அதிகரிக்கவும், பசியைக் குறைத்து வயிறு நிறைந்த உணர்வைத் தரவும் உதவுகிறது.

பொதுவாக மருத்துவத்தில் இவை டைப் 2 நீரிழிவு (Type 2 Diabetes) நோயைக் கட்டுப்படுத்தப் பயன்படுகின்றன. உடல் எடைக் குறைப்பு சிகிச்சையிலும் பயன்படுத்தப்படுகின்றன. ஊசி வடிவிலோ அல்லது மாத்திரைகளாகவோ வழங்கப்படுகின்றன. இந்த GLP-1 வகையறா மருந்துகள் இப்போது இளம் தலைமுறையினர் அதுவும் பிரபலங்கள் மத்தியில் அதிக புழக்கத்தில் இருக்கிறது.

உடல் எடைக் குறைப்பு என்பதையும் தாண்டி இந்த வகை மருந்துகளை உட்கொள்வோர் எலும்பில் போர்த்தப்பட்ட தோல், அதனூடே கொஞ்சமாக சதை என்றளவில் காட்சியளிக்கின்றனர். பாலிவுட்டில் பிரபல தயாரிப்பாளர், இயக்குநர் கரண் ஜோஹர் ஒசெம்பிக் ட்ரக் பயன்படுத்துவதாக தகவல்கள் வெளியாகின. கடுமையாக உடல் எடை இழந்த அவரைச் சுற்றி இந்த விமர்சனங்கள் வலுத்த நிலையில், “நான் ஒசெம்பிக் ட்ரக் பயன்படுத்தவில்லை. உண்மை என்னவென்று யாருக்கும் தெரியாது. அதை நான் சொல்லவும் விரும்பவில்லை” என்று கூறியிருந்தார்.

இது பிரிட்டன் நிலவரம்!

சரி நாம் ‘food divorce’-க்கு திரும்புவோம். லண்டனில் உள்ள சிட்டி செயின்ட் ஜார்ஜ் பல்கலைக்கழகத்தின் உணவுக் கொள்கை மையத்தின் ஆய்வாளர் டாக்டர் லெய்லா ஃபாத்தி, “GLP-1 மருந்துகளை உட்கொள்வோருக்கு உணவின் மீதான நாட்டத்தில் பாதிப்பு ஏற்படும். எப்படியென்றால், GLP-1 மருந்துகளின் பொதுவான பக்கவிளைவுகளில் குமட்டல், உணவு சாப்பிடுவதில் உள்ள ஆர்வம் குறைதல் ஆகியவை அடங்கும். இது தனிநபர்களின் உணவுடனான உறவை மாற்றியமைக்கலாம். இதனால் தம்பதிகள் இடையே உணவு உட்கொள்வதில் வேறுபாடு எழும். அந்த எதிர்மறை போக்கே படிப்படியாக தம்பதிகள் தனித்தனியாக உணவு தயாரித்து சாப்பிடத் தூண்டும்” என்று கூறுகிறார். இதுதான் ‘food divorce’ எனக் குறிப்பிடப்படுகிறது.

ஃபாஸ்ட் ஃபுட், பதப்படுத்தப்பட் ஃபுட் மற்றும் அலர்ஜி!

துரித உணவுகளும், பதப்படுத்தப்பட்ட, அல்ட்ரா ப்ராசஸ்ட் உணவுகளும் பிரிட்டன் மக்களிடம் உணவு சார்ந்த ஒவ்வாமைகளை பலமடங்கு அதிகரித்துவிட்டதாகவும் ஃபாத்தி கூறுகிறார்.

“மக்கள் ப்ரீ-ப்ரிப்பேர்ட் , ரெடி டூ ஈட் உணவுகளை அதிகம் சார்ந்திருக்க பழகிவிட்டனர். உணவுத் தொழில்துறை அல்ட்ரா ப்ராசஸ்ட் உணவை அதிகமாக சந்தையில் அறிமுகப்படுத்துகிறது. அதுவும் ஃபிட்நஸ், டயட் என்று மக்கள் ஆட்பட்டிருக்க ‘high protein’ அதிகப் புரத அல்ட்ரா ப்ராசஸ்ட் உணவுகளின் வரத்தும், புழக்கமும் அதிகமாகிவிட்டது. இதுவே மக்கள் உணவு சமைத்தல், அதை ஒன்றாக அமர்ந்து உண்ணுதல் போன்ற பழக்கவழக்கங்களை குறுகச் செய்துள்ளது” என்கிறார் ஃபாத்தி.

அதுமட்டுமல்லாமல் பிரிட்டன் மக்கள் தங்களின் கல்வி, வேலை நேரம், இன்னும் பிற அலுவல்களைப் பின்னர் தங்களுக்காக பிரத்யேகமாக செலவு செய்யும் நேரத்தின் சராசரி 3 மணி நேரம் 44 நிமிடங்களாகிவிட்டதாகவும், அந்த நேரத்தில் பொழுதுபோக்கு, ஓய்வு நேர செயல்பாடுகள், சோஷியலைஸிங் என்று அவர்கள் மூழ்கிவிடுவதாகவும், அதால் ரெடிமேட் உணவுகளை நாடுவதாகவும் ஃபாத்தி கூறுகிறார். இதனால் சமைத்து ஒன்றாக உண்ணுதல், உணவகத்துக்குச் சென்று ஒன்றாக உண்ணுதல் எல்லாவற்றையும் விடுத்து அவரவர் விருப்பத்துக்கு, அவரவருக்கு தோதான நேரத்தில் உண்ணும் பழக்கம் உருவாகிவிட்டது.

இது எப்படி தம்பதிகள் மத்தியில் ‘food divorce’-ஐ ட்ரெண்ட் ஆக்கியது என்றால், பிரிட்டனில் 7% மக்கள் ஒசெம்பிக் மருந்துகளை உட்கொள்கின்றனர். இதனால் தான் பிரிட்டனில் தம்பதிகள் உணவுப் பொருட்கள் கொள்முதலை தனியாகச் செய்வதும், தனியாக சமைப்பதும், உண்பதும் அதிகரித்துள்ளது என்கின்றன புள்ளிவிவரங்கள்.

2026 மார்ச் மாத புள்ளிவிவரப்படி 12% அமெரிக்கர்கள் (18+ வயதினர்) ஒசெம்பிக், வெகோவி (Wegovy) மருந்துகளை உட்கொள்கின்றனர். அதனால் அங்கும் ‘food divorce’ ட்ரெண்ட் அதிகமாகவே உள்ளது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

உணவுப் பழக்கவழக்கமும் உறவுச் சிக்கலும்!

ஒசெம்பிக் மருந்துகளால் உணவுப் பழக்கவழக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் பிரிட்டனில் தம்பதிகள் இடையே பிளவை ஏற்படுத்துவதாக அந்நாட்டு உளவியல் ஆலோசகர்கள் கவலை தெரிவிக்கின்றனர். ஆனால், ஒசெம்பிக் மருந்துகளில் இருக்கும் சில தம்பதிகளோ, உணவு மேசையில் ஒன்றாக அமர்ந்து உண்பது மட்டுமே உறவை தீர்மானிக்காது என்கின்றனர். விருப்பதுக்கு ஏற்ப வேண்டியபோது உண்ணுதல் ஒருவகையில் சுதந்திரம் என்கின்றனர் சிலர். பிரிட்டன் இளம்பெண் ஒருவர் தனது திருமணத்தன்ற பரிமாறப்பட்ட உணவைக் கூட தான் தனியாகவே உண்டதாகவு, அதனால் அது தங்கள் உறவை பாதிக்கவில்லை என்றும் கூறுகிறார்.

ஆனால், உணவுப் பழக்கவழக்கத்தால் உறவுச் சிக்கல்கள் ஏற்படத்தான் செய்கின்றன. ‘food divorce’ தம்பதிகள் மத்தியில் நிரந்தரப் பிரிவையும் ஏற்படுத்துகின்றன என்பதை மறுக்க முடியாது என்கின்றனர் சமூகநல ஆர்வலர்கள்.

உணவு என்பது உணவு மட்டுமா!

உயிர் பிழைத்திருக்க உணவு அவசியம். ஆனால் இன்று உணவு என்பது அந்த அடிப்படைத் தேவையை பூர்த்தி செய்வதாக மட்டும் இல்லை. உணவு என்பது ஒருவரின் அடையாளமாக மாறியிருக்கிறது. சரியாக உண்ணுதல், சரியான உடற்பயிற்சியை செய்தல், ஆரோக்கியமாக இருத்தல் என்பதைத் தொட்டு ஒவ்வொரு தனிநபருக்கும் அழுத்தங்கள் அதிகரித்து விட்டன. இந்த அழுத்தங்களுக்கு யாருக்கும் சரியான விடை தெரிவதில்லை. ஒவ்வொரு தனிநபரின் உடலுக்கு வெவ்வேறு தேவைகள் இருக்கும். ஒவ்வொரு தனிநபரின் உடல் ஏற்றுக்கொள்ளும் / கொள்ளாத உணவுகள் மாறுபடும். அவர்களுக்குத் தேவையான உடற்பயிற்சிகளும் நிச்சயமாக மாறுபடும். இதில் இதுதான் சரி, இதைச் செய்யவே கூடாது என்று திட்டவட்டமாக எதையும் வரையறுத்துச் சொல்ல முடியாது. அப்படியான சூழலில் சுமத்தப்படும் அழுத்தங்கள் எல்லாமே ‘food divorce’ போன்ற ட்ரெண்ட்களில் தான் வந்து நிறுத்தும்.

அழகு சாதன தொழில்துறை போல் டயட், உடற்பயிற்சி தொழில்துறையும் ஒட்டுமொத்த உலகவாசிகளையும் கன்ஸ்யூமர்களாகப் பார்க்கத் தொடங்கியதன் விளைவு இது எனக் கொள்ளலாம்.

SCROLL FOR NEXT