வாழ்வியல்

வினேஷ் போகத் விவகாரத்தில் மல்யுத்த சம்மேளனத்துக்கு கண்டனம்: டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்​திய மல்​யுத்த வீராங்​க​னை​யான வினேஷ் போகத் கடந்த 2024-ல் நடை​பெற்ற பாரிஸ் ஒலிம்​பிக்​கில் இறுதி சுற்று வரை முன்​னேறி அனை​வரது கவனத்​தை​யும் ஈர்த்​திருந்​தார். ஆனால் துர​திருஷ்ட​வச​மாக கடைசி நேரத்​தில் அவரது உடல் எடை 50 கிராம் அதி​க​மாக இருந்​த​தால் தகுதி நீக்​கம் செய்​யப்​பட்​டார். இதன் பின்​னர் மல்​யுத்த போட்​டிகளில் இருந்து வினேஷ் போகத் ஓய்வு பெறு​வ​தாக அறி​வித்​தார்.

தற்​போது ஓய்வு முடிவை திரும்ப பெற்​றுள்ள அவர், 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்​சல்ஸ் ஒலிம்​பிக்​கில் பங்​கேற்​கும் வகை​யில், மீண்​டும் மல்​யுத்த போட்​டி​யில் களமிறங்க உள்​ளார்.

ஆனால், ஊக்​கமருந்து எதிர்ப்பு விதி​களின்​படி, ஓய்​விலிருந்து திரும்​புபவர்​கள் 6 மாதங்​களுக்கு முன்பே அறிவிக்க வேண்​டும் என்ற விதி​யைக் காரணம் காட்டி வரும் ஜூன் 26-ம்​தேதி வரை உள்ளூர் போட்டிகளில் பங்கேற்க வினேஷ் போகத்​துக்கு இந்​திய மல்​யுத்த சம்​மேளனம் தடை​வித்​தது.

இது ஒரு​புறம் இருக்க பாரிஸ் ஒலிம்​பிக் போட்​டிக்​குப் பிறகு, வினேஷ் போகத் மகப்​பேறு விடுப்​பில் இருந்​தார். அவர் மீண்​டும் விளை​யாட்​டுக்​குத் திரும்ப முயன்ற நிலை​யில் 2026 ஆசிய விளை​யாட்​டுப் போட்​டிகளுக்​கான தேர்​வுத் தகுதி விதி​களில் இந்​திய மல்​யுத்த சம்​மேளனம் திடீர் மாற்​றங்​களைக் கொண்டு வந்​தது.

புதிய விதி​களின்​படி, 2025 மற்​றும் 2026-ல் நடந்த குறிப்​பிட்ட உள்​நாட்​டுப் போட்​டிகளில் பதக்​கம் வென்​றவர்​கள் மட்​டுமே தேர்​வுத் சோதனை​களில் பங்​கேற்க முடி​யும் என அறிவிக்​கப்​பட்​டது. இதனால், விடுப்​பில் இருந்த வினேஷ் போகத் வரும் 30, 31 ஆகிய தேதி​களில் நடை​பெற இருக்​கும் ஆசிய விளை​யாட்​டுத் தேர்​வுப் போட்​டிகளில் பங்​கேற்க முடி​யாத​படி “தகு​தி​யற்​றவர்” என இந்​திய மல்​யுத்த சங்​கம் அறி​வித்​தது.

இதனால் வரும் 30 மற்​றும் 31-ம் தேதி​களில் நடை​பெற உள்ள ஆசிய விளை​யாட்டு போட்​டிக்​கான வீரர்​கள் தேர்​வில் வினேஷ் போகத் கலந்து கொள்ள முடி​யாத நிலை உரு​வானது. இதை எதிர்த்து வினேஷ் போகத் டெல்லி உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​திருந்​தார். இதை கடந்த 18-ம் தேதி விசா​ரித்த தனி நீதிபதி மனுவை தள்​ளு​படி செய்து உத்​தர​விட்​டார். தனி நீதிப​தி​யின் தீர்ப்பை எதிர்த்து வினேஷ் போகத் மேல்​முறை​யீடு செய்​தார்.

இந்த மனுவை நேற்று தலைமை நீதிபதி டி.கே.உ​பாத்​யாயா மற்​றும் நீதிபதி தேஜஸ் காரியா அடங்​கிய அமர்வு விசா​ரித்​தது. அப்​போது தனிப்​பட்ட மோதல்​கள் அல்​லது கருத்து வேறு​பாடு​கள் காரண​மாக சர்​வ​தேச வீராங்​க​னை​யின் விளை​யாட்டு வாழ்க்கை பாதிக்​கப்​படக் கூடாது என்​றும், சம்​மேளனம் பழி​வாங்​கும் நோக்​கில் செயல்​படு​வது போல் நடக்​கக் கூடாது என்​றும் நீதி​மன்​றம் எச்​சரித்​தது.

இந்​திய மல்​யுத்த சம்​மேளனத்​தின் தேர்​வுத் தகு​திக் கொள்​கை​யானது ‘முற்​றி​லும் பிற்​போக்​குத்​தன​மானது’ என்று குறிப்​பிட்ட நீதி​மன்​றம், இந்​தக் கொள்​கையை மாற்​றிய​போது மத்​திய அரசிடம் கலந்​தாலோ​சிக்​கப்​பட்​டு, அதன் ஒப்​புதல் பெறப்​பட்​டதா என்​றும் கேள்வி எழுப்​பியது.

2025-ம் ஆண்டு ஜூலை​யில் வினேஷ் போகத் தாயா​னார். இப்​போது நாம் மே மாதத்​தில் இருக்​கிறோம். அவர் சர்​வ​தேச அளவில் புகழ்​பெற்ற ஒரு மல்​யுத்த வீராங்​க​னை. அப்​படி​யிருக்க, நீங்​கள் அவருக்​காகவே இந்​தத் தேர்வு விதி​களையே மாற்​றினீர்​கள் என்று நாங்​கள் ஏன் கருதக் கூடாது? உங்​களுக்​குள் என்​ன​வித​மான மோதல்​களோ அல்​லது கருத்து வேறு​பாடு​களோ இருந்​தா​லும், அதற்​காக விளை​யாட்​டுத் துறை ஏன் பாதிக்​கப்பட வேண்​டும்? இந்த நாட்​டில் தாய்மை என்​பது போற்​றிக் கொண்​டாடப்​படு​கிறது, அது ஒரு நபருக்​குப் பாதிப்பை ஏற்​படுத்​து​வ​தாக அமைய​லா​மா?” என்​றும் நீதி​மன்​றம் கேள்வி எழுப்​பியது.

சுற்​றறிக்​கை​யில் செய்​யப்​பட்​டுள்ள மாற்​றமே எல்​லா​வற்​றை​யும் அப்​பட்​ட​மாக உணர்த்​துகிறது. இது போன்ற முறை​யில் மல்​யுத்த சம்​மேளனம் செயல்​படக்​கூ​டாது. இது விளை​யாட்​டுத் துறை​யின் நலனுக்கு உகந்​தது அல்ல. முந்​தைய சுற்​றறிக்​கையி​லிருந்து நீங்​கள் இந்த அளவுக்கு மாறி​யிருப்​பது, இதற்​குப் பின்​னால் உள்ள பல விஷ​யங்​களை மிகத் தெளி​வாகப் பேசுகிறது என்று நீதி​மன்​றம் குறிப்​பிட்​டது.

மேலும் வினேஷ் போகத்​தின் தற்​போதைய நிலையை மதிப்​பீடு செய்ய நிபுணர் குழுவை அமைக்​கு​மாறு மத்​திய அரசுக்கு நீதி​மன்​றம் வாய்​மொழி​யாக உத்​தர​விட்​டது.

மத்​திய அரசு தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர், வினேஷ் போகத் தேர்​வுப் போட்​டிகளில் வெற்றி பெற்​றால், அவர் ஆசிய விளை​யாட்​டுப் போட்​டிகளில் பங்​கேற்​ப​தற்கு வழி​வகுக்​கும் வகை​யில், தகுதி விதி​களில் தளர்​வு​களைக் கொண்டு வர இந்​திய விளை​யாட்டு ஆணை​யத்​தின் விதி​கள் அனு​ம​திக்​கின்​றன. தேர்​வுப் போட்​டிகள், இந்​திய மல்​யுத்த சம்​மேளனத்​தின் தொழில்​நுட்​பக் குழு​வின் மேற்​பார்​வை​யில் நடத்​தப்​படும் என்​றும் இது மத்​திய அரசு மற்​றும் இந்​திய ஒலிம்​பிக் சங்​கம் ஆகிய​வற்​றால் பரிந்​துரைக்​கப்​படும்​ சுயாதீன கண்​காணிப்​பாளர்​கள்​ முன்​னிலை​யில்​ நடை​பெறும்​ என்​றும்​, இந்​த ஒட்​டுமொத்​த செயல்​முறை​யும்​ முழுமை​யாக வீடியோ பதிவு செய்​யப்​படும்​ என்​றும் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT