வீராணம் ஏரி | கோப்புப்படம்

 
வாழ்வியல்

சென்னைக்கு குடிநீர் தரும் சோழர்கள் காலத்து ஏரிகள்

Guest Author

பேரரசன் ராஜராஜன் ஆட்சி செய்த காலம், கடந்த 2000 ஆண்டுகளில் தமிழக வரலாற்றில் மிகச்சிறந்த பொற்காலமாகும்.  மிகப் பெரிய பேரரசையும் பெரிய கோயிலையும் கட்டிக்காத்தவன் இராசராசன் ஆவான். அவன் மிகச் சிறந்த கோயிலைக் கட்டி அதன் வழி இசைக் கலை, நடனக் கலை, ஓவியக் கலை, சிற்பக் கலைகளை வளர்த்ததுடன், கப்பல் கலை, நீர் மேலாண்மை, உள்ளாட்சி, சமயம், இலக்கியம் முதலியவற்றை வளர்த்தவன் ராஜராஜன்.  நம் முன்னோரின் இக்கலைகளும் அறிவு நுட்பமும்தான் நம்மைக் காத்து வருகின்றன. 

இன்றும் சென்னையைக் காப்பது சோழரின் நீர் மேலாண்மை  என்றால் வியப்பாக இருக்கிறதல்லவா? கரிகாலன் கட்டிவைத்த கல்லணையும் , ராஜராஜன் கட்டி வைத்த பெரிய கோயிலும்  சோழர் காலத்து ஏரிகளும் உலக அதிசயங்களாக விளங்குவன. ராஜராஜன் உருவாக்கிய ஏரிகள் சோழ நாட்டில் மட்டுமல்லாமல் ஆந்திராவின் சித்தூர் வரை பரவி உள்ளன. 

சென்னையில் உள்ள புழல் ஏரி உள்ளிட்ட பல்லாயிரம் ஏரிகள், குளங்கள் ராஜராஜ சோழன் கட்டிக்காத்தவை.

ஏரியைக் காக்கும் நீர்குமிழித்தும்பு:

ஏரியில் நீர் அளக்கும், மணல் தேங்கி அவை மேடாகி விடாமல் துப்புரவு செய்யும் கருவியாக ‘நீர்க்குமிழித்தூம்பு’ அமைக்கும் அறிவியல் நுட்பம் அக்காலத்தில் இருந்தது.புதுக்கோட்டை அருகில் ஓர் ஊர் ஏரியில் குமிழித்தூம்பு அமைத்த ராஜராஜன், ‘இந்நீர் நிலையைக் காத்து இக்குமிழித் தூம்பைப் பாதுகாப்பவர்களை வணங்குகிறேன்’ என்று கல்வெட்டு அமைத்துள்ளான்.

சோழகங்கம் ஏரி:

ராஜராஜன் மகன் ராசேந்திரன் ‘சோழகங்கம்’ என்ற ஏரி வெட்டிய பின்னர்தான் கோயிலையும் கங்கைகொண்ட சோழபுரம் என்னும் தனக்கான தலைநகரத்தையும் அமைக்கிறான். சோழகங்கம் ஏரிதான் வீராணம் (வீரநாராயண) ஏரிக்கே தண்ணீர் தருகிறது, தந்தது.  இந்த வீரநாராயணம் ஏரி தான் சென்னைக்கும் தண்ணீர் தந்தது. இன்றைக்கும் செம்பரம்பாக்கம் ஏரி, புழல் ஏரி ஆகியன தண்ணீர் தருகின்றன. அவற்றையும் காயப்போட்டு வட பகுதிகளில் உள்ளவற்றையும், மேற்குப் பகுதிகளில் உள்ளவற்றையும் பிறமாநிலங்களிடம் கொடுத்துவிட்டுச் சென்னைக்குத் தண்ணீர் இல்லை, தமிழகத்துக்கு குடிக்கத் தண்ணீர் இல்லை என்றெல்லாம் விழுந்து கிடக்கிறோம். இங்கு மட்டும் இல்லை, தாய்லாந்திலும் தக்குவா பா என்ற இடத்தில் கோயிலும் வீரநாராயண ஏரியும் சோழன் அமைத்துள்ளான்

நீர் மேலாண்மையும் வேளாண்மை பாதுகாப்பும்: 

உழவர்களுக்கான உயர்வும் சோழர் காலத்தில் மட்டும் இல்லாமல்  சங்க காலத்திலும் இருந்துள்ளன. மூவேந்தர்க்கே பெண்தர மறுத்த உயர்ந்த குடிகளாக விளை நிலத் தலைவர்கள் விளங்கியுள்ளனர். வேளாண்மை செய்பவர்கள் ‘வேளார்’, ‘வேளிர் கிழார்’ என்று அழைக்கப் பெற்றனர். எனவே உலகுக்கே உயிரூட்டும் உணவூட்டும் நீர்நிலைகளையும் நிலங்களில் பாடுபடும் உழவர்களையும் அரசர்கள் மதித்தனர். அதனால் தான் ‘குடி உயர கோன் உயரும்’ என்றார் அவ்வையார்.  அதனால் தான் 'நீருயர நெல் உயர்ந்து’. 

அதாவது உணவு, பொருளாதார நிலை, மக்கள் வாழ்க்கை நிலை, நாகரிகம், வணிகம், பண்பாடு, அரசாட்சி, நீர்நிலை பெருக, ஏரி குளங்களை அமைத்துக் காக்கும் மக்கள்தான் அல்லது நாட்டினர்தான் உயர்ந்து சிறந்து வாழ்வார்கள் என புலவர் குடபுலவியனார் புறநானூற்றில் அறிவுறுத்தியுள்ளார். 

உயிருக்கு அடிப்படை உணவு என்பதால்,  உணவளிக்கும் பயிருக்கு அடிப்படையான தண்ணீரைச் சேமிக்க, பாதுகாக்க, பெருக்க வழிவகை செய்ய வேண்டும். இதனை மக்களும் அரசும் உணர்ந்து செய்ய வேண்டும்; இதற்கு இயற்கையும் உதவ வேண்டும். அதனால் தான் "கடவுள் வாழ்த்து" என்று பாடிய வள்ளுவர் அடுத்ததாக "வான்சிறப்பு" பாடியுள்ளார்.

மழைநீரைச் சேமித்தும், ஆறு, குளம், ஏரிகளைப் பாதுகாத்தும் நீர்வளம் பேண வேண்டும்.  இதனை உணர்ந்தே சோழர் காலத்தில் அரசின் ஓர் அங்கமாக ‘ஏரி வாரியம்’ என்ற அமைப்பைச் சிறப்புற நடத்தி வந்தனர். இது கலிங்கு வாரியம் என்றும் வழங்கும். தெலுங்குச் சோழர் கயபதி (கஜபதி) வழியினர் கலிங்கத்தில் (ஒரிசாவில் ) உள்ளனர்.  

சோழர் காலத்தில் எண்ணற்ற ஏரிகள், ஆறுகள், வாய்க்கால்கள், குளங்களின் பெயர்கள் சோழ அரசர்களின் பட்டப் பெயர்களாகவே அமைக்க பெற்றன. போரில் பெற்ற வெற்றியின் அடையாளமாக புதிய நீர்நிலைகளை உருவாக்கியிருக்கிறார்கள். சோழ அரசன் பாண்டியனுடைய முடியை வென்று வந்தான் என்பதன் அடையாளமாக முடிகொண்டான் ஆறு என்ற பெயர் ஏற்பட்டு இருக்க வேண்டும்.

தஞ்சாவூர் அருகில் உள்ள பல ஊர்ப் பெயர்கள் ஆற்றின் பெயராலும் அமைந்துள்ளன. தஞ்சாவூருக்கு பக்கத்தில் ஐந்து ஆறுகள் ஓடுகிற பகுதியில் உள்ள ஊர் ‘ஐயாறு’ என வழங்கப்பட்டு, பின்னர் திருவையாறு என்றாகியது. தஞ்சாவூர் என்ற ஒரு பெயரே சுற்றிலும் ஓடுகிற ஆறுகளில் வெள்ளம் வரும்போது மக்கள் சென்று தங்கி கொள்வதற்கு உரிய தஞ்சம் புகுவதற்காக உரிய மேடான பகுதி ( ஊர்) தான். தஞ்சம் + ஊர் = தஞ்சாவூர் என்றாகியுள்ளது.

அகன்ற காவிரியில் வெள்ளம் மிகுதியான வந்தபோதெல்லாம் உறையூர், குளித்தலை, கரூர் முதலிய தென்கிழக்குப் பகுதிகள் நீரில் முழ்குவது கண்டு அதிகமான வெள்ளத்தை ஏற்றுக் கொள்ளுவதற்காக, கிளை ஆறு போல் புதியதாக வெட்டிய ஆறான கொள்ளும் இடம், கொள்ளிடம் எனப் பெயர் பெற்றது . 

நீர்மேலாண்மை, இயற்கை அறிவு:

தமிழர்களின் நீர் மேலாண்மை சிந்து, குமரி நாகரிகக் காலத்திலிருந்து (ஏறத்தாழ கிமு 10,000 அளவில்) சிறப்புற வளர்ந்து வந்துள்ளது. இடைக்கால சோழர்களை அடியொற்றி பிற்கால பாண்டியர்களும் அடுத்து வந்த நாயக்கர்களும் நீர்நிலைகளை பாதுகாத்தனர்.  திருமலை நாயக்கரும், மதுரை மீனாட்சியும் மங்கம்மாளும் சாலை அமைத்தலும் ஏரிகள் குளம் வெட்டுவதிலும் ஆர்வமுடன் பங்காற்றியுள்ளனர். தஞ்சையிலும் பெரிய கோவிலைச் சார்ந்து சேவப்ப நாயக்கன் அமைத்த ஏரி (சேப்பனா வாரி) உள்ளது.

சோழருடைய நீர் மேலாண்மையை சித்தூர், நெல்லூர் என ஆந்திரா,  தெலங்கானா பகுதிகளிலும், மேற்கில் சிமோகா, மண்டயம் மாவட்டங்களிலும், துளுவம் கொங்கணம் இன்றைய கோவா வரை செல்லும் சாலையின் இரு பகுதிகளிலும் ஏரி அமைப்பில் அப்படியே காணலாம். சிக்மகளூரிலும்  நேப்பாளத்திலும் சோழ ஏரி என ஏரிகள் உள்ளன.

சங்க காலத்திலும், சோழர் காலத்திலும் பண்போடு மனிதத் தன்மையோடு நீரைப் பங்கிட்டு இருக்கிறார்கள். சோழர்காலக் கல்வெட்டு ஒன்று நதிநீர்ப் பங்கீடு எவ்வாறு செய்ய வேண்டும் என கூறுகிறது.  நதிநீர் உற்பத்தியாகி கீழ்நோக்கி செல்கிறபோது,  ஆற்றின் போக்கில், கீழே இருக்கும் கடை மடையில் உள்ள நிலங்களுக்கு  தேவையான நீரை அனுப்பிவிட்டு, மீதி நீரையே மேல்மடையில் உள்ளவர்கள் அடைத்து தேக்கி வைத்துக் கொள்ளலாம்;  கீழே உள்ளவர்களுக்கு கொடுக்காமல் தாமே தேக்கி வைத்துக் கொள்வதும், அடைத்து விடுவதும் தவறு என்பதைச் சோழர் கால கல்வெட்டு கூறுகிறது.

நன்கு நீர் நிலைகளைப் பாதுகாத்துக் கரைகளை உயர்த்திக் கட்டி, கரிகாலன் காவிரி ஆற்றைப் பாதுகாத்துத் தந்துள்ளான்.   சென்னைக்கு ஆந்திரத்துக்கும் தண்ணீர் கொடுத்த சோழகங்கம் ஏரி (கங்கை கொண்ட சோழபுரம் அருகில் உள்ள ஏரி ) அதன் உள்ளே, குறுக்கு சாலை இடப்பட்டு இன்று சுருங்கிக் கிடக்கிறது. 

சோழர்கள் உருவாக்கிய வீராணம் (வீரநாராயணன் ஏரி ) புழல், செம்பரம்பாக்கம் (செம்பியன் பாக்கம்) ஏரிகள் சென்னைக்கு நீர் தருகின்றன. செம்பியன் மாதேவி அமைத்ததே  செம்பரம்பாக்கம் ஏரி. செய்யாறு என்பதன் பெயர் சேயாறு; ஆம், சேய் என்பது சேயோள் ஆகிய செம்பியன் மாதேவியைக் குறிக்கும்.

சென்னை நகரத்துக்கு உள்ளே மட்டுமே நூற்றுக் கணக்கான ஏரிகள் இருந்துள்ளன. ‘குறட்டூர்’ என்னும் ‘கொரட்டூரில்’ மட்டுமே 300 ஏரிகள் இருந்ததாக கூறுவதுண்டு.  அடையாறு என்பது  இயற்கையான ஆறு இல்லை. மழைக்காலத்தில் மிகுதியான நீர் வெள்ளமாக வந்தது கொள்ளும் இடம் கொள்ளிடம் ஆக உருவாகியது போல செம்பரம்பாக்கம் ஏரியின் வெள்ள நீர் மிகுதி அடையும் ஆறு தான் அடையாறு ஆனது.

குளம், குட்டை, தாங்கல், ஏரி, ஆறு, கூவல், கடல், சமுத்திரம், ஓடை என முடியும் ஊர்ப் பெயர்கள், புதிதாக உருவாக்கப்பட்ட நீர்நிலைகளைச் சார்ந்த ஊர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. இவ்வளவு சிறப்பாக நீர்நிலையை நீர் மேலாண்மையை கைக் கொண்டு இருந்த சோழர்களைப் போல மிகச்சிறந்த ஆளுமை மிக்கவர்கள் உலகில் வேறு எங்கும் இல்லை. 

யூப்ரடீஸ், கங்கை, யமுனை நதிக்கரைகளில் நாகரிகங்கள் வளர்ந்திருந்தன. ஆனால் காவிரி, தென்பெண்ணை, பாலாறு, வைகை, பொருநை, வேம்பாறு என இயற்கையோடு இயைந்த ஆறுகளை உயர்த்தி கரைகட்டி காத்து தேக்கி குளந் தொட்டு நிலங் கீறி, நாகரிகம் பண்பாடு வளர்த்தெடுத்தவர்கள் தமிழர்கள்.

குமரி முதல் இமயம் வரை  நீர்மேலாண்மை புரிந்து, நேப்பாளத்திலும், தாய்லாந்திலும் பிலிப்பைன்சிலும் சோழர் பெயரில் ஏரிகள் உருவாக்கி,  இந்தியா எனும் நாவலந்தீவில் கிழக்கு கரையையே சோழ ஏரி (Chola Lake) என்றும், சோழ மண்டலக் / கோரமண்டல்  (Chora mandal Shore) கடற்கரை  என்றும் பெயர் வழங்கச் செய்தவர்கள் சோழர்கள்.

சென்ன கேசவ பெருமாள் என்னும் இறைவன் பெயரில் தனது பெயரைக் கொண்டு, சென்னப்ப நாயக்கன் என்பவன் ஆண்டு வந்த பகுதி சென்னபட்டணம் எனப்பட்டது. இறைவன் பெயரான சென்ன கேசவர் என்பது சென்னி கேசவர் ஆகும்.  சென்னி என்பது சோழனைக் குறிக்கும்.

ஆகவே தமிழகத்தின் தலையாக, சென்னி ஆக விளங்குகிற சென்னைக்கு இராஜராஜனும் அவன் வழிவந்த சோழர்களும்   உருவாக்கிய ஏரி வாரியமே நீர் வழங்கி வருகிறது.

சோழர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்படுத்திய செம்பரம்பாக்கம் ஏரியையும் அதற்கு நீர் கொடுக்கும் வீராணம் ஏரியையும் அதற்கு நீர் கொடுக்கும் தலைமை ஏரியாக விளங்கிய கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பொன்னேரி என்னும் சோழகங்கம் ஏரியையும் சிறப்புறப் பாதுகாத்து தூர்வாரி கரையேற்றி இணைத்து நீர்வளம் காப்போம்.

ஆயிரம் ஆண்டு முற்பட்ட சோழன் இராஜராஜன் ஆளுமையும் நீர் மேலாண்மையும் என்றும் சென்னைக்கு நீர் அளிக்கும் உயர்வு உள்ளதாக விளங்குகிறது என்பதை உணர்வோம்.

கட்டுரை: முனைவர் பா.இறையரசன்

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT