வாழ்வியல்

சென்னை தி.நகர் பாண்டி பஜாரில் தினமும் மதியம் 12 மணிக்கு இலவச உணவு

தொண்டு நிறுவனத்தின் ‘அக்‌ஷயம் 365’ திட்டம் அறிமுகம்

செய்திப்பிரிவு

சென்னை: ‘பசியை ஒழிக்கும் ஒரு படி’ என்ற இலக்குடன் முத்ரா அவுட் ஆஃப் ஹோம் என்ற தொண்டு நிறுவனம் ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை டவர்ஸுடன் இணைந்து ‘அக்ஷயம் 365’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

பட்டினியை முற்றிலுமாக விரட்டுவது இந்த திட்டத்தின் தலையாய நோக்கம் ஆகும். இந்த திட்டத்தின்படி, அடுத்த 365 நாட்களுக்கு தேவைப்படுபவர்களுக்கு உணவு சென்றடைவது உறுதி செய்யப்படும்.

இந்த புதுமையான திட்டத்தை செயல்படுத்த வசதியாக தி.நகர் பாண்டி பஜார் காவல் நிலையத்துக்கு அருகே சென்னை மாநகராட்சி இடம் ஒதுக்கியுள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள ஸ்டாலில் தினமும் மதியம் 12 மணிக்கு உணவு வழங்கப்படும் என முத்ரா தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக முத்ரா தொண்டு நிறுவன நிர்வாகிகளிடம் கேட்ட போது, “சென்னை டவர்ஸுடன் இணைந்து உணவு வழங்கும் திட்டம் கடந்த 4-ம் தேதி தொடங்கப்பட்டது.

தினமும் 100 பேருக்கு வெஜிடபிள் பிரியாணி, சாம்பார் சாதம், லெமன் சாதம் போன்றவை வழங்கப்படுகிறது. இந்த உணவுகளை கேட்டரிங் சர்வீஸில் பணம் செலுத்தி பெறுகிறோம். இதேபோல், சென்னையில் மேலும் 4 இடங் களில் மதிய உணவு வழங்க திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

இந்த திட்டம் குறித்து ரோட்டரி நிர்வாகி அனந்த் கிருஷ்ணன் கூறும்போது, “தற்போது தினமும் 100 பேருக்கு இலவச உணவை வழங்கி வருகிறோம். மதியம் 12 மணியில் தொடங்கி அடுத்த அரை மணி நேரத்துக்குள்ளாகவே அனைவரும் உணவை வாங்கிச் செல்கிறார்கள்.

அடுத்தகட்டமாக 250 பேருக்கு உணவு வழங்கலாம் என திட்டமிட்டுள்ளோம். தற்போது 365 நாட்கள் செயல் படுத்தப்பட உள்ள இந்த இலவச மதிய உணவு திட்டம் தேவைப்பட்டால், தொடர்ந்து நீட்டிக்கப்படும். பசியோடு இருப்பவர்கள் உணவு வாங்கி சாப்பிடும்போது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியும், மனநிறைவும் ஏற்படு கிறது” என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT