புதுடெல்லி: பழைய நினைவுகளை மீட்டெடுக்க, 50 ஆண்டுகளுக்குப் பிறகு கல்வி நிலையத்துக்கு சீருடையில் வந்து அனைவரையும் முன்னாள் மாணவர்கள் நெகிழ வைத்தனர்.
இன்ஸ்டாகிராம் சமூக வலைதளப் பக்கத்தில் ராகேஷ் நாகர் என்ற பெயரைக் கொண்ட பதிவர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் நாங்கள் படித்த பள்ளிக்கு 50 ஆண்டுகளுக்குப் பிறகு சென்று பழைய நினைவுகளை மீட்டெடுத்தோம் என்று தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவில் தோன்றும் அனைவரும் சுமார் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக உள்ளனர். அதில் உள்ளவர்கள் பள்ளிச் சீருடையில் வந்துள்ளனர். மேலும் தோளில் தண்ணீர் பாட்டில், முதுகில் அணியும் புத்தகப் பைகளுடன் உற்சாகமாக பள்ளிக்கு வருகின்றனர்.
பள்ளி வகுப்பறையில் அமர்ந்து பாடம் படிப்பது போலவும், மைதானத்தில் கில்லி-தாண்டு விளையாடுவது, ஒருவரின் சட்டையின் பின்பகுதியைப் பிடித்துக் கொண்டு ரயில் வண்டி போல செல்வது, 7 கல் விளையாட்டு விளையாடுவது என பள்ளிபருவத்தில் செய்த அனைத்து சேட்டைகளையும் அவர்கள் செய்கின்றனர்.
தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அனைவரும் இந்த வீடியோவைப் பார்த்து தங்களை தங்கள் பள்ளிகளுடன் தொடர்புபடுத்திக் கொண்டு நினைவுகளை பகிர்ந்து கொள்கின்றனர். இவர்கள் அனைவரும் அந்தப் பள்ளியில் 1976-ம் ஆண்டு படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இவர்கள் யார், எந்த நகரைச் சேர்ந்தவர்கள், எந்தப் பள்ளி, நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர் யார் என்ற விவரம் வீடியோவில் குறிப்பிடப்படவில்லை.