வாழ்வியல்

கர்நாடகா, தமிழகத்தின் ‘மெனோபாஸ்’ பாலிஸிகள் ஏன் மிக முக்கியமானவை? - ஒரு பார்வை

பாரதி ஆனந்த்

இந்தியாவில் வெகுகாலமாகவே மகளிர் சுகாதாரக் கொள்கைகள் பெரும்பாலும் அவர்களின் கர்ப்பக் காலம், குழந்தை வளர்ப்பு சார்ந்து தாய் - சேய் நலத் திட்டங்களாகத்தான் உருவாக்கப்பட்டு, அமல்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. அதன்பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக மாதவிடாய் சுகாதாரம் முன்னிறுத்தப்பட்டது. சேனிடரி நாப்கின் பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு தொடங்கி, அவற்றை சூழல்நட்பு முறையில் அப்புறப்படுத்துவது போன்ற விழிப்புணர்வுகளும், அது சார்ந்த அரசு கொள்கைகளும் வந்தன. பள்ளிகளில் பூப்பெய்தும் வயதில் உள்ள குழந்தைகளுக்கு ‘முதல் மாதவிடாயை’ எப்படி எதிர்கொள்வது என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இப்படியாக இனப்பெருக்க வயதில் உள்ள பெண்களின் சுகாதாரத்துக்கே பெருமளவில் அக்கறை செலுத்தப்பட்ட நிலையில், இந்தியாவில் முதன்முறையாக கர்நாடக அரசு, மாதவிடாய் முற்றுப் பருவம் (மெனோபாஸ்) மற்றும் மாதவிடாய் நிற்பதற்கு முந்தைய பருவம் (பெரி மெனோபாஸ்) நிலைகளில் உள்ள பெண்களுக்காக ‘ருது தாரே’ (Ruthu Thare) என்ற புதிய மகளிர் சுகாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆக.4-ம் தேதி கர்நாடகா சுகாதார அமைச்சர் ‘ருது தாரே’ திட்டத்தை அறிவித்து, அதற்கு விளம்பர தூதராக காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ரம்யா நியமிக்கப்படுவதாகக் கூறினார். அந்த வகையில் தேசிய அளவில் மெனோபாஸ் கொள்கையை வெளியிட்டது முதல் அரசு கர்நாடக அரசு.

மேலும், அடுத்த 6 மாதங்களுக்கு ‘ஆஷா’ (ASHA) பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று மகளிர் சுதாராம் குறித்து தகவல்களை திரட்டுவர், பெரி மெனோபாஸ், போஸ்ட் மெனோபாஸ் பற்றி பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள்.

ஆரம்ப நிலை சிகிச்சை தேவைப்படுவோரை கண்டறிந்து விவரம் சேகரிப்பர். கூடவே, வாழ்வியல், ஊட்டச்சத்து, தூக்க சுழற்சி, சுய பேணுதல் உள்ளடக்கி வயோதிகத்தை ஆரோக்கியமாக அரவணைப்பதைப் பற்றி பிரச்சாரம் செய்வார்கள் என்று கர்நாடக சுகாதார அமைச்சர் காதர் கூறினார். இதற்காக மகப்பேறு, மகளிர் நல மருத்துவர் ஜோத்ஸனா மிர்லே தலைமையில் குழு அமைக்கப்பட்டு திட்டத்தை செயல்படுத்துவதற்கான அறிவியல்பூர்வ பரிந்துரைகள் பெறப்பட்டு செயல்படுத்தப்படும் என்றார்.

அதனைத் தொடர்ந்து, ஆக.17-ம் தேதியன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது பேசிய அமைச்சர் அருண்ராஜ், “காசநோய், எய்ட்ஸ், மற்றும் கண் குறைபாடுகளுக்கு தனித்தனிப் பொதுச் சுகாதாரத் திட்டங்கள் இருப்பது போல, மெனோபாஸ் நிலையை எட்டும் பெண்களின் பிரத்யேகத் தேவைகளுக்கான அர்ப்பணிக்கப்பட்ட கட்டமைப்பு அரசு மருத்துவமனைகளில் தனியாக இல்லை. இதனைச் சரி செய்ய மாதவிடாய் முற்றுப் பருவ அக்கறை சார்ந்த கொள்கை (Peri-Menopausal Care Policy) கொள்கை அவசியம் என அரசு கருதுகிறது” என்றார்.

உலக சுகாதார நிறுவனமானது ஒரு பெண்ணின் மெனோபாஸ் சராசரி வயதை 45 - 55 வயது வரை என நிர்ணயித்துள்ளது. அதை 40 வயதுக்கு முன்னரே ஒரு பெண் எட்டினால் ப்ரீமெச்சூர் மெனோபாஸ் என்றும், 40-ல் இருந்து 45-க்குள் என்றால் அதை ஏர்லி மெனோபாஸ் என்றும், 45 வயது முதல் 55 வயதில் எட்டுவதை இயற்கையான, சரியான மெனோபாஸ் என்று வகை பிரித்துள்ளது. இந்தியப் பெண்களின் மெனோபாஸ் சராசரி 46 வயதாக உள்ளது. இது முன்கூட்டிய மாதவிடாய் முற்றுப் பருவத்தில் அடங்கும்.

இந்தச் சூழலில், மெனோபாஸ், பெரி மெனோபாஸ் நிலைகளில் உள்ள பெண்களுக்கான கர்நாடக அரசின் ‘ருது தாரே’ (Ruthu Thare) மகளிர் சுகாதாரக் கொள்கை ஒரு முன்மாதிரிக் கொள்கை, காலத்தின் அவசியம் என்று வரவேற்கின்றனர் நிபுணர்கள்.

பெண்கள் நல செயற்பாட்டாளர்களோ, பெண் என்றாலே அவளை தாய்மைக்குள் சுருக்கி அது சார்ந்த சுகாதார திட்டங்களையே அறிவிப்பதில் இருந்து விலகி 40+ வயதில் உள்ள பெண்களின் உடல்நலனில் அக்கறை செலுத்தும் இத்திட்டம் பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய வீச்சு என்கின்றனர். அதே வேளையில் இத்திட்டத்தை உரிய கள ஆய்வுப் பணிகள் இன்றி திறம்பட செய்துவிட முடியாது என்றும் ஆலோசனை கூறுகின்றனர்.

பெண்கள் தங்களது வாழ்நாளில் மூன்றில் ஒரு பகுதியை மாதவிடாய் நின்ற பின்னுள்ள காலகட்டத்திலேயே கழிக்கின்றனர். இருப்பினும், அந்த காலத்திற்கான திட்டங்கள் குறித்து தேசிய, மாநில அளவில் இதுவரை இருந்ததில்லை. இப்போதுதான் வெளிச்சம் பிறந்துள்ளது.

கர்நாடக, தமிழக அரசுகளின் இந்த முன்னெடுப்பு குறித்து, “இந்தியாவில் இதுவரை பெண்கள் தொடர்பான ஒவ்வொரு திட்டமும் பொது சுகாதாரக் கொள்கைக்குள்ளேயே இருந்து வந்தது, அதனால் பெண்களின் ஆரோக்கியத்திற்கு கிடைக்க வேண்டிய முன்னுரிமை சரிவர கிடைத்ததில்லை. மாதவிடாய் பற்றிய பேச்சுக்கள் எப்படி வெளியில் பேசக்கூடாத விஷயமாக இருந்ததோ அப்படித்தான் மெனோபாஸ் வேதனைகள் என்பது ஒரு பெண் மவுனமாக கடக்க வேண்டிய உடல் உபாதையாக இருந்து வருகிறது. உலக சராசரியான 51 வயதை விட 5 ஆண்டுகள் முன்னதாக இந்தியப் பெண்கள் மாதவிடாயை எட்டுகின்றனர்.

பெரி மெனோபாஸ், மெனோபாஸ் அறிகுறிகளை வெறும் வயதாவதால் ஏற்படும் அறிகுறி என்றளவிலேயே பெரும்பாலான பெண்கள் நினைக்கின்றனர். ஹாட் ஃப்ளாஷ்களை நிர்வகிப்பதிலும், தூக்கமின்மை, முட்டு வலியை கையாள்வதிலும், மனநிலை மாற்றங்களை எதிர்கொள்வதிலும் சிக்கல்களை தனியாக அனுபவிக்கின்றனர். இவையெல்லாம் ஹார்மோன் மாற்றங்களால் நிகழும் உபாதைகள் அதை உரிய மருத்துவ ஆலோசனைகள் மூலம் கடந்துவிடலாம் எனத் தெரியாமல் இருக்கின்றனர்.

மெனோபாஸ், பெரி மெனோபாஸ் பரிசோதனைகள், மார்பக மற்றும் எலும்பு ஆரோக்கிய பரிசோதனைகள், ஊட்டச்சத்து ஆலோசனை, பெண்களுக்காகவே பிரத்யேகமாக மிட்லைஃப் கிளினிக்குகள் உருவாக வேண்டும். அதற்கு அரசு இது போன்ற பொது சுகாதார் கொள்கைகளை முன்னெடுப்பதே சரியான பாதை” என்பது பொது சுகாதார நிபுணர்கள் தரப்பினரின் பார்வையாக உள்ளது.

அதேவேளையில், சமூக ஆர்வலர்கள் சிலர் “மகளிர் சுகாதாரத்தில் இதுவரை கண்டு கொள்ளப்படாத இந்தப் பிரச்சினைக்கு என பிரத்யேகமாக அரசுகள் கொள்கைகளை வகுப்பது, பெண் சுதந்திரத்தின் மகுடம். வரவேற்புக்குரியது.

ஆனால், மெனோபாஸ் விழிப்புணர்வு முகாம்கள், டயட், உடற்பயிற்சி, மெனோபாஸ் காலத்துக்கான ஊட்டச்சத்து பானங்கள், கம்மி (Gummies), ஏன் ஆடைகள் என்றெல்லாம் வணிக ரீதியாக பல முகங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன.

குழந்தையின்மைக்கு நிவாரணியாக உருவான கருத்தரிப்பு மையங்களில் ஒரு சில வணிக ரீதியில் செயல்படுவதும், இன்னும் சில மையங்கள் கருமுட்டை, விந்தணுவுக்காக ஏழை, எளிய இளைஞர்கள், இளம் பெண்கள், சிறுமிகளை சுரண்டுவதும் செய்திகளாக வருகின்றன.

இதுபோன்ற சூழலில் பெண்களுக்கான மிட்லைஃப் கிளினிக்குகள், வியாபார வணிகக் கூடங்களாக மாறிவிடக் கூடாது. மத்திய, மாநில அரசுகள் கொள்கைகளை வகுப்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல் சில வழிகாட்டுதல், நெறிமுறைகளையும் வெளியிடுவது கூடுதல் சிறப்பானதாக அமையும். கர்நாடக அரசு ஆஷா பணியாளர்கள் மூலம் புள்ளிவிவரங்கள் திரட்டுவது, விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகக் கூறியுள்ளது. அதன் நீட்சியாக அரசு மருத்துவமனைகளிலேயே பிரத்யேகமாக மிட் லைஃப் சிகிச்சை, ஆலோசனைப் பிரிவுகளை உருவாக்கலாம்” என்று யோசனை சொல்கின்றனர்.

பெண் மருத்துவர்கள் வட்டத்திலும், மெனோபாஸ் கேர் திட்டத்துக்கு பூரண வரவேற்பு கிடைத்துள்ளது. அதற்கான சில காரணங்களையும் சுட்டிக் காட்டி அவர்கள் விளக்குகின்றனர்.

பெண் மருத்துவர்கள் தரப்பு, “சமூகப் பொருளாதார ரீதியாக பின்தங்கிய ஒரு பிஹார் மாவட்டத்தில் பெண்கள் பலர் 30 வயதுகளிலேயே மெனோபாஸ் பருவத்தை எட்டுகின்றனர். இது இயற்கையாக நிகழவில்லை. மாதவிடாய் கால உதிரப்போக்கு அதிகமாக இருத்தல், மாதவிடாய் சுழற்சி சீராக இல்லாததால் ஏற்படும் உபாதைகளில் இருந்து தப்பிக்க பெண்கள் பலரும் ஹிஸ்டரக்டமி என்ற கருப்பை அறுவை சிகிச்சையை செய்து கொள்கின்றனர். அரசு இன்சூரன்ஸில் இந்த சிகிச்சை செய்து கொள்ள முடிவதால் மாதவிடாய் சுழற்சி வராமல் இருப்பது விடுதலை என நினைத்து கர்ப்பப்பை அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர். அவ்வாறு செய்து கொள்ளும் பெண்கள் பலருக்கும் ஓவரி - சினைப் பைகளும் அப்புறப்படுத்தப்பட்டு விடுகின்றன.

மாதவிடாய் 40 வயதுக்கு முன்னதாக நிற்குமேயானால், அது இதய நோய்கள், ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis) என்ற எலும்புப்புரை நோய், நினைவாற்றல் பிரச்சினைகள், மனநிலை கோளாறுகள் ஆகியனவற்றை ஏற்படுத்தும். கர்ப்பப்பை, சினைப்பை அகற்றத்தால் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்கள் சுரப்பு தடைபடுவதே இதற்குக் காரணம்.

எனவே, ஒரு பெண்ணுக்கு மெனோபாஸ் இயற்கையாக நடைபெற வேண்டும். அதற்கு பெண்களை உடலளவில், மனதளவில் தயார் படுத்த வேண்டும். ஒரு பெண்ணின் மெனோபாஸ் பருவ உடல் பிரச்சினைகளைக் களைய அரசு கொள்கை வகுக்கிறது என்றால் அரசு அனைவரையும் உள்ளடக்கிய பொது சுகாதாரக் கொள்கையை நோக்கி முன்னேறுகிறது என்றே அர்த்தம்,” என்று கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT