நம்மாழ்வார் விருது பெற்ற விவசாயி அ.சுப்பிரமணியன்.
புதுக்கோட்டை: உயிர்ம வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையிலும், வேளாண்மையில் நம்மாழ்வாரின் பங்களிப்பைச் சிறப்பிக்கும் வகையிலும் சிறந்த விவசாயிகளுக்கு அவரது பெயரில் ஆண்டுதோறும் விருதுகள் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில், 2025-26-ம் ஆண்டுக்கான விருதுபெற்ற புதுக்கோட்டை அ.சுப்பிரமணியன், நாமக்கல் செ.நல்லசிவம் மற்றும் செங்கல்பட்டு சாதனா ஆகிய 3 பேருக்கும், தலா ரூ.2 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழைச் சென்னையில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் விஜய் நேற்று முன்தினம் வழங்கி, பாராட்டினார்.
இந்நிலையில், நம்மாழ்வார் விருது பெற்ற புதுக்கோட்டை அருகே கத்தக்குறிச்சி ஊராட்சி நம்புகுழி கிராமத்தைச் சேர்ந்த உயிர்ம வேளாண் விவசாயி அ.சுப்பிரமணியன், 'இந்து தமிழ் திசை' நாளிதழிடம் கூறியது:
15 ஏக்கரில் பாரம்பரிய நெல் ரகங்களைக் கடந்த கால் நூற்றாண்டாக சாகுபடி செய்து வருகிறேன். உயிர்ம வேளாண்மை விவசாயி என்பதற்கான அரசுச் சான்றிதழும் பெற்றுள்ளேன். ஆண்டுக்கு 2 போகம் விவசாயம் செய்யப்படுகிறது. ரசாயன உரங்களையோ, மருந்துகளையோ பயன்படுத்துவதில்லை.
இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்துகிறேன். தேவையான விதைநெல் இருப்பு உள்ளது. தேவைப்பட்டால் மற்றவர்களிடம் இருந்தும் வாங்கிப் பயன்படுத்துகிறேன். அவ்வப்போது கடலை, எள், உளுந்து ஆகியவற்றை உயிர்ம வேளாண்மை முறையிலேயே சாகுபடி செய்கிறேன். வீட்டுக்கு தேவைக்கு ஏற்ப கத்திரி, மிளகாய், வெண்டையும் சாகுபடி செய்துள்ளேன். மீன் குட்டை அமைத்து மீன் வளர்க்கப்படுகிறது. உயிர்ம வேளாண்மை நிலத்தில் விளையும் நெல் மணிகளின் அளவு குறைவு என்றாலும், கூடுதல் விலைக்கு விற்பனையாகிறது.
ஆண்டு முழுவதும் பாரம்பரிய ரக அரிசியையே வீட்டில் பயன்படுத்தி வருவதால், எந்தவித உடல்நலப் பாதிப்பும் இன்றி ஆரோக்கியமாக இருக்கிறோம். உயிர்ம வேளாண்மையில் விளைவிக்கப்படும் அரிசியை மருந்தாகப் பாவித்து உணவாக்கும் காலமாக இது மாறியுள்ளது. இயற்கை விவசாயத்துக்குத் தேவையான இடுபொருட்கள் தாராளமாகக் கிடைக்கும் வகையில் 50 நாட்டு மாடுகள் மற்றும் கோழிகளை வளர்த்து வருகிறேன்.
மேலும், தென்னந்தோப்பும் உள்ளது. தென்னை மட்டைகளைத் தூளாக்கி இயற்கை உரம் தயாரித்து வயல்களுக்கும், தென்னை மரங்களுக்கும் இட்டு வருகிறேன். ஆண்டுக்கு 1 லட்சம் தேங்காய்கள் அறுவடை செய்யப்படுகின்றன.
தென்னை மரங்களுடன் தோப்பில் ரோஸ்வுட், தேக்கு உள்ளிட்ட மரங்களும், கரிமுண்டா எனும் மிளகு ரகமும் இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. எனது மூதாதையர்கள் உயிர்ம வேளாண்மை முறையில்தான் விவசாயம் செய்து வந்தார்கள். இடைப்பட்ட காலத்தில் ரசாயன முறைக்கு மாறியது. தற்போது திரும்பிய பக்கமெல்லாம் மருத்துவமனைகளும், செயற்கை கருவூட்டல் மையங்களும் புற்றீசல்போல பெருகி வருகின்றன.
புதுக்கோட்டை அருகே கத்தக்குறிச்சி ஊராட்சி நம்புகுழி கிராமத்தில் அ.சுப்பிரமணியன் பராமரித்து வரும் நாட்டு மாடுகள்.
மக்களும் தங்கள் சம்பாத்தியத்தில் பெரும்பகுதியை மருத்துவத்துக்கே செலவழிக்க வேண்டியுள்ளது. எனவே, மக்கள் படிப்படியாக உயிர்ம வேளாண்மைக்கு மாற வேண்டும். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். விருது வழங்கிய தமிழக அரசுக்கும், வேளாண் துறை அலுவலர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.