தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே நடைபெற்ற கிடா முட்டு சண்டையில் 30 ஜோடிகள் பங்கேற்றன.
தேவகோட்டை அருகே திட்டுக்கோட்டை - உறுதிகோட்டை கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவைவையொட்டி கிடா முட்டு சண்டை போட்டி நடத்த முடிவு செய்தனர். இதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்தது.
இதையடுத்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்து, நிபந்தனைகளுடன் அனுமதி பெற்று கிடா முட்டு சண்டை போட்டியை இன்று நடத்தினர். சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, தேனி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 30 ஜோடி கிடாகள் பங்கேற்றன.
இந்தப் போட்டியில் களத்தில் இறங்கும் இரு கிடாகளும் 60 முறை முட்ட வேண்டும். எந்த கிடா முட்டாமல் திடலை விட்டு வெளியே செல்கிறதோ, அது தோற்றதாக அறிவிக்கப்படும். மேலும் இரு கிடாகளும் 60 முறை முட்டிவிட்டால் இரண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் என்ற நிபந்தனையுடன் போட்டி நடைபெற்றது.
இதில் வெற்றி பெற்ற கிடாகளின் உரிமையாளர்களுக்கு பீரோ, அண்டா, பதக்கம், கேடயம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த போட்டியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.