கோவை: மஞ்சள் இலையிலிருந்து பெறப்படும் இயற்கை சாயத்தை பயன்படுத்தி ஜவுளிகளுக்கு சாயமிடுவதற்கான காப்புரிமை கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்புத் துறை உதவிப் பேராசிரியர் கே.அமுதாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பல்கலைக்கழகத்தின் அறிவுசார் காப்புரிமை மைய இயக்குநர் பரிமேலழகன் கூறியதாவது: மனித நாகரீகம் தோன்றிய காலத்திலிருந்தே இயற்கை சாயங்கள் மனிதனால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. செயற்கை சாயங்கள் தொழில்துறையை ஆக்கிரமித்துள்ளன. இயற்கை சாயங்கள் உலகின் சில பகுதிகளில் ஒரு சிலரால் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.
இயற்கை சாயங்கள் குறித்த ஆராய்ச்சி உலகம் முழுவதும் விரிவாக மேற்கொள்ளப்பட்டாலும், அரிதாகவே காப்புரிமை மற்றும் வணிக மயமாக்கப்படுகிறது. மனிதர்கள், நீர்வாழ் உயிரினங்கள், சுற்றுச்சூழலுக்கு செயற்கை சாயங்கள் கேடு விளைவிக்கின்றன. இதற்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த இயற்கை சாயங்கள் உள்ளன.
தற்போதைய கண்டுபிடிப்பு, வேளாண் கழிவாகும் மஞ்சள் தாவரத்தின் இலைகளில் இருந்து இயற்கை சாயத்தை பெறுவது தொடர்பானது. மஞ்சள் கிழங்கு அறுவடைக்குப் பிறகு, பொருளாதார ரீதியாக மதிப்பு இல்லாததால், இலைகள் கழிவுகளாக அப்புறப்படுத்தப்படுகின்றன.
சில விவசாயிகள் இந்த இலைகளை எரிக்கின்றனர். இதனால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. இந்நிலையில், இயற்கை சாயத்தை பிரித்தெடுப்பதற்கான ஆதாரமாக மஞ்சள் இலைகளை பயன்படுத்தும்போது, அவற்றுக்கு பொருளாதார ரீதியாக மதிப்பு கிடைக்கும். மேலும், இயற்கை சாயத்தை பிரித்தெடுப்பதற்கான மலிவான ஆதாரமாகவும் அது இருக்கும்.
சுற்றுச்சூழலுக்கு உகந்தது: மார்டன்ட் (சாயத்தை துணியுடன் இணைக்கும் பொருள்) உதவியின்றி பட்டுத் துணிகளில் இயற்கை சாயம் பொருந்திக்கொள்ளும். இயற்கை சாயக் கழிவுநீர் அபாயகரமானது அல்ல.
இதனை சுத்திகரித்து, தண்ணீரை மீண்டும் பயன்படுத்த முடியும். சாயமிடுவதற்கான முழு செயலையும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை கொண்டு மட்டுமே மேற்கொள்ள முடியும். இதே காட்டன் துணிகளுக்கு சாயமிட வேண்டுமெனில் ஏதாவது ஒரு மார்டன்ட் உதவி தேவைப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.