வாலாஜாபாத் அருகே உள்ள வடக்குப்பட்டு பகுதியில் 2-ம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகளை தொடங்கிய தொல்லியல் துறையினர். 
வாழ்வியல்

காஞ்சிபுரம் மாவட்டம் வடக்குப்பட்டு பகுதியில் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி தொடக்கம்

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் வடக்குப் பட்டு பகுதியில் இரண்டாம் கட்டஅகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கின. முதல் கட்ட அகழ்வாய்வில் கற்கால கருவிகளை தயார் செய்யும் இடமாக இப்பகுதி இருந்திருக்கலாம் என்பதற்கான சில சாத்தியக் கூறுகளுடன் கூடிய பொருட்கள் கிடைத்தன. இதனை உறுதி படுத்துவதற்காக தற்போது 2-ம் கட்ட ஆய்வு தொடங்கிஉள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரகடம் அடுத்துள்ள வடக்குப்பட்டு ஊராட்சியில் சென்னை தொல்லியல் துறை கண்காணிப்பாளர் காளிமுத்து தலைமையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரை அகழாய்வு பணிகள் நடந்தன. மூன்று மாதங்கள் நடந்த இந்த முதல்கட்ட தொல்லியல் ஆய்வில் தங்க அணிகலன்கள் உள்ளிட்ட பழங்கால வரலாறுகளை தெரிந்து கொள்ள உதவும் பல்வேறு தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் கிடைத்தன.

தொடர்ந்து நடந்த முதல் கட்ட ஆய்வில் பழங்கால கட்டிட அமைப்பு ஒன்று இருந்தது தெரியவந்தது. கற்களை பயன்படுத்தி இந்தக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடம் பல்லவர் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று கருதுகின்றனர். இதனை சுற்றி தோண்டியபோது பழங்கால கல் மணிகள், கண்ணாடி மணி, எலும்பு, செப்பு காசு, பானையோடுகள், கண்ணாடிப் பொருட்கள் உள்ளிட்டவை கண்டெடுக்கப் பட்டன.

இதனைத் தொடர்ந்து அகழ்வாய்வு பணிகளை தொடர்ந்து மேற்கொண்டபோது, ரோமானிய நாட்டில் தயாரிக்கப்பட்ட பானை ஓடுகளான ஆம்போரா ஓடுகள், ரவுலட் ஓடுகள், கருப்பு மற்றும் சிவப்பு நிற பானை ஓடுகள், வண்ணம் பூசிய பானை ஓடுகள் உட்பட பல்வேறு பொருட்கள் கிடைத்தன. மேலும் 0.8 கிராம் எடையுள்ள தங்க அணிகலன்கள் இரண்டும் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து முதல்கட்ட அகழாய்வில் கிடைந்த பொருட்களை வகைப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

மேலும் சிறிய இடத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் சுமார் 1000 முதல் 1200 பொருட்கள் கிடைத்துள்ளன. இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே இடத்தில் இவ்வளவு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது இங்குதான் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பழங்கற்கால கருவிகளை வைத்து பார்க்கும்போது கற்கால கருவிகளை செய்யும் தொழிற்கூடம் இங்கு இயங்கி இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கணிக்கின்றனர். இதனை உறுதிப்படுத்த மேலும் அகழ்வு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று ஆய்வாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சிக்கு தற்போது அனுமதி கிடைத்துள்ளது. இதனால் இந்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் மு.காளிமுத்து தலைமையில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கியுள்ளன. இந்தப் பணிகள் தொடர்ந்து 3 முதல் 4 மாதங்கள் வரை நடைபெறும் எனத் தெரிகிறது. இந்த ஆய்வின் முடிவில் பல முக்கிய பொருட்கள் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT