தற்போது மாம்பழ சீசன் களைகட்டியிருக்கிறது. பழக்கடைகளில் விதவிதமான மாம்பழங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ரகத்துக்கும் ஏற்ப அதன் விலையும் உள்ளது. பல ஊர்களில் இருந்து மாம்பழங்கள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டாலும், தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய பகுதிகளில் விளையும் மாம்பழங்களுக்குத்தனிச்சுவையும் சிறப்பும் உண்டு.
அதுபோல ஜப்பானில் விவசாயி நககாவா என்பவர் விளைவிக்கும் மாம்பழத்துக்கும் அங்கே ஏக மவுசு. அந்த மாம்பழத்தை எவ்வளவு விலைக்கு அவர் விற்கிறார் என்று கேள்விப்பட்டால் ஆச்சரியத்தில் மூழ்கிவிடுவீர்கள். அந்த விவசாயி ஒரு மாம்பழத்தை இந்திய மதிப்பில் ரூ.19 ஆயிரத்துக்கு விற்கிறார். ஒரு கிலோ மாம்பழம் ரூ.2.70 லட்சமாம். இவ்வளவு விலையில் விற்கும் அந்த மாம்பழத்தில் என்னதான் இருக்கிறது?
இந்த மாம்பழத்தை ஹொக்கைடோ தீவில் உள்ள ஓட்டோஃபுக்கில்தான் நககாவா விளைவிக்கிறார். இந்தப் பகுதி வெப்ப நீரூற்றுகளுக்குப் பெயர்போனது. அந்தப் பகுதியில் இந்த மாம்பழத்தை விளைவிப்பதால் அதற்கு அவ்வளவு கிராக்கி ஏற்பட்டுள்ளது. மேலும், ஜப்பானில் கிடைக்கும் மாம்பழத்தில் இதுதான் சுவைமிக்கதாம். அதுவும்கூட ஒரு காரணம். கடந்த 2011லிருந்து மாம்பழங்களை நககாவா உற்பத்தி செய்து விற்பனை செய்துவருகிறார்.
“இப்பகுதியில் நிலவும் பனியும் வெப்ப நீருற்றுகளுமே மாம்பழம் சுவையாக இருக்கக் காரணம்” என்றும் கூறும் நககாவா, “உற்பத்திக்காகப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதும் இல்லை. மற்ற மாம்பழங்களைவிட அதிக சர்க்கரை கொண்டவை. ஒரு சீசனில் சுமார் 5 ஆயிரம் மாம்பழங்கள் வரை கிடைக்கும். அதனால்தான் விலை அதிகம்” என்கிறார் அவர்.
விலையாலே உலகப் புகழ் பெற்றுவிட்டது இந்த மாம்பழம்.