திருநெல்வேலி: திருநெல்வேலியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் வெப்பத்திலிருந்து தப்பிக்க பதனீர், நுங்கு, இளநீர் அருந்த மக்கள் ஆர்வம் காட் டுகிறார்கள்.
திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டையில் கடந்த சில நாட்களாக பகல்நேர வெப்பநிலை 102 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேலாக பதிவாகி வருகிறது. நேற்று பகலிலும் இதே வெப்பநிலை நீடித்தது. சுட்டெரிக்கும் வெயிலில் தலைகாட்ட முடியாமல் பலர் வீடு களில் முடங்கினர்.
சாலைகளிலும் வாகனப் போக்குவரத்து நண்பகல், பிற்பகலில் குறைந்திருந்தது. அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க சாலையோர குளிர்பானக் கடைகள், இளநீர், நுங்கு, பதனீர் விற்பனை செய்யும் இடங்களில் ஏராளமானோர் வந்திருந்து அவற்றை வாங்கி அருந்தினர்.
பாளையங்கோட்டை ராமசாமி கோயில் அருகே சாலையோர கடையில் இளநீர் ரூ.30 வரையிலும், 3 நுங்கு கண்ணுகள் ரூ.20-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கோடை உழவு: இதனிடையே கோடையில் உழவுப் பணிகளை மேற்கொள்ள விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை வேண்டு கோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக அம்பாசமுத்திர வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கற்பக ராஜ்குமார் கூறியதாவது: “பட்டம் தவறினால் நட்டம்” என்ற பழமொழிக்கு இணங்க, விவசாயிகள் அனைவரும் பட்டத்தை உணர்ந்து பயிர் சாகுபடி செய்யும் போது, பயிர்களில் பூச்சி மற்றும் நோயின் தாக்குதல் குறைந்து, மகசூல் அதிகரிக்கும். தற்போது அவசியம் கோடை உழவு செய்தல் வேண்டும்.
தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வடகிழக்கு பருவக்காற்று மழை பெய்யும் மானாவாரி நிலங்களில் இருபோக பயிர் சாகுபடி நடைமுறையில் உள்ளது. கார் மற்றும் பிசானப் பருவ நெல் சாகுபடிக்கு பிறகு, வயல்கள் பயிர் சாகுபடியின்றி உள்ளன. இச்சமயத்தில் வயலை உழுது புழுதியாக்க வேண்டும்.
ஆழமாக உழுது மண்ணை புரட்டி விடுவதால் மண்ணின் நாள்பட்ட இறுக்கம் தளர்த்தப்பட்டு, மண் இலகுவாகி காற்றோட்டம் அதிகரிக்கிறது. மண் மிருதுவாவதால் பயிர்களின் வேர் வளர்ச்சி அதிகரித்து, பயிர்கள் நன்றாக ஊன்றி அதிக கிளை தூர்களால் அதிக விளைச்சலுக்கு வகை செய்யும்.
நிலத்தோடு மக்க வேண்டிய பயிர்கள், சருகுகள் கோடை உழவு செய்வதால், நன்கு மக்கி பயிருக்கு தழை உரமாக பயன்படும். கோடை உழவு காரணமாக மண் மிருதுவாகி மழை நீரை ஈர்க்கும் திறன் அதிகமாகிறது.
மண் அரிமானம் கட்டுப்படுத்தப்பட்டு அதன் சத்துக்கள் விரையமாவது தடுக்கப்படுகிறது. பயிர்களின் தூர்கள் மக்கி களைகள் கட்டுப்படுத்தப்படும். பூச்சிகளின் கூண்டுப்புழு அழிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.