வாழ்வியல்

மல்லச்சந்திரம் மலையில் 2,500 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியம் கண்டுபிடிப்பு

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி: மல்லச்சந்திரம் மலையில் 2,500 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி அருகே மல்லச்சந்திரத்தில் உள்ள மோரல் பாறை கல் திட்டைகள் புகழ் பெற்றவையாகும். இங்கு ஏற்கெனவே 11 கல் திட்டைகளில் 2,500 ஆண்டுகள் பழமையான வெண்சாந்து ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

தற்போது, இப்பாறைக்கு எதிரே உள்ள மலையில் பாறை ஓவியம் இருப்பதைப் பாறை ஓவிய ஆய்வாளர் சதானந்த கிருஷ்ணகுமார், பிரகாஷ் ஆகியோர் கண்டறிந்தனர். இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் தலைமையில் இம்மலைக்கு மத்திய பல்கலைக் கழக கல்லூரி மாணவர்கள் தொல்லியல் துறை மற்றும் வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர் களப்பயணம் சென்றனர்.

இதுதொடர்பாக காப்பாட்சியர் கூறியதாவது: இந்த ஓவியம் 2,500 ஆண்டுகள் பழமையானது. செங்குத்துக் கல்லில் வரையப்பட்டுள்ளது. இதில், பெருக்கல் குறி உடலமைப்பு கொண்ட மனித உருவம் இரு கைகளையும் தூக்கி இடுப்பில் கத்தியுடன் நடந்து செல்வதுபோலவும், அருகில் ஒரு மனிதன் மாட்டைப் பிடித்துச் செல்வது போலவும் வரையப்பட்டுள்ளது.

பெருக்கல் குறி போன்ற உடல் அமைப்பு கொண்ட ஓவியம் ஐகுந்தம் போன்ற பிற இடங்களிலும் செஞ்சாந்தில் வரையப்பட்டுள்ளன. இது புதியகற்கால மரபின் தொடர்ச்சியாகும். பின்னாளில் உருவான ஆநிரை மீட்டல் (கால்நடைகளை மீட்டல்) நடுகல் உருவத்தின் முன்னோடியாக இப்பாறை ஓவியத்தைக் கூறலாம்.

சங்க இலக்கியத்தில் மாட்டை செல்வம் என்றும், கால்நடைகளுக்காக ஏராளமான சண்டைகள் நடந்துள்ளதையும், அச்சண்டைகளில் இறந்த வீரர்களின் நினைவாக நடுகல் எடுக்கப்பட்டதும் பதிவு செய்யப் பட்டுள்ளது. எனவே, இப்பாறை ஓவியம் இப்பகுதியின் சமூக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT