அம்மாக்களுடைய வலிமையும் அன்பும் எப்போதுமே அளவிட முடியாத ஒன்று. தன்னுடைய குழந்தைகளுக்கு ஆபத்து என்றால் ஆக்ரோஷமாகிவிடும் அம்மாக்கள், தனது குழந்தைகளைக் கொஞ்சி கொண்டாடுபவர்களைக் கண்டால் அவர்களிடம் அன்புமாரிப் பொழிவதில் அம்மாக்களுக்கு நிகர் அம்மாக்களே..! அம்மாவின் இந்த ஆக்ரோஷத்திற்கும் அன்புக்கும் மனிதர்கள் விலங்குகள் என்ற பாகுபாடில்லை.
அப்படியொரு தாய் நாய் ஒன்று தனது குழந்தைகளுக்கு உணவளித்த பெண்மணியிடம் கொஞ்சிக் குலாவி தன்னுடைய மரியாதையும் அன்பையும் வெளிப்படுத்தும் செயல் இணையவாசிகளை நெகிழ்ச்சி அடையச் செய்திருக்கிறது.
யோடா4எவர் என்ற ட்விட்டர் பயனர் ஒருவர், அன்னையர் தினமான ஞாயிற்றுக்கிழமை பகிர்ந்த தாய் நாயின் வீடியோ ஒன்று வைரலாகி அனைவரையும் நெகிழச் செய்து வருகிறது. 16 விநாடிகள் ஓடக்கூடிய அந்தத் துண்டு வீடியோவில் ஒரு கட்டிடத்தின் கீழே இருக்கும் சில நாய்க்குட்டிகளுக்கு பெண்மணி ஒருவர் உணவளிக்கிறார். குட்டிகள் உணவு சாப்பிடும் இடத்திற்கு அருகில் ஒரு போர்வை போல ஒரு துணி இருக்கிறது. உண்டு களைத்தபின் அந்தக் குட்டிகள் அதில் உறங்கி மகிழலாம் போலும். இதில் என்ன இருக்கிறது என்கிறீர்களா?
தனது குட்டிகளுக்கு உணவளிக்கும் பெண்ணின் இடதுபுறம் நின்று வாலாட்டிக் கொண்டிருக்கும் தாய் நாய் ஒரு கட்டத்தில் அப்பெண்ணின் வலதுபுறம் வந்து அவரின் கையைப் பிடித்து தனது தலை தாழ்த்தி அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்தும்... அதற்கு அந்தப் பெண்மணி, நாயின் தலையை தட்டித் தடவி மீண்டும் அன்பு செய்கிறார்... தாய்மை போற்றுதும்...
ஞாயிற்றுக்கிழமை பகிரப்பட்ட இந்த வீடியோவை இதுவரை 18.5 மில்லியன் பாவர்வையாளர்கள் பார்த்துள்ளனர். 19 ஆயிரத்து 800 பேர் பகிர்ந்துள்ளனர். 230.2 ஆயிரம் பேர் விரும்பியுள்ளனர். பலர் கருத்து தெரிவித்துள்ளனர். பயனர் ஒருவர், "ஒரு விலங்கு உங்களுக்கு மரியாதை செலுத்தும்போது நீங்கள் மனிதத்தன்மையின் உச்சத்தை அடைந்துவிட்டீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.
இரண்டாமவர், விலங்குகளின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த நாம் தினமும் ஒரு வழிகாணலாம். சிறந்த வீடியோ என்று தெரிவித்துள்ளார். மற்றொருவர் தாயை உணரும் தாய் என்று தெரிவித்துள்ளார். இன்னுமொருவர் ஆவ்.... கிட்டத்தட்ட அழுதுவிட்டேன் என்று பதிவிட்டுள்ளார். ஆதரவற்ற மனிதர்களையும் விலங்குகளையும் பற்றி யோசிக்க இங்கே இன்னும் சிலர் இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.