மதுரை: மல்லிகை மற்றும் காய்கறிகள் விவசாயம் செய்து இளம் தலைமு றையினருக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார் மதுரை உதவிப் பேராசிரியர் ஒருவர்.
மதுரை திருப்பரங்குன்றம் அருகே பாப்பானோடையைச் சேர்ந்தவர் க.பாண்டி (40). இவர் சரஸ்வதி நாராயணன் கல்லூரி (சுயநிதிப் பிரிவு) பொருளாதாரத் துறை உதவிப் பேராசிரியராக உள்ளார். விவசாயக் குடும் பத்தைச் சேர்ந்த இவர், இளம் தலைமுறையினருக்கு விவசா யத்தைக் கொண்டு செல்ல முன்னுதாரணமாக விவசாயத்தில் ஈடு பட்டு வருகிறார்.
பிரதான சாகுபடியாக மல்லிகையும், கத்தரி, வெங்காயம், வெண்டை, சீனி அவரை எனப் பல்வேறு நாட்டுக் காய்கறிகளையும் தனது வயலில் சாகுபடி செய்துள்ளார். காலையில் விவசாயியாகவும், மாலையில் உதவிப் பேராசிரியராகவும் பணி யாற்றி வருகிறார்.
இது குறித்து உதவிப் பேராசிரியர் பாண்டி கூறியதாவது: எங்களுக்கு வாழ்வாதாரமே விவசாயம்தான். எங்களுக்குச் சொந்தமான மூன்றரை ஏக் கரில் விவசாயம் செய்து வருகிறோம். நானும், எனது குடும்பத்தினரும் சேர்ந்து வயலில் வேலை செய்கிறோம். ஒரு ஏக் கரில் மல்லிகை, எஞ்சிய இடங்களில் கத்தரி, வெங்காயம், பச்சை மிளகாய், வெண்டைக்காய் என கால நிலைக்கேற்ற வாறு பயிரிட்டுள்ளோம்.
ஊடு பயிராக மிளகு தக்காளி என பல அடுக்கு பயிர்களாக விவசாயம் செய்கிறோம். இயற்கை முறையில் காய்கறிகளை விளை வித்து வருகிறோம். ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் மல்லிகை உற்பத்தி குறையும். சித்திரையில் இருந்து புரட்டாசி வரை மல்லிகை சாகுபடி பலன் கொடுக்கும், அந்த மாதங்களில் காய்கறிகள் விளைச்சலும் நன்றாக இருக்கும்.
தற்போது மல்லிகை சென்ட் தயாரிக்கும் நிறுவனத்துக்கு நிரந்தரமாக கொடுத்து வருகிறோம். மதுரையில் பாண்டிய நாடு பண்பாட்டு மையம் சார்பில் பாரம்பரிய விவசாயிக்கான விருது பெற்றுள்ளேன். அதிகாலையிலி ருந்து நண்பகல் 12 மணி வரை விளை நிலத்தில் இருப்பேன். பிற்பகல் 1 மணியிலிருந்து மாலை 6 மணி வரை கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணிபுரிகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.