டர்பன்: இருமனம் இணையும் திருமண நிகழ்வை வாழும் வாழ்க்கை முழுவதும் நினைவில் வைத்துக் கொள்ள உதவுகிறது காலம் கடந்து நிற்கும் புகைப்படங்கள். அதுவும் இன்றைய சூழலில் திருமணத்துக்கு முன், பின் என புகைப்படங்கள் எடுப்பது ட்ரெண்ட். இந்தச் சூழலில் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் தன் திருமணத்திற்கு புகைப்படம் எடுத்த புகைப்படக் கலைஞரிடம் அதற்காக அவர் வசூலித்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார் ஒரு பெண். தனக்கு விவாகரத்து ஆகிவிட்டதாக அதற்கான காரணத்தை அந்தப் பெண் முன்வைத்துள்ளார்.
புகைப்படக் கலைஞர் மற்றும் அந்தப் பெண்ணுக்கும் இடையிலான வாட்ஸ்அப் சாட் சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளது. முதலில் அந்தப் பெண் வேடிக்கையாக இதை செய்கிறார் என்று தான் புகைப்படக் கலைஞர் எண்ணியுள்ளார். ஆனால், ஒரு கட்டத்தில் சூழலைப் புரிந்துகொண்ட அவர் அப்படியே அந்த வாட்ஸ்அப் உரையாடலை ஸ்கிரீன் ஷாட் எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
“உங்களுக்கு என்னை நினைவிருக்குமா என தெரியவில்லை. 2019-ல் டர்பனில் எனது திருமண நிகழ்வில் நீங்கள்தான் வெட்டிங் போட்டோ ஷுட் எடுத்தீர்கள். எனக்கு இப்போது விவாகரத்து ஆகிவிட்டது. எனக்கும், முன்னாள் கணவருக்கும் அந்தப் படங்கள் இப்போது தேவையில்லை. ஆகையால், அதை நீங்கள் திரும்ப எடுத்துக் கொண்டு, நான் செலுத்திய பணத்தை எனக்கு கொடுக்கவும்” என அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
ஆனால், அது முடியாது என புகைப்படக் கலைஞர் தெரிவித்துள்ளார். சட்ட ரீதியாக உங்களை அணுகுவேன் என அந்தப் பெண் தெரிவித்துள்ளார். நிச்சயமாக உங்கள் வழக்கறிஞரை எனக்கு போன் செய்ய சொல்லுங்கள் என புகைப்படக் கலைஞரும் தெரிவித்துள்ளார். இந்த வாட்ஸ்அப் உரையாடல் இப்போது வைரல் ஆகி வருகிறது.