யானை அபிநயாவுடன் வனவர் சோழ மன்னன் 
வாழ்வியல்

“என்னவென்று சொல்வதம்மா...” - ஆனைமலை முகாமில் வனவரின் பாடலும், யானையின் கொஞ்சலும்!

எஸ்.கோபு

பொள்ளாச்சி: யானையும் குழந்தையும் குணத்தால் ஒன்றாக கருதப்படுகிறது. தண்ணீரை கண்டால் குதுகலம் அடையும் குழந்தை, தாயின் தாலாட்டு பாடலில் தன்னை மறந்து உறக்கும். யானையும் தண்ணீரில் குதூகலம் அடைவதுடன் வனவர் ஒருவரின் பாடலில் தன்னையும் மறந்து தலையாட்டி நிற்கிறது.

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் யானைகள் முகாமில் வனவராக பணியாற்றி வருபவர் சோழமன்னன். மேடைப் பாடகரான இவர் வனத்துறையில் பணிக்கு சேர்ந்த பின்னர் தனது இசை பயணத்தை நிறுத்தவில்லை. பணியில் ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் தனக்கு பிடித்த பாடல்களை பாடி வருவது வழக்கம். மேலும், சினிமா பாடல்களின் மெட்டில் வார்த்தை மாற்றி அமைத்து பாடல்களை பாடி வருகிறார். ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள கோழிகமுத்தி முகாமில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வனவராக பணிக்கு சேர்ந்தார்.

அங்கு யானைகள் பாகன்கள் இடும் கடுமையான கட்டளைக்களுக்கு கீழ்படிந்து நடப்பது கண்ட அவர் யானைகளை ரிலாக்ஸ் செய்ய பாடல்களை பாடியுள்ளார். யானைகளும் அவரது பாடலுக்கு ஏற்ப தலை அசைத்து உற்சாகம் அடைவதை கண்டு யானையை குறித்தே பாடலை பாடியுள்ளார். குறிப்பாக முகாமில் உள்ள அபிநயா என்னும் யானை இவரது, ''என்னவென்று சொல்வதம்மா யானையின் பேரழகை...'' என்னும் பாடலை கேட்டு குழந்தை போல் தும்பிக்கையால் அவரை தடவிக் கொஞ்சுவது முகாமில் உள்ளோரை நெகழ்ச்சி அடைய வைத்துள்ளது.

இது குறித்து வனவர் சோழமன்னன் கூறும்போது, ''வனத்தில் உள்ள ஒரு யானை கூட்டம் பல ஹெக்டர் பரப்பளவு உள்ள புதிய காட்டையே உருவாக்கம் திறன் கொண்டது. காடு செழிப்பாக இருந்தால் மட்டுமே நாடு சிறப்பாக இருக்கும். தினமும் பல கிலோ மீட்டர் பயணிக்கும் யானை தான் உண்ணும் உணவின் கழிவிலிருந்து வெளியேறும் விதைகள் மூலம் புதிய காடுகளை உருவாக்கிறது. மேலும் பல்லுயிர் பெருக்கத்திலும் யானைகளின் பங்கு முக்கியத்துவம் வகிக்கிறது.

உணவுச் சங்கிலி அமைப்பில் யானைகள் குறிப்பிட்ட இடம் வகிக்கிறது. வனத்தின் சொத்தாக கருதப்படும் யானைகளின் முக்கியத்துவம் குறித்து பாடல் வரிகளில் குறிப்பிட்டுள்ளேன். இதன் மூலம் யானைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். இசை மனதின் அழுத்தத்தை குறைக்கிறது இதில் மனிதன் யானை என்ற வேறுபாடு கிடையாது எனது பாடல்கள் யானைகளை ரிலாக்ஸ் செய்கிறது என நம்புகிறேன்'' என்றார்.

SCROLL FOR NEXT