வாழ்வியல்

வாடகை வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதால் தினமும் 4,000 பறவைகளுக்கு இரையிட முடியவில்லை: மனம் வருந்தும் ராயப்பேட்டை ‘பறவை மனிதர்’

ச.கார்த்திகேயன்

சென்னை: வாடகை வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதால் தினமும் 4 ஆயிரம் பறவைகளுக்கு இரையிட முடியவில்லை என்று மனம் வருந்துகிறார் ‘பறவை மனிதர்’ சேகர்.

சென்னை ராயப்பேட்டை, பாரதி சாலையில் வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்தவர் சி.சேகர். இவர் கடந்த 25ஆண்டுகளாக அந்த வீட்டின்மொட்டை மாடியில் பறவைகளுக்கு இரையிட்டு வந்துள்ளார். இதனால் பொழுதுசாயும் நேரத்தில் இரைதேடி 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளி, புறா, காகம், சிட்டுக்குருவி போன்ற பறவைகள் இவரது இல்லத்துக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளன.

வீட்டின் உரிமையாளர், அந்த வீட்டை விற்க முடிவெடுத்துள்ளதால், நீதிமன்ற உத்தரவின்படி சில தினங்களுக்கு முன்பு சேகர் வெளியேற்றப்பட்டார். அவரதுஉடமைகளும் வீட்டிலிருந்து அகற்றப்பட்டன. இந்நிலையில் இவரை நம்பி இரைதேடி வரும் பறவைகள் ஏமாந்து செல்வதைப் பார்த்து சேகர் வேதனையடைந்துள்ளார்.

அவரை 'இந்து தமிழ் திசை' சார்பில் நேரில் சந்தித்தோம். அப்போது அவர் கூறியதாவது: தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த நான், 6-ம் வகுப்பு வரை படித்திருக்கிறேன். குடும்பத் தொழில் விவசாயம். கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தை விட்டு 40 ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு வந்தேன்.

சுய ஆர்வத்தில் மின்னணு தொடர்பான நூல்கள், ஆங்கிலம் கற்கும் நூல்களை வாங்கிப் படித்தேன். தொடர்ந்து, வானொலி, தொலைக்காட்சி பழுது பார்க்கும் கடையில் வேலை பார்த்தேன். அப்போது 2 ஆண்டு மின்னணு பொருட்கள் பழுது நீக்கும் பட்டயப் படிப்பை படித்தேன்.

நான் உறவினர் ஒருவர் வீட்டில் வசித்து வந்தேன். அவர் விலை உயர்ந்த கேமராக்களுடன் ஸ்டுடியோ நடத்தி வந்தார். ஒருமுறை அவரது கேமரா பழுதாகி இருந்தது. பல இடங்களில் கொடுத்தும் அந்தப் பழுதை அவரால் நீக்க முடியவில்லை. ஆனால் நான் அந்தப் பழுதை நீக்கினேன். அப்போதுதான் மின்னணு தொழில்நுட்பத்தில் கேமராக்கள் வரத் தொடங்கிய நேரம். எனவே, அத்தொழிலில் இறங்கினேன்.

சென்னை ராயப்பேட்டை, பாரதி சாலையில், தான்
வாடகைக்கு குடியிருந்த வீட்டில் கிளிகளுக்கு
இரையிடும் சி.சேகர்.

நல்ல வருவாயும் கிடைத்தது.அவற்றை பழைய கேமராக்களை வாங்குவதில் செலவிட்டேன். இப்போது என்னிடம் 3,500-க்கும் மேற்பட்ட பழைய கேமராக்கள் உள்ளன. அதை பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், கல்லூரி மாணவர்கள் பார்வையிட்டு சென்றுள்ளனர்.

இயற்கையிலேயே எனக்குபறவைகளின் மீது ஈர்ப்பு அதிகம். எனவே நான்தங்கியிருந்த வீட்டின் மாடியில் பறவைகளுக்கு நீரும்,இரையும் வைக்கத் தொடங்கினேன். தினமும் 4 ஆயிரம் பறவைகள் இரைதேடி வருகின்றன. இதை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பார்த்து சென்றுள்ளனர்.

நான் 25 ஆண்டுகளாக தங்கியிருந்த கட்டிடத்தை உரிமையாளர் விற்க முயன்ற நிலையில், இயற்கை ஆர்வலர்கள் பலர் அதை வாங்கி எனக்கு வழங்க விரும்பினர். ஆனால் உரிமையாளர் எங்களிடம் விற்க முன்வரவில்லை. அதனால் நான் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டேன். எனதுகுடும்பத்துக்கு செலவிடுவதைவிட இந்த பறவைகளுக்காகவே எனது வருவாயில் பெருமளவு செலவிட்டு வந்தேன்.

கடந்த இரு நாட்களாக பறவைகள் மாலை நேரத்தில் இரை தேடி வந்து, ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதைப் பார்க்கும்போது மனம் வேதனைப்படுகிறது.இவ்வாறு கூறிய அவர், பூட்டிய வீட்டின் முன்பு கலங்கிய கண்களுடன் வானத்தை வெறித்துப் பார்த்தபடி நின்றார்.

SCROLL FOR NEXT