தபஷூம் ஷேக் தனது தந்தை மற்றும் தாயுடன் 
வாழ்வியல்

'நான் ஹிஜாபுக்கு பதிலாக கல்வியை தேர்ந்தெடுத்தேன்' - பியூசி 2-ம் ஆண்டு தேர்வில் முதலிடம் பெற்ற மாணவி கருத்து

இரா.வினோத்

பெங்களூரு: கர்நாடகாவில் பியூசி 2-ம் ஆண்டு தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவி தபஷூம் ஷேக், தான் ஹிஜாபுக்கு பதிலாக கல்வியைத் தேர்ந்தெடுத்ததாகக் கூறியுள்ளார்.

3 பாடங்களில் 100-க்கு 100: கர்நாடகாவில் அண்மையில் பியூசி 2-ம் ஆண்டு தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் பெங்களூருவை சேர்ந்த மாணவி தபஷூம் ஷேக் 600-க்கு 593 மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் கலைப்பிரிவில் முதலிடம் பிடித்துள்ளார். இந்தி, சமூகவியல், உளவியல் ஆகிய 3 பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்களையும் பெற்றுள்ளார்.

இதுகுறித்து தபஷூம் ஷேக் கூறுகையில், ‘‘கடந்த ஆண்டு கர்நாடக பாஜக அரசு கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடைவிதித்தது. இதனால் என்னோடு படித்த சில முஸ்லிம் மாணவிகள் படிப்பை பாதியில் நிறுத்தினர். நான் ஹிஜாபை விட என் படிப்பு முக்கியம் என நினைத்தேன். பெற்றோரிடம் எடுத்துக்கூறி, ஹிஜாபுக்கு பதிலாக கல்வியை தேர்வு செய்தேன். கல்விக்காக எனது மத அடையாளமான ஹிஜாபை தியாகம் செய்தேன். நான் நன்றாக படித்து அதிக மதிப்பெண்கள் வாங்கினால் எனது குடும்பத்தில் உள்ள மற்ற பெண்களுக்கும் மேற்படிப்பு படிக்க வாய்ப்பு கிடைக்கும் என நம்பினேன். அதனால் கஷ்டப்பட்டு படித்தேன். இப்போது மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளேன்" என்றார்.

சட்டத்தை மதிப்பது முக்கியம்: மாணவியின் தந்தை அப்துல் கான் ஷேக் கூறுகையில், ‘‘நாம் வாழும் நாட்டில் இயற்றப்படும் சட்டத்தை மதித்து பின்பற்றுவது முக்கியம். மத அடையாளத்தை விட குழந்தைகளுக்கு கல்வியே முக்கியம். அரசின் உத்தரவை பின்பற்றியதால் எங்களுக்கு எந்தச் சிக்கலும் ஏற்படவில்லை. அதேவேளையில் இந்த மதிப்பெண் மூலமாக எனது மகள் சமூகத்துக்கு ஒரு நல்ல செய்தியை சொல்லி இருக்கிறார்'' என்றார்.

SCROLL FOR NEXT