தமிழகத்தில் 12 மணி நேர வேலை மசோதா இன்று தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பை மீறி நிறைவேற்றப்பட்டது. தமிழக அரசின் இம்முடிவுக்கு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், ஆசியாவிலேயே 8 மணி நேர வேலை என்பது புதுச்சேரியில் முதலில் அமல்படுத்தப்பட்டதன் வரலாற்றை சுருக்கமாக அறிவோம்.
புதுச்சேரியில் கடந்த 1936-ம் ஆண்டு ஜூலை 30-ம் நாள் 8 மணி நேர வேலை, உழைப்புக்கு ஏற்ற ஊதியம், பெண் தொழிலாளர்களுக்கு பேறு கால விடுப்பு என தொடர் போராட்டத்தில் பஞ்சாலை தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது பிரெஞ்சு ராணுவம், தொழிலாளர்கள் மீது துப்பாக்கிகளைக் கொண்டு தாக்கியது. பின்னர் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 தொழிலாளர்கள் வீர மரணமடைந்தனர்.
இதைக் கண்டித்து, பிரான்சில் இருந்த பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. பிரெஞ்சு நாடாளுமன்றத்திலும் இந்தப் பிரச்சினை எதிரொலித்ததையடுத்து 1937-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் புதுச்சேரி தொழிலாளர்களுக்கான எட்டு மணி நேர வேலை உரிமை சட்டமும், தொழிற்சங்கம் உரிமை சட்டமும் நிறைவேற்றப்பட்டது.
உரிமைப் போரில் உயிர் நீத்த தொழிலாளர்களின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக ஆண்டுதோறும் ஜூலை மாதம் 30-ம் தேதி அன்று புதுவையில் தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. மேலும், கடலூர் சாலையில் தொழிலாளர்கள் உயிரிழந்த இடம் அருகே நினைவு சின்னமும் உள்ளது. குறிப்பாக 12 தொழிலாளர்களை துப்பாக்கியால் சுடப்பட்ட காலை 9 மணிக்கு ஆலை சங்கு அங்கு ஒலிக்கப்படும். அப்போது மலர்வளையம் வைத்து தியாகிகள் சிலைக்கு அஞ்சலி செலுத்துவது வழக்கம்.
புதுச்சேரியின் தொழிற்சங்க ஸ்தாபகர் வ.சுப்பையா தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு உலகம் முழுவதும் எழுந்த ஆதரவு அலை பிரெஞ்சு அரசைப் பணிய வைத்தது என்பது வரலாறாகும். ஆனால், கடந்த புதுச்சேரி அரசு, கரோனா காலத்தில் 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக்கி அறிவித்தது கடும் சர்ச்சையானது. பின்னர் அந்த அறிவிப்பு நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.