தூத்துக்குடி: தூத்துக்குடியில் வாசிப்பு மற்றும் கலை பிரியர்களுக்கு மெகா விருந்துபடைக்கும் வகையில் 4-வது புத்தகத் திருவிழா மற்றும் 2-வது நெய்தல் கலை விழா இன்று (ஏப்.21) தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 4-வது புத்தகத் திருவிழாதூத்துக்குடி- எட்டயபுரம் சாலையில் சங்கரப்பேரி விலக்கு பகுதியில் உள்ள திடலில் இன்று (ஏப்.21) தொடங்கி வரும் மே 1-ம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. புத்தகத் திருவிழாவில் கடைசி நான்கு நாட்களான ஏப்ரல் 28, 29, 30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் 2-வது நெய்தல் கலை விழா நடைபெறுகிறது.
புத்தகத் திருவிழா மற்றும் நெய்தல் கலைத் திருவிழா தொடர்பான வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு ராட்சத பலூனை கனிமொழி எம்பி நேற்று பறக்கவிட்டார். மேலும்,அரங்குகள் அமைக்கும் பணிகளை பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தூத்துக்குடியில் இன்று (ஏப்.21) தொடங்கும் புத்தகத் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் மாலையில் தமிழகத்தின் முக்கியமான ஆளுமைகள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் கலந்து கொண்டு வாசிப்புப் பழக்கம் குறித்து பல்வேறு தலைப்புகளில் மக்களிடையே தங்களது கருத்துகளை பரிமாறிக்கொள்ள இருக்கிறார்கள். இந்த புத்தகத் திருவிழாவில் 110 பதிப்பகங்களை சேர்ந்தவர்கள் அரங்குகளை அமைத்து புத்தகங்களை கண்காட்சிக்கு வைக்கின்றனர்.
வரும் 28-ம் தேதி மண் சார்ந்தகலைஞர்கள் மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த கலைஞர்கள் கலந்துகொள்ளும் நெய்தல் கலை நிகழ்ச்சி தொடங்குகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற அகழாய்வுகள் பற்றிய ஒரு அரங்கு தமிழ்நாடு தொல்லியல் துறை மூலம் அமைக்கப்படுகிறது. புத்தகத் திருவிழாவின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட தூத்துக்குடி சார்ந்த புகைப்படப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்களை கண்காட்சியாக வைப்பதற்கு தனியாக அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்த மக்கள் புத்தகத் திருவிழா மற்றும் நெய்தல் கலைத் திருவிழாவில் பங்கேற்று மகிழ வேண்டும் என்றார்.
ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் ச.தினேஷ் குமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.