மான்செஸ்டர்: இங்கிலாந்து நாட்டில் அமைந்துள்ள மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் இந்திய பாரம்பரிய உடையான சேலையை கட்டிக் கொண்டு பங்கேற்றுள்ளார் மதுஸ்மிதா ஜெனா தாஸ் என்ற பெண். பந்தய தூரமான 42.5 கிலோ மீட்டர் தூரத்தை 4 மணி நேரம் 50 நிமிடங்களில் அவர் கடந்துள்ளார். அவரது இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
ஞாயிறு அன்று நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் சிவப்பு நிற சேலையை கட்டிக் கொண்டு, காலில் ஷூ அணிந்து கொண்டு பங்கேற்றார். அவர் அணிந்திருந்த சேலை சம்பல்புரி கைத்தறி நெசவாளர்கள் உருவாக்கியது எனத் தெரிகிறது. அவரது மாரத்தான் ஓட்ட காட்சி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுவருகிறது.
“மான்செஸ்டர் நகரில் வசித்து வருகிறார் மதுஸ்மிதா. சேலை அணிந்த அவர் மிகவும் எளிதாக மாரத்தானில் ஓடி இருந்தார். இந்திய பாரம்பரியத்தை இதன் மூலம் அவர் வெளிப்படுத்தி உள்ளார்” என ஒரு ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. மாரத்தானில் பங்கேற்ற அவரை நண்பர்கள், குடும்பத்தினர் என அனைவரும் உற்சாகம் கொடுப்பதையும் வீடியோவில் பார்க்க முடிகிறது.
41 வயதான அவர் உலகம் முழுவதும் மாரத்தான் மற்றும் அல்ட்ரா மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.