வாழ்வியல்

கல்லூரிச் சாலை: ஆல்ரவுண்டர்கள்!

எல்.ரேணுகா தேவி

ரு கல்லூரிக்குள் சென்று, கில்லியாகப் படிக்கும் படிப்பாளிகள் யார் என்று கேட்டால் டஜன் கணக்கில் கைகாட்டிவிடுவார்கள். ஆனால், படிப்போடு வெவ்வேறு துறைகளில் ஜொலிக்கும் ஆல்ரவுண்டர்கள் யார் என்று கேட்டால், சிலரைத்தான் அடையாளம் காட்டுவார்கள். இப்படிப்பட்ட ஆல்ரவுண்டர்கள் கோவையில் உள்ள பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இருக்கிறார்களா என்று கேட்டேன். ஆறு பேரை அழைத்துவந்து நம்மிடம் விட்டுச்சென்றார்கள். அவர்களைப் பற்றிய அட்டகாசமான அறிமுகம்.

கல்லூரி மாணவி, பாட்டு டீச்சர், பரதநாட்டிய பள்ளியின் நிறுவனர் எனப் பல்வேறு முகங்களுடன் வலம் வருகிறார் இரண்டாம் ஆண்டில் மியூசிக் படித்து வரும் திவ்யா. படித்துக் கொண்டே தன்னுடைய கணவருடன் இணைந்து ‘ஸ்வரமஞ்சிரி’ என்ற பெயரில் சொந்தமாக இசை, பரதநாட்டிய பள்ளியை நடத்திவருகிறார் இவர். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக இசைக் கச்சேரி நடத்துவது, பஜனை பாடல்கள் பாடுவது என்று சமூக சேவையிலும் ஸ்கோர் செய்கிறார் திவ்யா. இசைக் கச்சேரிகளில் பாரதியாரின் பாடல்களையும், தமிழ்ப் பாடல்களைப் பாடியும் தமிழுக்கு மகுடம் சூட்டுவது இவரது வாடிக்கை.

“என்னுடைய குடும்பத்தில் யாரும் இசைப் பின்னணியைக் கொண்டவர்கள் கிடையாது. ஆனால், எனக்கு சிறுவயதிலிருந்தே கர்னாடக இசையை கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசை. அதன் காரணமாகத்தான் கர்னாடக சங்கீதத்தில் டிப்ளோமா படித்தேன். அப்போது கல்லூரி சென்று படிக்கும் அளவுக்கு வாய்ப்பில்லை. அதனால்தான் இப்போது கல்லூரியில் சேர்ந்து மியூசிக் படித்து வருகிறேன். இந்த அளவுக்கு நான் உயர்ந்ததற்கு என்னுடைய கணவருடைய ஊக்குவிப்புதான் எனர்ஜி டானிக்காக இருந்தது” என இசைப் புராணம் வாசிக்கிறார் திவ்யா.

கல்லூரி மாணவர்கள் என்றாலே ஆட்டம், பட்டம் என்றுதான் இருப்பார்கள். ஆனால் அமித் சபிரியா கவிதை, கட்டுரை என எழுத்துலகில் மூழ்கிகிடக்கிறார். வணிக நிர்வாகவியல் துறையில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் அமித், பள்ளியிலிருந்தே ஆங்கிலத்தில் கவிதை எழுத தொடங்கிவிட்டார். கவிதை மட்டுமல்லாது தன்னுடைய வலைப்பூவில் இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கட்டுரைகளையும் எழுதி வருகிறார் இவர்.

“நான் 8-ம் வகுப்பு படிக்கும்போது இந்தியா குறித்து கவிதை எழுத டீச்சர் சொன்னதிலிருந்தே என்னுடைய கவிதைப் பயணம் தொடங்கியது. என்னுடைய பள்ளி ஆசிரியர்கள்தான் எனக்கு கவிதை எழுத அதிகளவில் உற்சாகமூட்டியவர்கள். நான் தொடர்ச்சியாகக் கவிதை எழுத ஆரம்பித்தது 12-ம் வகுப்பில் இருந்துதான்” என்கிறார் அமித்.

தன்னுடைய பள்ளி காலத்திலிருந்து தற்போதுவரை அமித் எழுதிய கவிதைகள் ‘லிஃப்ட் மி ஹயர் போயம்ஸ் ஃபார் ஏ வைஸ் லைஃப்’ என்ற பெயரில் விரைவில் தொகுப்பாக வெளிவர உள்ளது.

பொதுவாக ஆண்கள்தான் ராணுவத்தில் சேர ஆசைப்படுவார்கள். பி.எஸ்சி உளவியல் மூன்றாம் ஆண்டு படித்துவரும் சிநேகாவுக்கு ராணுவத்தில் சேர்வதுதான் லட்சியம். இதற்காக கல்லூரி தேசிய மாணவர் படையில் சேர்ந்து பயிற்சி பெற்று வருகிறார் இவர். “எனக்கு ராணுவத்தில் சேர வேண்டும் என்பது சிறுவயது கனவு. அதற்காகப் பள்ளியில் படிக்கும்போது சாலைப் பாதுகாப்புப் படையில் சேர்ந்தேன்” என்கிறார் இவர். தற்போது தேசிய மாணவர் படையின் சார்ஜென்டாக உள்ளார் சிநேகா.

நாம் படிக்கும் படிப்பு இந்தச் சமுதாயத்துக்கு ஏதோ ஒரு விதத்திலாவது பயன்பட வேண்டும் அல்லவா? அதை எப்போதும் மனதில் நிறுத்தி செயல்படுகிறார் பி.ஏ. சமூகவியல் படித்து வரும் திருநாவுக்கரசு. விவசாய குடும்பத்தில் பிறந்த இவர், சிலம்பக் கலையில் தேர்ச்சி பெற்றவர். தன்னை போலவே மற்ற மாணவர்களும் சிலம்பம் கற்றுத்தருகிறார். பொதுத் தொண்டாக ‘மனிதம் வளர்போம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி கடந்த இரண்டு ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்திவருகிறார். தன்னுடைய சொந்த ஊரான ராமசெட்டிபாளையத்தை அடுத்துள்ள சிறு கிராமங்களுக்கு தன்னுடைய அமைப்பு மாணவர்களுடன் சென்று முதியவர்களுக்கு உதவுகிறார்.

மாணவர்களிடம் உள்ள தயக்கத்தை போக்கப் பள்ளி மாணவர்களை ஒருங்கிணைத்து தங்களைப் பற்றி அறிமுகம் செய்துக் கொள்வது, ஏதாவது ஒரு தலைப்பில் பேச வைப்பது என எப்போதும் பம்பரமாக சுழன்றுவருகிறார் திருநாவுக்கரசு.

நடனத்தை ஒரு கண்ணாக நினைத்து வந்தவருக்கு, பாட்டு மீதும் காதல் வர, மியூசிக் மாணவியாகிவிட்டார் ஸ்ரீமதி முரளி. பி.ஏ. மியூசிக் இரண்டாம் ஆண்டு படித்து வரும் ஸ்ரீமதி, அடிப்படையில் பரதநாட்டியக் கலைஞர்.

“என்னுடைய கரியர் நடனம்தான் என முடிவு செய்த பிறகு, கர்னாடக இசையைக் கற்றுக்கொள்ள வேண்டும் என முடிவு செய்தேன். அதற்காகத்தான் நடனத்துடன் சேர்ந்த இசையையும் கற்றுக்கொள்ளத் தொடங்கியிருக்கிறேன்” என்று புன்னகைக்கிறார் ஸ்ரீமதி. அண்மையில் ராமானுஜம் 1000-வது ஆண்டு விழா, காவிரி புஷ்கர நீராடல் ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாட்டையும் பரதநாட்டியத்தையும் அரங்கேற்றியிருக்கிறார் இவர்.

விவசாய நிலங்களில் நடந்து சென்ற காயத்ரியின் கால்கள், இன்று இமயமலை சிகரங்களை தொட்டு சாதனையைப் படைத்துள்ளன. மூன்றாம் ஆண்டு பி.காம். படித்துவரும் காயத்ரி கல்லூரி தேசிய மாணவர் படையின் முக்கிய முகம். கடந்த ஜூலை மாதம் தேசிய மாணவர் படை சார்பாக லடாக் மலையேற்றத்துக்கு தமிழகத்தின் சார்பில் தேர்வு செய்யப்பட்டவர் இவர். இதற்காக டெல்லியில் பயிற்சி எடுத்துக்கொண்டவர், சுமார் 5,345 மீட்டர் உயரம் கொண்ட லடாக் மலையின் உச்சியை இரண்டே நாட்களில் அடைந்து புதிய உயரத்தைக் கண்டிருக்கிறார். 17 ஆண்டுகளுக்குப் பிறகு லடாக் உச்சியைத் தொட்டு சாதனையை நிகழ்த்தியுள்ள காயத்ரியை ‘சிகரம் தொட்ட சாதனையாளர்’ என்று கல்லூரியில் கொண்டாடுகிறார்கள். “எதிர்காலத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாக வேண்டும்” என்பது தனது லட்சியம் என்கிறார் காயத்ரி.

SCROLL FOR NEXT