சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியை நேரில் சந்தித்துள்ளார் நடிகை குஷ்பு. இந்த சந்திப்பின் போது குஷ்புவின் மாமியாரும் உடன் இருந்துள்ளார். இதுகுறித்து நெகிழ்ச்சியான ட்வீட் ஒன்றை அவர் ட்விட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் சீசனுக்கான போட்டிகள் ‘ஹோம் மற்றும் அவே’ பார்மெட்டில் நடைபெற்று வருகிறது. அதன் காரணமாக சென்னை - சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடி வருகிறது. சிஎஸ்கே-வை தோனி கேப்டனாக வழிநடத்தி வருகிறார். வரும் திங்கள் அன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் சிஎஸ்கே விளையாட உள்ளது. இந்தப் போட்டிக்காக சிஎஸ்கே வீரர்கள் தற்போது தயாராகி வருகின்றனர். இந்த சூழலில் இந்த சந்திப்பு நடைப்பெற்றுள்ளது.
“ஹீரோக்கள் உருவாக்கப்படுவதில்லை. அவர்கள் பிறக்கிறார்கள். அதை தோனி நிரூபித்துள்ளார். நமது சிஎஸ்கே ‘தல’-யின் அரவணைப்பையும், விருந்தோம்பலையும் கண்ட நான் அதை விவரிக்க வார்த்தைகள் இன்றி நிற்கிறேன். 88 வயதான எனது மாமியாரை அவர் சந்தித்தார். தோனியை ஹீரோவாக வழிபடும் ரசிகர் எனது மாமியார். இதன் மூலம் நீங்கள் (தோனி) நல்ல ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் அவரது வாழ்வில் சேர்த்து உள்ளீர்கள். இதை நிறைவேற்றிய சிஎஸ்கே-வுக்கு எனது நன்றி. சிஎஸ்கே-வுக்கு விசில் போடு!” என குஷ்பு ட்வீட் செய்துள்ளார்.