போபால்: மத்திய பிரதேசத்தை சேர்ந்த சிறுமி தனிஷ்கா சுஜித் 15 வயதில் பி.ஏ. இறுதியாண்டு படித்து வருகிறார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக விரும்பும் அந்த சிறுமிக்கு பிரதமர் நரேந்திர மோடி பயனுள்ள அறிவுரைகளை கூறியுள்ளார்.
மத்திய பிரதேசம் இந்தூரை சேர்ந்த சுஜித், அனுபா தம்பதியின் மகள் தனிஷ்கா சுஜித் (15). மழலையர் வகுப்பில் தனிஷ்காவை சேர்த்தபோது மற்ற குழந்தைகளைவிட அவளது திறமைகள் அபாரமாக இருப்பதை ஆசிரியர்கள் கண்டறிந்தனர். இதைத் தொடர்ந்து வீட்டிலேயே அவள் கல்வி கற்க பெற்றோர் ஏற்பாடு செய்தனர். 3 வயதில் ஒன்றாம் வகுப்பு இறுதியாண்டு தேர்வில் அவள் வெற்றி பெற்றாள். 11-வது வயதில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சியடைந்து அதிக மதிப்பெண்களை பெற்றாள். 12-வது வயதில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார்.
இதன் பிறகு மத்திய பிரதேச கல்வித் துறையின் சிறப்பு அனுமதியுடன் 13-வது வயதில் பி.ஏ. உளவியல் முதலாம் ஆண்டு படிப்பில் சேர்ந்தார். தேவி அகில்யா விஸ்வ வித்யாலயா பல்கலைக்கழகத்தில் தற்போது பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வரும் அவர் விரைவில் இறுதி செமஸ்டர் தேர்வை எழுத உள்ளார்.
இந்த சூழலில் அண்மையில் போபால் சென்ற பிரதமர் நரேந்திர மோடியை சிறுமி தனிஷ்கா சுஜித் சந்தித்தார். அப்போது தனிஷ்காவின் எதிர்கால லட்சியம் குறித்து கேட்டறிந்தார்.
தனிஷ்கா கூறும்போது, “உள்நாடு, வெளிநாட்டில் சட்டம் பயின்று வழக்கறிஞராக பணியாற்ற வேண்டும். எதிர்காலத்தில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
சிறுமி தனிஷ்காவின் லட்சியத்தை பாராட்டிய பிரதமர் மோடி, பயனுள்ள அறிவுரைகளை வழங்கினார். “உன்னுடைய கனவு நிச்சயம் நனவாகும். இப்போதே உச்ச நீதிமன்றத்துக்கு சென்று அங்கு வழக்கறிஞர்கள் எவ்வாறு வாதிடுகிறார்கள் என்பதை நேரில் பார்த்து அறிந்து கொள்ள வேண்டும். முதலில் வழக்கறிஞர், பின்னர் நீதிபதி, அதற்கு பிறகு தலைமை நீதிபதி லட்சியத்தை எட்ட அயராது பாடுபட வேண்டும்" என்று பிரதமர் மோடி அறிவுரை கூறினார்.
தனிஷ்காவின் தாய் அனுபா கூறியதாவது: நாங்கள் இந்தூரில் சிறிய பள்ளியை நடத்தி வருகிறோம். கடந்த 2020-ம் ஆண்டில் கொரோனா வைரஸ் தொற்றால் எனது கணவர், மாமனார் உயிரிழந்தனர். இதனால் நானும் எனது மகளும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானோம். அதில் இருந்து மீண்டு எனது மகளின் லட்சியத்தை நோக்கி பயணம் செய்கிறோம். பிரதமரின் அறிவுரைகளை கண்டிப்புடன் பின்பற்றுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.