சென்னை: ப்ரஸன்னா ராமஸ்வாமி இயக்கியுள்ள ‘68, 86, 45 12 லட்சம்’ எனும்தமிழ் நாடகம் ஏப்.14-ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் சென்னை அடையாறில் உள்ள முத்தமிழ் பேரவை திருவாவடுதுறை ராஜரத்தினம் அரங்கத்தில் அரங்கேற்றப்படுகிறது.
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய இயற்கையின் 5 கூறுகளை வைத்து, பட்டியலின மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை அடிப்படையாக கொண்டு இந்த நாடகத்தை எழுதி இயக்கியுள்ளார் ப்ரஸன்னா ராமஸ்வாமி.
1968-ம் ஆண்டு தமிழகத்தின் கீழ்வெண்மணியில் கூலியை உயர்த்திக் கேட்டதற்காக 44 விவசாய கூலி தொழிலாளர்கள் தீக்கிரையாக்கப்பட்டது, 1979-ம் ஆண்டு மேற்கு வங்கத்தின் மரிஜாபியில் அகதிகளாக குடியேறிய மக்கள் படுகொலை செய்யப்பட்டது 1985-ம் ஆண்டு ஆந்திரப் பிரதேசத்தின் கரமசேதுவில் தமது தண்ணீரை அசுத்தம் செய்தஆதிக்க சாதியினரை எதிர்த்ததற்காக 6 பேர் கொல்லப்பட்டது ஆகிய நிகழ்வுகள் மற்றும் இந்தியாவில் கழிவுநீர் தொட்டிகளுக்குள் உயிரிழந்த துப்புரவு பணியாளர்களில் 45 சதவீதம் பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள், பிரிட்டிஷ்ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்ட 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் பெரும்பாலும் பிறரால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது உள்ளிட்ட தரவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த நாடகத்தின் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
பட்டியலின மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைக் களைய அம்பேத்கரின் கருத்துகளை உள்வாங்கி, அவர் காட்டிய திசையில் பயணிக்க வேண்டும் என்பதை இந்த நாடகம் வலியுறுத்துகிறது
’68, 86, 45 12 லட்சம்’ நாடகம், ஏப்.14-ம் தேதி டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 132-வது பிறந்தநாளை முன்னிட்டு மீண்டும் மேடையேறுகிறது. பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம்.