சித்தலம்பட்டு அரசுப் பள்ளியில் 37 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்கள் தங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களின் பாதங்களை குடும்பத்துடன் தொட்டு வணங்கி மரியாதை செய்தனர். 
வாழ்வியல்

சித்தலம்பட்டு அரசுப் பள்ளியில் 37 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்கள் சந்தித்து நெகிழ்ச்சி!

செய்திப்பிரிவு

விழுப்புரம்: அரசுப் பள்ளியில் 37 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்கள் சந்தித்து, பாடம் சொல்லித்தந்த ஆசிரியர்கள் பாதத்தைக் குடும்பத்தினருடன் வணங்கி நெகிழ்ச்சி அடைந்தனர்.

புதுச்சேரி எல்லையை யொட்டிய தமிழகப்பகுதியான விழுப்புரம் மாவட்டம் சித்தலம்பட்டு அரசு மேனிலைப்பள்ளியில், தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இப்பள்ளியில் கடந்த 1986-ம்ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் "ஸ்கூல் பிரண்ட்ஸ் குரூப் சித்தலம்பட்டு" என்ற வாட்ஸ்அப் குழுவை உருவாக்கியுள்ளனர்.

இந்த முன்னாள் மாணவர்களின் சங்கமம் நிகழ்ச்சி சித்தலம்பட்டு அரசுப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 60 முன்னாள் மாணவ, மாணவிகள் தங்கள் குடும்பத்துடன் 37 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றாக சந்தித்தனர்.

தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி கவுரவித்தனர். கடந்த 1986-ல் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்களை வரிசையாக நிற்க வைத்து, அவர்களின் பாதம் தொட்டு, முன்னாள் மாணவர்களும், குடும்பத்தினரும் வணங்கினர். பதிலுக்கு ஆசிரியர்களும், மலர் தூவி வாழ்த்தினர்.

இதுகுறித்து முன்னாள் ஆசிரியர்கள் கூறுகையில், "ஆசிரியராக பல ஆண்டுகள் பணியாற்றியிருந்தாலும் அப்போ தெல்லாம் கிடைக்காத சந்தோஷம் நம்மிடம் படித்த மாணவர்கள் நல் நிலைக்கு உயர்ந்ததை பார்க்கும் போது கிடைத்தது. மருத்துவரை சந்திக்காமலேயே எங்கள் உடல்நிலை மேம்பட்டு விட்டது" என்றனர்.

SCROLL FOR NEXT