கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷி வந்தியம் அருகே செங்கனாங் கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர்விவசாயி பாவாடை. இவர், தனது வீட்டில் பசு மாடு ஒன்றை வளர்த்து வருகிறார்.
பாவாடையின் மனைவி வழக்கம் போல் நேற்றுக் காலையில் மாட்டில் பால் கறக்க சென்று உள்ளார், அப்போது பசுவின் மடியிலிருந்து பால் தானாக சுரந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக ஒரு சில்வர் பாத்திரத்தில் அந்தப் பாலை பிடித்துள்ளார். சுமார் 10 நிமிடங்களில், அரை லிட்டர் அளவு பால் தானாகவே சுரந்துள்ளது.
இதையறிந்த கிராம மக்கள், அந்தப் பசுவை ஆர்வமுடன் பார்த்துச் சென்றனர். அதில் சிலர் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக திருக்கோவிலூர் வட்ட கால்நடைத் துறை உதவி இயக்குநர் சுகுமாரிடம் கேட்டபோது, “கன்று ஈன்ற பசுவிடம் நாள் தோறும் குறித்த நேரத்திற்குள் பால் கறக்க வேண்டும். ஹார்மோன் பிரச்சினையால் சில மாடுகளுக்கு அந்த குறிப்பிட்ட நேரம் வந்ததும், இதுபோல காம்பில் பால் சுரக்கத் தொடங்கி விடும். இது ஹார்மோன் பிரச்சினையே தவிர வேறொன்றும் இல்லை. நாளடைவில் சரியாகி விடும்” என்று தெரிவித்தார்.