கள்ளக்குறிச்சி: மிஸ் கூவாகம் போட்டிகள் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையிலும், விழுப்புரத்திலும் மே 1-ம் தேதி நடத்தப்படும் என தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கே.அருணா தெரிவித்தார்.
இதுதொடர்பாக நேற்று அவர் விழுப்புரத்தில் செய்தியாளர் களிடம் கூறியதாவது:
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்து வருகிறது. கூவாகம் தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளதால், கடந்தாண்டு கூட்டமைப்பு சார்பில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி மிஸ் கூவாகம்-2023 விழா இந்தாண்டு இரண்டு இடங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மே 1-ம் தேதி காலை 9 முதல்பிற்பகல் 2 மணி வரை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் 2 சுற்றுப் போட்டிகளும், அன்றிரவு 7 மணி முதல் விழுப்புரத்தில் இறுதிச்சுற்று போட்டிகள்நடத்தப்பட்டு மிஸ் கூவாகம் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவர்.
இந்நிகழ்வுகளில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசு அலுவலர்கள், திரை நட்சத்திரங்கள், காவல் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர். இந்தியா மட்டுமல்லாது பிரிட்டன், அமெரிக்கா, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் திருநங்கைகள் பங்கேற்க உள்ளனர். தொடர்ந்து மே 2-ம் தேதிகூத்தாண்டவர் கோயில் பகுதியில்தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்து வரும் திருநங்கைகள் சார்பில் அன்னதானம், தண்ணீர் பந்தல் போன்றவை நடத்தப்படும்.
திருவிழாவின்போது குறைந்தது 1,500 காவலர்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும். கோயில் பகுதியில் போதிய அளவில் குடிநீர் வசதியை செய்து தர வேண்டும். இதைத்தவிர உடை மாற்றும் அறை, நடமாடும் கழிப்பறை வசதிகளும் செய்து தர வேண்டும்.
மேலும், விழுப்புரத்தில் தங்கும் விடுதிகள் கட்டணம் 3 மடங்கு அதிகமாக வசூலிக்கப்படுகிறது. விடுதிகளில் நியாயமான கட்டணம் வசூலிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். திருநங்கைகள் நலன் காக்க திமுக அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. சுயதொழில் தொடங்க கடனுதவி அளிக்கப்பட்டு வருகிறது. கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அரசை வலியுறுத்துகிறோம் என்றார்.