சமூக ஊடங்களில் வைரலாகும் விஷயங்களுக்கு எல்லையே கிடையாது. பார்ப்பவர்களைக் கவர்ந்துவிட்டால் போதும், நிச்சயம் அது வைரலாகிவிடும். அந்த வகையில் ஓணம் பண்டிகையையொட்டி அண்மையில் ரீமிக்ஸாக வந்த ‘எண்டம்மையிட ஜிமிக்கி கம்மல்’ பாடல் சமூக ஊடங்களில் சக்கைப்போடுபோட்டுக்கொண்டிருக்கிறது.
ஓணம் பண்டிகை வந்தாலே அத்தப்பூ கோலமிட்டுப் பாரம்பரிய உடையில் இளம் பெண்கள் நடனமாடும் நிகழ்ச்சிகளைப் பரவலாகப் பார்க்க முடியும். இந்த முறை அதைக் கொஞ்சம் வித்தியாசமாக அரங்கேற்றிக் காட்டியிருக்கிறார்கள் கொச்சியில் உள்ள ‘இந்தியன் ஸ்கூல் ஆஃப் காமர்ஸ்’ கல்வி நிறுவனத்தின் மாணவிகள், ஆசிரியர்கள். மோகன்லால் நடித்து வெளியான ‘வெளிப்பாடிண்டே புஸ்தகம்’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ‘எண்டம்மிதே ஜிமிக்கி கம்மல்’ என்ற பாடலுக்கு நடனமாடி ஓணத்தை இவர்கள் கொண்டாடினார்கள். இது பலரையும் கவரவே, இந்த நடனத்தை ‘ஜிமிக்கி கம்மல்’ என்ற பெயரிட்டு சமூக ஊடங்களில் பகிர்ந்திருந்தார்கள். இந்தப் பாடலும் நடனமும் கேரளாவில் மட்டுமல்லாமல், தமிழகத்திலும் வைரலானது.
யூடியூப்பில் பதிவேற்றப்பட்ட இரண்டு வாரங்களில் இந்த வீடியோவை ஒரு கோடிப் பேர் பார்த்திருக்கிறார்கள். ஒரு லட்சத்துக்கு அதிகமான பேர் இந்த வீடியோவை யூடியூப்பில் விரும்பியிருக்கிறார்கள். இந்தப் பாடலுக்கு நடனமாடிய ஷெரிலும் இதன்மூலம் புகழ்பெற்றிருக்கிறார். இத்தனைக்கும் இவர் மாணவி அல்ல, அந்தக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியை. இவரது நடனத்தைப் பார்த்த இளம் நெட்டிசன்கள் சமூக ஊடகத்தில் இவருக்கு ஒரு பக்கத்தையும் உருவாக்கிவிட்டார்கள்.
ஷான் ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் பாடலை மலையாள நடிகரும் இயக்குநருமான வினீத் ஸ்ரீநிவாசன் பாடியிருக்கிறார். பாடலாசிரியர் அனில் பனச்சூரன் எழுதியிருக்கும் இந்தப் பாடல் இந்த ஆண்டு ஓணம் கொண்டாட்டத்தின் பாரம்பரியத்தையே மாற்றிப் போட்டிருக்கிறது.
இந்த மலையாள பாடலின் முதல் இரண்டு வரிகளின் அர்த்தம் இதுதான் - “என்னோட அம்மாவின் கம்மலை அப்பா திருடிவிட்டார்.... அதனால், அப்பாவின் பிராந்தி பாட்டிலை அம்மா போட்டு உடைத்துவிட்டார்...” என்று ஒரு மகன் பாடுவதாக இந்தப் பாடல் வரிகள் அமைந்திருக்கின்றன.
தமிழ்நாட்டில் இந்தப் பாடல் நடனத்தை வைத்து உருவாக்கப்பட்ட நகைச்சுவையான பல மீம் வீடியோக்களும் சமூக ஊடகங்களைத் தற்போது கலக்கிக்கொண்டிருக்கின்றன.
வைரலான வீடியோ: https://www.youtube.com/watch?v=Och5LmLGQjI