வாழ்வியல்

களைகட்டும் கோயில் திருவிழாக்கள் - தேனி மாவட்டத்தில் அக்னிச்சட்டி ரூ.150-க்கு விற்பனை

என்.கணேஷ்ராஜ்

பெரியகுளம்: தேனி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தற்போது கோயில் திருவிழாக்கள் அதிகளவில் நடைபெற்று வருகின்றன. இதற்காக அக்னிச்சட்டி தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

ஆண்டிபட்டி, தேனி, பெரியகுளம், சின்னமனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பங்குனித் திருவிழா கோலாகலமாக நடைபெறுகிறது. குறிப்பாக அம்மன் கோயில்களில் விழாக்கள் நடக்கின்றன.

இதற்காக பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்து பொங்கல் வைத்தல், அக்னிச்சட்டி மற்றும் பால்குடம் எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை செலுத்தி வருகின்றனர். பங்குனி மட்டுமல்லாது சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி என அடுத்தடுத்த மாதங்களிலும் விழாக்கள் நடக்க உள்ளன.

இதற்காக கோயில்கள் தூய்மைப்படுத்தப்பட்டு திருவிழாவுக்காக தயாராகி வருகின்றன. இவ்விழாக்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவதால் அக்னிச்சட்டிகளின் தேவை அதிகரித்துள்ளது.

டி.கள்ளிப்பட்டி, பூதிப்புரம், ஜி.கல்லுப்பட்டி, புல்லக்காபட்டி, கைலாசபட்டி உள்ளிட்ட பகுதிகளில் அக்னிச்சட்டிகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

கொப்பரை, வலையம், வட்டச்சட்டி, சாதாரண தீச்சட்டி என 4 விதங்களில் அக்னிச்சட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. ரூ.50 முதல் ரூ.150 வரை இவை தரத்துக்கேற்ப விற்கப்படுகின்றன.

இதுகுறித்து டி.கள்ளிப் பட்டியைச் சேர்ந்த தொழிலாளி சுப்பிரமணி கூறியதாவது: தேனி மாவட்டத்தில் பங்குனி முதல் ஆடி வரை விழாக்கள் தொடர்ந்து நடைபெறும். அக்னிச்சட்டியின் தேவை அதிகம் இருக்கும்.

சுழலும் சக்கரத்தில் வைக்கப்பட்ட குழைவு மண்ணை கைகளால் அக்னிச்சட்டி வடிவத்துக்கு கொண்டு வருவோம். பின்னர் சிறிது நேரம் வெயிலில் காய வைத்து அடிப்பகுதியை மண் கொண்டு தட்டி அடைப்போம். தொடர்ந்து இவற்றை சூளையில் வேக்காடு வைத்து பதப்படுத்துவோம். பின்னர் சுத்தம் செய்து வர்ணம் பூசி விற்பனைக்கு அனுப்புவோம்.

வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவுக்கு ஆயிரக்கணக்கான சட்டிகள் தேவைப்படும் என்பதால் இரவும், பகலும் இவற்றை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.

ஏற்கெனவே வெயிலின் தாக்கத் தால் மண்பானை விற்பனை களைகட்டிய நிலையில் தற்போது அக்னிச்சட்டி தயாரிப்புக்கு ஆர்டர்கள் அதிகளவில் வந்துள்ளதால் மண்பாண்டத் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT