சென்னை: உலக இட்லி தினத்தையொட்டி ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி கடந்த ஓர் ஆண்டில் ஆர்டர் செய்யப்பட்ட இட்லி குறித்த சுவாரஸ்ய தரவுகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இட்லி அதிகம் ஆர்டர் செய்த நகரங்கள் பட்டியலில் பெங்களூரு நகரம் முதலிடம் பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில் ஹைதராபாத் உள்ளது. இந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு வாடிக்கையாளர் தான் ரூ.6 லட்சத்துக்கு கடந்த ஓர் ஆண்டில் இட்லி மட்டும் ஆர்டர் செய்துள்ளார். தனக்கும், தன் நண்பர்களுக்கும் ஆறு லட்சம் ரூபாய்க்கு 8,428 பிளேட் அளவுக்கு அவர் இட்லி ஆர்டர் செய்துள்ளார் என்று அந்த தரவு வெளிப்படுத்துகிறது.
சென்னை இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. எனினும், காலை 8 மணியிலிருந்து 10 மணி வரை இட்லியை ஆர்டர் செய்வதில் சென்னை தான் முதலிடம் வகிக்கிறது. அதேநேரம் ரவா இட்லியை பெங்களூரு மக்கள் அதிக அளவு ஆர்டர் செய்துள்ளனர்.
கடந்த ஆண்டில் மட்டும் ஸ்விக்கியில் 33 மில்லியன் பிளேட் இட்லி ஆர்டர் செய்யப்பட்டுள்ளது என்றாலும், காலை உணவாக அதிகமாக மசாலா தோசையே அதிகம் ஆர்டர் செய்யப்பட்டு முதலிடம் வகிக்கிறது.