"என் வாழ்வின் சிறந்த மூன்றாண்டுகளை நான் அனுபவித்திருக்கிறேன். இந்த 3 ஆண்டுகளில் சில அற்புதமான மனிதர்களை சந்தித்திருக்கிறேன். அருமையான அனுபவங்களைப் பெற்றேன். என்னால் பெரிய மாற்றங்களைக் கொண்டுவர முடியும் என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன். ஆனால், மக்கள் நினைப்பதைவிட குழந்தைகளால் நிறைய செய்ய முடியும் என்பதை நிரூபித்திருப்பதாக உணர்கிறேன்" - இது 3 ஆண்டுகள் டென்ட்டில் மட்டுமே இரவுப் பொழுதை கழித்த சிறுவன் கின்னஸ் சாதனை பயணம் பற்றி தானே கூறியதாகும்.
பொதுவாக இயற்கை எழில் கொஞ்சும் இடங்களுக்கு சுற்றுலா செல்வோர் இதுபோன்ற டென்ட்களில் தங்குவர். இல்லை சில நேரங்களில் ஏதேனும் பிரச்சாரத்திற்காக திரள்வோர் இவ்வாறாக டென்ட்டில் தங்குவார்கள். ஆனால், முழுக்க முழுக்க மூன்று ஆண்டுகளாக இரவு நேரங்களில் டென்ட்டில் தங்கியிருந்தார் பிரிட்டனைச் சேர்ந்த மேக்ஸ் வூஸி என்ற சிறுவன். 2020-ஆம் ஆண்டு மார்ச் 28 ஆம் தேதி அவருடைய 10-வது வயதில் அச்சிறுவன் "Boy in the Tent" என்ற பிரச்சாரத்தை தொடங்கினார். ஹாஸ்பைஸ் கேர் எனப்படும் வயதான, நீண்டகால நோயால் பாதிக்கப்பட்ட, இறக்கும் தருவாயில் உள்ள நபர்களின் இறுதி நாட்களுக்கான சிகிச்சை அளிக்கும் பராமரிப்பு மையத்திற்காக நிதி திரட்டுவதற்காக அவர் இந்த பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
$8,60,000 திரட்டிய சிறுவன்: அவருடைய இந்தப் பிரச்சாரம் அவரே எதிர்பார்க்காத பலனைக் கொடுத்ததோடு அவருக்கு கின்னஸ் வேர்ல்டு ரெக்கார்டு புத்தகத்தில் இடமும் கொடுத்துள்ளது. அவர் மூன்றாண்டுகள் முடிவில் $8,60,000 டாலர் நிதி திரட்டியுள்ளார். இது ஒரு ஹாஸ்பைஸ் கேர் மையத்தில் வேலை செய்யக்கூடிய 20 செவிலியரின் ஆண்டு வருமானத்தை கொடுக்கக் கூடிய அளவிலானது.
ஆரம்பத்தில் மேக்ஸ் ஒரே இடத்தில் தான் டென்ட்டை அமைத்து அன்றாட இரவைக் கழித்தார். ஆனால், அவரது பிரச்சாரம் சமூக வலைதளங்களில் பிரபலமாக உள்ள இடங்களில் அவருக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு, லண்டன் உயிரியல் பூங்கா, நம்பர் 10 டவுனிங் ஸ்ட்ரீட் பூங்கா, ட்விக்கன்ஹேம் ரக்பி மைதானம் எனப் பல இடங்களில் தங்க அனுமதிக்கப்பட்டார்.
இந்த அனுபவம் பற்றி மேக்ஸ் கூறும்போது, "என் வாழ்வின் சிறந்த மூன்றாண்டுகளை நான் அனுபவித்திருக்கிறேன். இந்த 3 ஆண்டுகளில் சில அற்புதமான மனிதர்களை சந்தித்திருக்கிறேன். அருமையான அனுபவங்களைப் பெற்றேன். என்னால் பெரிய மாற்றங்களைக் கொண்டுவர முடியும் என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன். ஆனால், மக்கள் நினைப்பதைவிட குழந்தைகளால் நிறைய செய்ய முடியும் என்பதை நிரூபித்திருப்பதாக உணர்கிறேன்" என்று கூறியிருந்தார்.
2022-ல் மேக்ஸ் அளித்த ஒரு பேட்டியில், இரவில் டென் ட்டில் மட்டுமே தூங்கி எனக்கு மெத்தையில் எப்படி உறங்குவது என்பதே மறந்துவிட்டது என்று கூறியிருந்தார். இந்த மூன்று ஆண்டுகளில் எத்தனையோ முறை மேக்ஸின் குடும்பத்தினர் அவர் இந்த பிரச்சாரத்தை முடித்துக் கொள்ளுமாறு வேண்டியும் அவர் அதனை முடிக்கவில்லை. இந்நிலையில், 2023 ஆம் ஆண்டு மார்ச் 28-ஆம் தேதியுடன் மேக்ஸ் வூசி தனது பிரச்சாரத்தை முடித்துக் கொண்டுள்ளார். கூடவே, நன்கொடை திரட்டுவதற்காக நீண்ட காலம் டென்ட்டில் வசித்த சிறுவன் என்ற வகையில் கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றிருக்கிறார்.