மதுரை: உலக இட்லி தினத்தையொட்டி, மதுரை அண்ணாநகரில் உணவுத் தொழிலில் ஊரக மகளிர் பொருளாதார உள்ளடக்கியத் திட்டம் சார்பில், இட்லி அறிமுகம் தயாரிப்பு பயிற்சி இன்று நடந்தது. பெண்கள் பலர் பங்கேற்றனர்.
'ஸ்பிரிட்’ என்ற அமைப்பின் செயலர் ராஜ சாம்சன் தலைமை வகித்தார். விழாவில் நவீன் பேக்கரி நிறுவன உரிமையாளர் சுப்பிரமணியன் பேசியது: “ஆண்டுதோறும் நாட்கள் தவறாமல் இட்லியை உண்ணுகிறோம். ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் மார்ச் 30-ல் தேசிய பாப்கான் தினம் கொண்டாடப்படுகிறது . சுவீடனில் இதே நாளில் அந்நாட்டு பாரம்பரிய உணவான அப்பம் தினம் அனுசரிக்கப்படுகிறது. நமது பாரம்பரிய உணவான இட்லி புகழை போற்றும் விதமாக மார்ச் 30ல் உலக இட்லி தினமாக 2015 முதல் கொண்டாடுகிறோம்.
ஒரு காலத்தில் பண்டிகை, திருவிழா போன்ற முக்கிய தினங்களில் மட்டுமே கண்ணில் தென்பட்ட இட்லி, இன்றைக்கு கையேந்தி பவன், உயர்தர சைவ உணவகம், நட்சத்திர ஹோட்டல் மற்றும் வீடுகளிலும் இட்லி வியாபாரம் ஜோராக நடக்கிறது. இதன் தேவை என்றைக்கும் குறையாது. மருத்துவர்களும் இந்த உணவை பரிந்து ரைக்கின்றனர். எந்த தட்ப வெப்ப சூழலிலும் மக்களின் நல்வாழ்வுக்கு ஏற்றது இட்லி. இத்தினத்தையொட்டி, அண்ணாநகரில் 24 மணி நேரமும் இட்லி கிடைக்கும் கடை ஒன்று விரைவில் தொடங்கப்படும்” என்றார்.