உடல் பருமன் சிகிச்சைக்கான மருந்துகள் முதன்முறையாக உலக சுகாதார நிறுவனத்தின் அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் இடம்பெறும் சூழல் உருவாகியுள்ளது. இதற்கு இப்போதே ஆதரவு, எதிர்ப்புக் குரல்கள் கிளம்பியுள்ளன.
உலக சுகாதார நிறுவனத்தின் அத்தியாவசிய மருந்துகள் பட்டியலானது குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளின் அரசாங்கங்களை மருந்து கொள்முதலில் வழிநடத்துகிறது. ஏதேனும் ஜெனரிக் மருந்துகள் இந்நிறுவனத்தின் பட்டியலில் இடம்பெறும்போது அதன் மீதான நம்பிக்கை அதிகரிக்கிறது. இந்நிலையில், இந்தப் பட்டியலில் முதன்முறையாக உடல் பருமன் தொடர்பான மருந்துகள் இடம்பெறலாம் என்ற சூழல் உருவாகியுள்ளது. இதற்காக, உலக சுகாதார நிறுவனத்தால் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவானது அடுத்த மாதம் தொடங்கி உடல் பருமன் சிகிச்சை மருந்துகளை ஆய்வு செய்யும். பின்னர் செப்டம்பர் மாதம் புதுப்பிக்கப்பட்ட அத்தியாவசிய மருந்துகள் பட்டியலை வெளியிடும். ஒருவேளை பரிந்துரை ஏற்கப்பட்டால் புதிய பட்டியலில் உடல் பருமன் சிகிச்சை மருந்துகள் இடம்பெறும்.
உடல் பருமன் சிகிச்சை மருந்துகளை அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் சேர்க்கும் கோரிக்கையானது முதன்முதலில் மூன்று மருத்துவர்கள் மற்றும் ஓர் ஆராய்ச்சியாளரால் உலக சுகாதார நிறுவனத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்தக் கோரிக்கையில், டென்மார்க் நாட்டின் நோவா நார்டிஸ்க் மருந்து நிறுவனத்தின் சாக்ஸெண்டா (Saxenda) மருந்தின் முக்கிய வேதிக்கூறான liraglutide என்ற மூலப்பொருளை ஜெனரிக் மருந்தாக்கும் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை உலக சுகாதார நிறுவன குழு ஏற்றுக் கொள்ளலாம் இல்லை உடல் பருமன் சிகிச்சை மருந்துகளின் நம்பகத்தன்மை, திறன் பற்றிய கூடுதல் ஆதாரங்களுக்காக காத்திருக்கலாம்.
சாக்ஸெண்டாவை ஜெனரிக் மருந்தாக உலக சுகாதர நிறுவனம் அறிவித்தால், அது உடல் பருமனை அணுகுவதில் உலகிற்கு ஒரு புதிய வழிகாட்டியாக இருக்கும் என்ற ஆதரவுக் குரல்கள் எழுந்துள்ளன. மேலும், இதுபோன்ற நடவடிக்கையால் நோவோ நார்டிஸ்க் நிறுவனத்தில் வெகோவி மருந்தை குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளுக்கு எதிர்காலத்தில் அறிமுகம் செய்ய ஏதுவாகவும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஆனால், சில பொது சுகாதார நிபுணர்களோ இதுபோன்ற மருந்துகளை பரந்துபட்ட சமூகத்திற்கு அறிமுகம் செய்வதில் எச்சரிக்கை தேவை எனக் கூறுகின்றனர். இதுவரை முழுமையாக புரிந்து கொள்ளப்படடாத ஒரு மருத்துவ நிலைக்கான தீர்வாக இந்த மருந்துகளை அறிமுகப்படுத்துவது சரியானது அல்ல எனக் கூறுகின்றனர்.
இது குறித்து உலக சுகாதார நிறுவன செய்தித் தொடர்பாள ஒருவர் கூறுகையில், "உடல் பருமன் சிகிச்சைக்கு மருந்துகளைக் கொடுப்பது என்பது அதை நோக்கிய தீர்வுகளில் ஒரு அம்சம் மட்டுமே. ஆனால், மிகவும் முக்கியமான அம்சம் எதுவென்றால், வரும்முன் தடுத்தல். இதுதான் இப்போதைக்கு மிக முக்கியமானது" என்றார்.
உடல் பருமன் என்றால் என்ன? - உடலில் மிகையாகக் கொழுப்பு திரண்டு சேமிக்கப்படுவதால் ஏற்படும் ஒரு நிலையே உடல்பருமன் ஆகும். முழு வளர்ச்சிப் பெற்ற ஒருவருக்கு உடல் நிறை அட்டவணைப்புள்ளி (BMI) 30 அல்லது அதற்கு மேலோ இருப்பது இதனைக் குறிக்கிறது. பல நாடுகளில் தடுக்கக் கூடிய நோய்களுக்கும் மரணத்திற்கும் உடல் பருமனே முக்கியக் காரணம். சமீப காலங்களில் தொழில்மயமான நாடுகளில் மிகை எடை கொண்ட மக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. அதை விட மேலாக உலக சுகாதார நிறுவனத்தால் உடல்பருமன் ஒரு கொள்ளை நோய் என அழைக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனத் தரவுகளின் படி உலகம் முழுவதும் 65 கோடி பேர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 1975 நிலையை ஒப்பிடுகையில் மும்மடங்காகும். மேலும் 1.3 பில்லியன் மக்கள் அதிக உடல் எடை கொண்டவர்களாகவும் இருக்கின்றனர். இவர்களில் 70 சதவீதம் பேர் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளிலேயே இருக்கின்றனர்.
உடல் பருமன் மருந்தை உலக சுகாதார நிறுவனத்தின் அத்தியாவசியப் பட்டியல் மருந்துகளில் சேர்ப்பதன் மூலம் மக்களுக்கு அது பலன் தரும். 2002-ல் எச்ஐவி மருந்து அவ்வாறாக சேர்க்கப்பட்டபோது ஏழை நாடுகளில் உள்ள எய்ட்ஸ் நோயாளிகள் பயனடைந்தனர் என்று நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
அமெரிக்க ஆராய்ச்சியாளர் டாக்டர் சஞ்சனா கரிமெலா, "உடல் எடையைக் குறைப்பதற்காக பிரத்யேகமாக செயல்படும் மருந்து ஏதும் இப்போதைக்கு உலக சுதாதார நிறுவனப் பட்டியலில் இல்லை. ஊட்டச்சத்து குறைபாடு தொடர்புடைய நோய்களுக்கு மினரல் சப்ளிமென்ட்டுகள் உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஆனால், அதே வேளையில் உடல் எடை குறைப்புக்கு எந்த பரிந்துரையும் இல்லை. இது சர்வதேச சுகாதார சமத்துவத்தில் பாரபட்சம் அல்லவா? ஏழை நாடுகளில் உடல் பருமனால் இதய நோய்களும், சர்க்கரை வியாதியும் அதிகரிக்கும் சூழலில் இந்த ஏற்றத்தாழ்வு களையப்பட வேண்டாமா?" என்றும் கேள்வி எழுப்புகிறார்.
சாக்ஸெண்டா, வேகோவி விலை, பலன்: சாக்ஸெண்டா என்ற ஊசியை அன்றாடம் ஒரு டோஸ் செலுத்துகையில் அது உடல் பருமன் நோயால் பாதிக்கப்பட்ட நபரின் எடையை 5 முதல் 10 சதவீதம் வரை குறைக்கிறது. இதற்கு ஒரு மாதத்திற்கு அமெரிக்காவில் 450 டாலரும், ஐரோப்பாவில் மாதத்திற்கு 150 டாலரும் செலவாகிறது. வேகோவி மருந்தை வாராந்திர முறையில் எடுத்துக் கொள்வோர் மாதம் 1,300 டாலர் செலவிட நேரிடுகிறது. அவர்களுக்கு 15 சதவீதம் வரைகூட எடைகுறைப்பு நிகழ்ந்துள்ளது.
இப்போதைக்கு வேகோவி மருந்து விநியோகம் குறைந்துள்ளது. காரணம் அதனைத் தயாரிக்கு நோவோ நிறுவனம் வேகோவியை பணக்கார சந்தையான அமெரிக்க சந்தையில் அறிமுகப்படுத்தி விநியோகிக்க திட்டமிட்டு வருகிறது. மேலும், அந்நிறுவனம் WHO பட்டியலில் லிராக்ளுடைட் மருந்தை பட்டியலிடும் பரிந்துரைக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்று கூறியுள்ளது.
இந்த இரண்டு மருந்துகளுமே GLP-1 ரிசப்டார் அகனிஸ்ட்ஸ் வகுப்பைச் சேர்ந்தவை. இவை நீண்ட காலமாக சர்க்கரை நோயாளிகள் சிகிச்சைக்கும் பயன்படுகிறது. இவை மூளைக்குச் செல்லும் பசி சமிக்ஞைகளை மட்டுப்படுத்துகிறது. அதனால் அவர்களுக்கு நீண்ட நேரம் பசியெடுக்காமல் இருக்கும். இந்த இரண்டு மருந்துகளின் பாதுகாப்பு, செயல்திறன் தொடர்பான நீண்ட கால பயன் பற்றிய தரவுகள் குறைவாகவே இருக்கிண்றன. சில ஆராய்ச்சிகள் உடல் பருமன் சிகிச்சைக்காக இந்த மருந்தை எடுத்துக் கொள்வோ வாழ்நாள் முழுவதும் இதை எடுத்துக் கொள்ள நேரும் என்றும் கூறியுள்ளது.
எல் லில்லி அண்ட் கோ (Eli Lilly and Co) என்ற மருந்து நிறுவனமும் இதேபோன்ற சர்க்கரை நோய் சிகிச்சை மருந்தினை எடை குறைப்பு சிகிச்சைக்கு பயன்படுத்துவதற்கான ஒப்புதலுக்குக் காத்திருக்கிறது.
உலக சுகாதார நிறுவனத்தின் அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் இடம்பெற்றால் ஏழை, குறைந்த, நடுத்தர வருவாய் நாடுகள் பயன்பெறும் என்ற வாதம் ஒருபுறம் இருக்க உயர் வருமான கொண்ட நாடுகள் எல்லாம் இந்த மருந்தின் மீது வேறுவிதமான அணுகுமுறை கொண்டுள்ளன. உயர் வருவாய் நாடுகள் இந்த மருந்தை அரசு சுகாதார அமைப்புகள் மூலம் பொதுமக்களுக்கு பரிந்துரைப்பதா அல்லது காப்பீட்டு நிறுவனங்கள் வாயிலாக பரிந்துரைப்பதா அல்லது மிகவும் ஆபத்தான நிலையில் உடல் பருமன் கொண்டவர்களுக்கு மட்டும் பரிந்துரைப்பதா என்று ஆலோசனைகள் நடத்தி வருகின்றன.
டொரன்டோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜுல்பிகார் பூட்டோ, "குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளில் உடல் பருமன் உபாதை நிலவரத்தை முழுமையாக அறிந்து, புரிந்துகொண்டே அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்குச் செல்ல வேண்டும்.
மேலும், உடல் பருமன் சிகிச்சையைவிட உடல் பருமன் நிலை தடுப்பையே ஊக்குவிக்க வேண்டும். அதன் நிமித்தமான விழிப்புணர்வு பிரச்சாரங்கள், பாலினம் சார்ந்த அறிவுரைகள் ஆகியன உடல் பருமன் சிகிச்சை மருந்துகளைவிட அதிகமான முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். ஏனெனில், உடல் பருமன் சிகிச்சை மருந்துகளின் பாதுகாப்பும் செயல்திறனும் இன்னும் அதிகமான ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட வேண்டியவையாகவே உள்ளன" என்று கூறுகிறார்.
தமிழில்: பாரதி ஆனந்த்