பிரதிநிதித்துவப் படம் 
வாழ்வியல்

8 மாத கால தேடல்; 150+ நிறுவனங்களில் விண்ணப்பித்து வேலை பெற்ற சாப்ட்வேர் இன்ஜினியர்!

செய்திப்பிரிவு

டெல்லி: தனக்கு ஒரு வேலை வேண்டி சுமார் 8 மாத காலமாக 150-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் விண்ணப்பித்து இறுதியில் அந்த முயற்சியில் வெற்றியும் பெற்றுள்ளார் டெல்லியை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர். அவர் பெயர் ஃபர்ஹான் என தெரியவந்துள்ளது. இந்த அனுபவத்தை சமூக வலைதளத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

“கடந்த 2022 ஜூலையில் வேலை தேடும் படலத்தை தொடங்கினேன். நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் விண்ணப்பித்தேன். அதில் பெரும்பாலான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. நான் கல்லூரியை முடித்து வெளிவந்த போது வேலை தேடி பெற்றதற்கும், இப்போதும் நிறைய சவால் இருப்பதை கண்டேன். தொழில்நுட்ப துறையில் வேலை பெறுவது மிகவும் சவாலாக உள்ளது. ஒருபுறம் பணி நீக்கம் நடைபெற்று வரும் காலம் இது.

நான் விண்ணப்பித்த 150+ நிறுவனங்களில் பத்து நிறுவனங்கள்தான் பதில் கொடுத்தன. அதில் 6 நிறுவனங்கள்தான் நேர்காணலுக்கு அழைத்தன. 3 நிறுவனங்களில் இறுதி சுற்று வரை சென்றேன், ஒரு நிறுவனத்தில் ஆட்தேர்வை கடைசி நேரத்தில் முடக்கம் செய்தார்கள் மற்றொரு நிறுவனத்தில் வெறும் சில ரவுண்டுதான் பங்கேற்றேன். எஞ்சிய நிறுவனத்தில்தான் வேலை கிடைத்தது.

வேலைக்காக முயற்சி செய்பவர்கள், அதுவும் கல்லூரி முடித்த கையோடு எக்காரணம் கொண்டும் தன்னம்பிக்கையை இழக்க வேண்டாம். முயற்சி செய்யுங்கள். திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். மற்றதை ஆண்டவனிடம் விட்டு விடுங்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT