கண்டெடுக்கப்பட்ட பெருங்கற்கால கல்வட்டங்கள் 
வாழ்வியல்

சிவகங்கை அருகே பெருங்கற்கால கல்வட்டங்கள்,  கற்காலக் கருவி கண்டெடுப்பு

இ.ஜெகநாதன்

சிவகங்கை: சிவகங்கை அருகே ஒ.புதூர் ஊராட்சி அண்ணாநகர் சி-காலனி பகுதியில் காணப்பட்ட கல்வட்டங்களை, தமறாக்கி பள்ளி ஆசிரியர் தேவி அளித்த தகவல் அடிப்படையில் சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர் புலவர் காளிராசா, தலைவர் சுந்தரராஜன், செயலர் நரசிம்மன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இது குறித்து புலவர் காளிராசா செய்தியாளர்களிடம் கூறியது: "பெருங்கற்கால காலங்களில் இறந்தோரின் உடல்கள், அவர்கள் பயன்படுத்தி பொருட்களை புதைத்த பின்பு சுற்றிலும் கற்களை வட்டமாக அடுக்கி வைக்கும் பழக்கம் இருந்துள்ளது. மேலும், கல்வட்டங்களுக்கு உள்ளே செவ்வக வடிவில் பெட்டி போன்ற அமைப்பில் கற்பதுக்கைகளும் அமைத்து வந்துள்ளனர்.

தற்போது இப்பகுதியில் 20-க்கும் மேற்பட்ட பெருங்கற்கால கல்வட்டங்கள் காணப்பட்டன. இவை 3,500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. இதில் ஒரு கல்வட்டம் மட்டும் 2 அடுக்குகளாக உள்ளது. இது மற்ற கல்வட்டங்களில் இருந்து வேறுபட்டு உள்ளதால், அக்காலத்தில் வாழ்ந்த தலைவருக்கானதாக இருக்கலாம்.

பெரும்பாலான கல்வட்டங்கள் வெள்ளைக் கற்களிலும் உள்ளன. சில கல்வட்டங்கள் செம்புராங்கற்களிலும் உள்ளன. மேலும் இரும்பு உருக்கு எச்ச கழிவுகள் காணப்படுகின்றன. இரு பக்கங்களிலும் துளை உள்ள கற்கால கருவி ஒன்றும் கிடைத்துள்ளது. இக்கருவியை சுத்தியல் போன்று உடைப்பதற்கு அல்லது விலங்குகளை வேட்டையாடுவதற்கு பயன்படுத்தியிருக்கலாம்" என்று அவர் கூறினார்.

:::

SCROLL FOR NEXT