சுல்தான் அல்-நெயாதி | படம்: ட்விட்டர் 
வாழ்வியல்

விண்வெளியில் ரமலான் நோன்பை தொடங்கிய அமீரக விண்வெளி வீரர்!

செய்திப்பிரிவு

இஸ்லாமிய மக்கள் புனித ரமலான் நோன்பை தொடங்கியுள்ளனர். இந்நிலையில், அமீரகத்தை சேர்ந்த விண்வெளி வீரர் ஒருவர் விண்வெளியில் தனது ரமலான் மாத நோன்பை திறந்துள்ளார். பணிச் சூழல் காரணமாக அவர் விண்வெளியில் இருந்தாலும் தவறாமல் ரமலான் நோன்பை அவர் தொடங்கியுள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக அவர் ட்வீட் ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.

அவர் பெயர் சுல்தான் அல்-நெயாதி. க்ரூ-6 மிஷனில் அவர் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றுள்ளார். இந்தப் பயணத்தில் சுமார் 19 ஆய்வு சோதனை பணிகளை அவர் மேற்கொள்கிறார். ஐசிஆர் குழுவில் விண்வெளி மையத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது போன்ற பயிற்சியை அவர் பெற்றுள்ளார். டி-38 ஜெட்டில் தியரி மற்றும் பிராக்டிக்கல் பயிற்சியையும் அவர் பெற்றுள்ளார்.

“ரமலான் முபாரக். ஆசீர்வதிக்கப்பட்ட இந்த ஒரு மாத காலத்தில் உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். சர்வதேச விண்வெளி நிலையத்தின் அழகான இரவு நேர காட்சிகளை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்” என அவர் ட்வீட் செய்துள்ளார். அதில் பிறை நிலவையும் அவர் காட்சிப்படுத்தியுள்ளார்.

விண்வெளியில் பணி செய்ய வேண்டியுள்ள காரணத்தால் அவரால் இந்த மாதம் முழுவதும் விரதத்தை முறையாக கடைபிடிக்க முடியாது. “குழு உறுப்பினர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் அல்லது பயணத்தை பாதிக்க செய்யும் எந்தவொரு செயலையும் என்னால் செய்ய முடியாது. போதுமான உணவை உட்கொள்ள எங்களுக்கு அனுமதி உண்டு. இது ஊட்டச்சத்து குறைபாட்டை தவிர்க்க செய்யும் என நம்பப்படுகிறது. இருந்தாலும் இது எப்படி செல்கிறது என்பதை பொறுத்து பார்க்க வேண்டி உள்ளது” என விண்வெளி பயணத்தை தொடங்குவதற்கு முன்னர் சுல்தான் அல்-நெயாதி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT