சென்னை: சென்னையில் நடந்த கண்காட்சியில் மதுரை மத்திய சிறைக் கைதிகள் தயாரித்த சுங்குடி சேலைகள் அதிகளவில் விற்கப்பட்டன. மேலும், ஒட்டுமொத்த சிறை கைதிகளின் பொருட்கள் விற்பனை மூலம் சிறந்த அரங்கிற்கான 3-வது பரிசு தமிழக சிறை நிர்வாகத்திற்கு கிடைத்துள்ளது.
சென்னை தீவுத்திடலில் இந்திய சுற்றுலா வளர்ச்சி கழகம், தொழில் வளர்ச்சிக் கழகம் சார்பில் கண்காட்சி நடந்தது. அரசு சார்பில் சுமார் 53 அரங்குகள் இடம்பெற்றுள்ளன. தமிழக சிறைத் துறை அரங்கில் சிறைகள், சீர்திருத்த பணிகள் துறை இயக்குநர் அமரேஷ் பூஜாரியின் வழிகாட்டுதலின்படி, தமிழகம் முழுவதும் இருந்து 10 மத்திய சிறைகளில் கைதிகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் சந்தைப்படுத்தும் விதமாக அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.
இதன்படி, மதுரை மத்திய சிறை கைதிகள் தயாரிக்கும் ரெடிமேட் சட்டைகள், கைலிகள், டவல், சுங்குடி சேலைகள் மற்றும் இயற்கை உரங்கள், பெண்கள் தனி சிறையில் இருந்து தயாரிக்கப்படும் நைட்டி, சிறுமியர் ஆடைகள் ஆகியவை விற்பனைக்கு வைக்கப் பட்டிருந்தன.
பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து கடலை மிட்டாய், அல்வா, புழல் சிறையில் இருந்து காலணிகள் மற்றும் செக்கு எண்ணெய் வகைகள், கடலூர் மத்திய சிறையில் மஞ்சள் பைகள், வேலூர் சிறை மூலம் தயாரிக்கப்படும் தோல் பொருட்கள், தோல் காலணிகள் மற்றும் சேலம், கோவை, திருச்சி உள்ளிட்ட மத்திய சிறைகளில் இருந்து கைதிகள் தயாரிக்கும் பொருட்கள் மக்களின் பார்வைக் கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டன.
குறிப்பாக 80 நாட்கள் வரை நடந்த இக்கண்காட்சியில் இடம்பெற்ற சிறைத் துறை அரங்கின் மூலம் கைதிகளின் தயாரித்த பல்வேறு பொருட்களும் ரூ.17 லட்சத்திற்கு விற்கப்பட்டன. இக்கண்காட்சியில் சிறந்த அரங்கிற்கான 3-வது பரிசை சிறைதுறை அரங்கு பெற்றுள்ளது. கண்காட்சியின் நிறைவு விழாவில் இதற்கான விருதினை சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் பூசாரி பெற்றார். இருப்பினும், மதுரை சிறை கைதிகள் தயாரித்த சுங்குடி சேலைகளுக்கு கிராக்கி இருந்தது என சிறைத் துறையினர் தெரிவித்தனர்.