உணவு | கோப்புப் படம் 
வாழ்வியல்

சென்னையில் முதல் முறையாக ‘ஃபுட் ஸ்ட்ரீட்’ - மாநகராட்சி திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்

கண்ணன் ஜீவானந்தம்

சென்னை: சென்னையில் முதல் முறையாக ரூ.20 கோடியில் ‘ஃபுட் ஸ்ட்ரீட்’ (Food Street) அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

சென்னையில் பல்வேறு இடங்களில் பல்வேறு வகையான உணவுகள் கிடைக்கிறது. தென் இந்திய உணவுகள், வட இந்திய உணவுகள், சைனீஸ் உணவுகள் என்று அனைத்து வகையான உணவுகளும் சென்னையில் கிடைக்கிறது. ஆனால், இந்த உணவுகள் அனைத்தும் வெவ்வேறு இடங்களில் கிடைக்கிறது. மேலும், சென்னையில் உணவுத் திருவிழாக்களை நடத்துவதற்கு சரியான உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை. இதன் காரணமாக தீவுத்திடல் போன்ற மைதானங்களில் தான் உணவுத் திருவிழாக்கள் நடத்தப்படுகிறது.

இந்நிலையில், சென்னையில் ‘ஃபுட் ஸ்ட்ரீட்’ அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன்படி சின்னமலை அருகில் ராஜீவ் காந்தி சிலையில் இருந்து ராஜ்பவன் சாலை வரை உள்ள 2 கி.மீ நீளச் சாலையை உணவுச் சாலையாக மாற்ற சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. ரூ.20 கோடி செலவில் இந்த உணவுச் சாலை அமைக்கப்படவுள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "சென்னையில் உள்ள அனைத்து பிரபலமான உணவு வகைகளும் ஒரே இடத்தில் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இதுபோன்று ஒரு திட்டத்தை செயல்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்த சாலையில் இரண்டு புறமும் நடைபாதைகள் பெரிதாக அமைக்கப்படும். மேலும், அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்படும்.

இதன்பிறகு சென்னையில் பிரபலமாக உள்ள சிறிய கடைகள் முதல் பெரிய கடைகள் வரை அனைத்து உணவகங்களையும் இங்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வரும் காலங்களில் பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகளுடன் உணவு திருவிழாக்கள் நடத்த ஏற்ற இடமாக இது இருக்கும். இதற்கான தொடக்க கட்ட பணிகள் நடைபெற்றது. விரைவில் இந்த பணிகள் இறுதி செய்யப்பட்டு அடுத்த கட்ட பணிகள் தொடங்கும்" என்று அவர் கூறினார்.

SCROLL FOR NEXT