சென்னை: இந்தியாவின் முதல் ஆளில்லா டேக்-அவே மையம் சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது. தனித்துவமிக்க இந்த மையம் சென்னை - கொளத்தூர் பகுதியில் அமைந்துள்ளது. இதனை பாய் வீட்டுக் கல்யாண பிரியாணி உணவக நிறுவனம் முன்னெடுத்துள்ளது.
இங்கு 32 இன்ச் அளவு கொண்ட திரையில் மெனுவை பார்த்து வாடிக்கையாளர்கள் உணவை ஆர்டர் செய்ய முடியும். அதற்கான கட்டணத்தை யுபிஐ மற்றும் கார்டு மூலமாக மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் உணவை ஆர்டர் செய்து பெற்று செல்லும் நபரின் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. Food வேட்டை என்ற பெயரில் இயங்கி வரும் இன்ஸ்டாகிராம் கணக்கர் ஒருவர் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் இந்த மையத்தில் உணவு ஆர்டர் செய்யும் முறையை அவர் விவரித்துள்ளார்.
பிரியாணி, பானங்கள், சைவ உணவு, ஸ்டார்டர்கள் என விதம் விதமாக இதில் உணவை ஆர்டர் செய்ய முடியும் என தெரிகிறது. இந்தியாவில் ஆன்லைன் வழியே உணவு டெலிவரி செய்யும் வழக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் பாய் வீட்டுக் கல்யாணத்தின் இந்த முயற்சி கவனம் பெற்றுள்ளது.
சென்னையில் 12 இடங்களில் இதுபோன்ற டேக்-அவே மையங்களை அமைக்க உள்ளதாகவும். அதை தொடர்ந்து அதனை இந்தியா முழுவதும் விரிவு செய்யும் திட்டம் இருப்பதாகவும் தகவல். கடந்த 2020-ல் பாய் வீட்டுக் கல்யாண பிரியாணி துவங்கப்பட்டது.