இயற்கை விவசாயி பா.கணேசன் நாட்டு மாட்டுச்சாணத்தில் உருவாக்கும் செல்போன் ஸ்டாண்ட் 
வாழ்வியல்

நாட்டு மாட்டுச்சாணத்தில் தயாராகும் ‘செல்போன் ஸ்டாண்ட்’: உசிலம்பட்டி டு மும்பை செல்லும் கலைப்பொருட்கள்

சுப. ஜனநாயகசெல்வம்

மதுரை: நாட்டு மாட்டுச்சாணத்தில் உருவாக்கப்படும் ‘செல்போன் ஸ்டாண்ட்’ உசிலம்பட்டியிலிருந்து மும்பை, ஹைதராபாத் அனுப்புவதற்கு தயாராகி வருகின்றன.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூரைச் சேர்ந்தவர் பா.கணேசன் (வயது 53). இயற்கை விவசாயியான இவர் நாட்டு மாட்டுச்சாணம், கோமியம் கலந்து 100-க்கும் மேற்பட்ட கலைப்பொருட்களை கை வேலைப்பாடாகவே உருவாக்கி வருகிறார். இதில் நாட்டு மாட்டுச் சாணத்திலிருந்து மாவிலை தோரணங்கள், பூஜை பொருட்கள், விநாயகர், சரஸ்வதி, இயேசு போன்ற கடவுள் சிலைகள், கழுத்தில் அணியும் பாசி மாலைகள், நிறுவனங்களின் இலச்சினை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை உருவாக்கி விற்பனை செய்து வருகிறார். தற்போது ‘செல்போன் ஸ்டாண்ட்’கள் உருவாக்கி தெலங்கானா மாநிலம் ஹைதராபாத், மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு அனுப்பி வருகிறார்.

இதுகுறித்து இயற்கை விவசாயியும், கைவினைக் கலைஞருமான பா.கணேசன் கூறியதாவது: "இயற்கை முறை விவசாயத்திற்கு நாட்டு மாடுகள் வளர்த்து வருகிறேன். நாட்டு மாட்டுச்சாணம், கோமியம் ஆகியவற்றிலிருந்து இயற்கை உரங்கள், பஞ்சகாவ்யா, மூலிகை பூச்சிவிரட்டி, இடுபொருட்களை தயாரித்து விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகிறேன். அதற்குபோக எஞ்சிய மாட்டுச்சாணங்களில் கலைப்பொருட்களை தயாரித்து வருகிறேன். இதில் 100க்கும் மேற்பட்ட கலைப்பொருட்களை உருவாக்கி விற்பனை செய்து வருகிறேன்.

தற்போது தெலங்கானா மாநிலம் ஹைதராபாத், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையிலிருந்து ஆர்டர் வந்துள்ளன. அதற்காக செல்போன் ஸ்டாண்ட் உருவாக்கி வருகிறேன். இதில் பேனாக்கள், விசிட்டிங் கார்டுகளையும் வைத்துக்கொள்ளலாம். அச்சுவார்ப்புகளை பயன்படுத்தாமல் கை வேலைப்பாடாகவே செய்து வருகிறேன். இதிலிருந்து தயாராகும் பொருட்கள் சுற்றுச்சூழலை பாதிக்காது, பயன்படுத்தும் வரை பொருளாக இருக்கும். குப்பையில் வீசினால் உரமாகிவிடும். சுற்றுச்சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த கலைப்பொருட்கள். இது மறுசுழற்சி செய்யலாம்" என்றார்.

SCROLL FOR NEXT