கோழிகமுத்தி யானைகள் முகாமில் பணியாற்றி ஓய்வுபெற்ற கும்கி யானை கலீமுக்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய வனத்துறையினர். 
வாழ்வியல்

பொள்ளாச்சி | கும்கி யானை கலீமுக்கு ஓய்வு: வனத்துறையினர் மரியாதை

செய்திப்பிரிவு

பொள்ளாச்சி: ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் கும்கி யானை கலீமுக்கு வனத்துறை பணியிலிருந்து நேற்று ஓய்வு அளிக்கப்பட்டது.

ஆனைமலை புலிகள் காப்பகத்தின் பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் சேத்துமடை பகுதியில் வனத்துறையால் புதிதாக கட்டப்பட்ட ஆனைமலையகம் (பொருள் விளக்க மையம்) கட்டிடத்தை வனத்துறை கூடுதல் முதன்மை செயலாளர் சுப்ரியா சாஹூ நேற்று திறந்து வைத்தார். பின்னர் உலாந்தி வனச்சரகத்தில் டாப்சிலிப் பகுதியில் அமைந்துள்ள மலைவாழ் மக்கள் உண்டு உறைவிடப் பள்ளியை பார்வையிட்டார்.

கோழிகமுத்தி யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வரும் கும்கி யானை கலீமுக்கு 60 வயது பூர்த்தியானதால், அதற்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முதன்மை தலைமை வனப்பாதுகாவலரும், தலைமை வன உயிரினக் காப்பாளருமான சீனிவாஸ் ரெட்டி, ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் ராமசுப்பிரமணியம், துணை இயக்குநர்கள் பார்கவ் தேஜா, தேஜஸ்வீ, உதவி வனப்பாதுகாவலர் செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.

கலீமின் பணிகளை சிறப்பிக்கும் வகையில் ‘சல்யூட்’ அடித்து வனத்துறையினர் மரியாதை செலுத்தினர். ஓய்வுக்கு பின்னர் கலீமுக்கு பணிகள் எதுவும் அளிக்கப்படாது, முழு ஓய்வு அளிக்கப்பட்டு முகாமிலேயே கலீம் பராமரிக்கப்படுமென வனத்துறையினர் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT