வாழ்வியல்

மீஸா அஷாநாஃபி: இருண்ட வானில் ஒரு துருவ நட்சத்திரம் | Women's Day Special

பால்நிலவன்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பூமிப்பந்தின் இருண்ட சில பக்கங்களில் புரட்சிகர மின்னல் ஒன்றின் வெளிச்சம் பாய்ந்தது என்றால், அது மீஸா அஷாநாஃபி (Meaza Ashenafi) என்ற பெண்ணால்தான்.

எத்தியோப்பியாவில் ஒரு பள்ளிச் சிறுமிக்கு தூக்குத் தண்டனைக்கு உத்தரவிட்டது அந்நாட்டுஉயர் நீதிமன்றம். தூக்குத் தண்டனையை உடைத்தெறிய களமிறங்கினார் மீஸா அஷாநாஃபி. ஏதுமறியாத சிறு பெண்ணை காப்பாற்றக்கூட தனது சட்டப்படிப்பு உதவாவிட்டால் தனது வழக்கறிஞர் பணியே வேண்டாம் என நினைத்தார். இதற்காக கடுமையான விளைவுகளை சந்தித்தார். உள்ளூர் பழைமைவாதிகள் முன்வைத்த பாரம்பரிய கலாச்சார பெருமைகளை சட்டத்தின் உதவியோடு தனது வாதத்திறமையால் உடைத்தெறிந்தார். அச்சிறுமி ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யும் அளவுக்குக் காரணமான ஒரு பலாத்கார பழைமைவாத பாரம்பரிய பழக்கவழக்கத்தின் கேவலமான கரடுதட்டிய போக்கையே ஒழித்துகட்டி ஒரு சமூகத்தையே காப்பாற்றிய பெருமைக்குரியவர் மீஸா அஷாநாஃபி.

பழைமை வாதம் என்பது உலகம் முழுவதும் சாதாரண தூசுபடலமாக அல்ல களைச்செடிகளாக பலரது வாழ்வையே அழித்து கொண்டிருப்பதற்கு உதாரணம் இந்த வழக்கு. எத்தியோப்பியாவில் சில ஆண்டுகள் முன்புவரைகூட டெலிபா என்றொரு கொடிய வழக்கம் மக்களால் அங்கீகரிக்கப்பட்டு வந்தது. ஒரு ஆண் தனக்கு எந்த பெண் விருப்பமோ அப்பெண்ணை கடத்திச் சென்று பலாத்காரம் செய்துவிட்டால் போதுமாம் அவனுக்கே அப்பெண்ணை மணம்முடிக்க வேண்டியதுதானாம். இப்படியும் சொல்கிறார்கள், அதாவது ஓர் ஆண் எந்தப் பெண்ணை விரும்புகிறாரோ அந்த ஆண் அப்பெண்ணை பலாத்காரம் செய்வதுதான் சாகசமாம். அப்போதுதான் அவர் அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ள சம்மதிப்பார்களாம்.

அப்படித்தான் பள்ளிக்கூடத்திலிருந்து காட்டுவழியாக சக மாணவிகளோடு வீடு திரும்பிக்கொண்டிருந்த அந்த 14 வயது ஹிரூத் என்ற சிறுமியை துப்பாக்கிகளோடு குதிரையில்வந்த சில கயவர்கள் கடத்திச் செல்கிறார்கள். ஏற்கெனவே திட்டமிட்டபடி அவர்களில் ஒரு வாலிபன் அவளை குடிசைக்குள் இழுத்துச்சென்று வல்லந்தமாக பாலியல் வல்லுறவு கொள்கிறான். முற்றிலும் உடைந்துவிழும் அந்தப் பெண் குழந்தை அருகிலிருந்த துப்பாக்கியை எடுத்து அவனை சுட்டுக்கொன்று விடுகிறாள். அதாவது திருமணத்திற்காக இளம் பெண்களைக் கடத்துவதை கொண்டாடும் ஒரு (அம்ஹாரிக் மொழியில் 'டெலிஃபா' என்கிற வழக்கம்) மூடத்தனத்தின் முத்திய கோளாறுத்தனத்தையே சுட்டுவீழ்த்திவிடுகிறாள் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆனால் பழைமை என்ற ஜீராவில் ஊரிய கிராம பழைமைவாதிகள் அதனை எதிர்கின்றனர். ஹிரூத்தை காப்பாற்றவும் யாரும் முன்வரவில்லை. பிரச்சினையை கேள்விப்பட்ட அடிஸ்அபாபா நகரின் முக்கிய வழக்கறிஞரான மீஸா அஷாநாஃபி பிரச்சினையின்தீவிரத்தை உணர்கிறார். நகரத்திலிருந்து காரை எடுத்துச்சென்று உரிய நேரத்தில் வந்து அவர்களிடமிருந்து அச்சிறுமியை மீட்டுவந்து அடைக்கலம் கொடுக்கிறார். தன்னுடனேயே பத்திரமாக தங்கவைக்கிறார். நீதிமன்றத்தில் அச்சிறுமிக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை எதிர்கொண்டு வழக்காடுகிறார். தனது திறமையான துணிச்சலான சட்டப்போராட்டத்தின்மூலம் அப்பெண்ணை சட்டதின் கோரப்பிடியிலிருந்தும் காப்பாற்றுகிறார். ஹிரூத் மீண்டும் பள்ளி செல்ல தொடங்கினார். அதன்பின் பள்ளிமாணவிகள் ஹீரத்தை அன்போடும் தோழமையோடும் ஏற்றுக்கொண்டனர்.

டிப்ரெட் படத்தின் ஒரு காட்சி.

இவ்வழக்கிற்கு பிறகு தான் எத்தியோப்பியாவின் சட்டத்திட்டங்களில் திருத்தங்கள் செய்யப்படுகிறது. தான் தலைமையேற்று நடத்திவந்த பெண்கள் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பாக அதற்கான சட்டப் போராட்டத்தையும் மீஸா முன்னெடுத்தார். டெலிபா என்ற வழக்கமும் அழித்தொழிக்கப்பட அதன் பிறகு எத்தியோப்பியச் சிறுமிகள் எந்தவித அச்சமும் இன்றி சுதந்திரமாக புத்தகப் பைகளை சுமந்துகொண்டு பள்ளிகளை நோக்கி நடைபயின்றனர் என்பது எத்தியோப்பியாவின் கடந்த சில ஆண்டுகளாக மாறிவரும் தித்திப்பான வரலாறு.

மீஸா 1964ல் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். அதனால்தான் எளியவர்களின் வலிகளை உணர்ந்தவராக இருந்தார். வரலாற்றை மாற்றிய மீஸாவுக்கு 2003 ஆம் ஆண்டில், மீஸா பசி திட்ட விருது, ஆனார் கிராஸ்ரூட்ஸ் எத்தியோப்பியன் வுமன் ஆஃப் சப்ஸ்டான்ஸ் ஆப்ரிக்கா பரிசு பெற்றதோடு 2007ல் அமைதிக்கான நோபல் பரிசுக்கும் பரிந்துரைக்கப்பட்டார். பின்னர் அஷாநாஃபி ஆப்பிரிக்காவிற்கான ஐக்கிய நாடுகளின் பொருளாதார ஆணையத்திற்கான திறன் மேம்பாட்டுப் பிரிவில் பாலினம் மற்றும் பெண்களின் உரிமைகள் குறித்த ஆலோசகர் என்ற பொறுப்பெற்றுள்ளார். ஐ.நா.சபை மீஸா அஷாநஃபிக்கு உயரிய பதவியை அளித்து தன்னைத்தானே பெருமைப் படுத்திக்கொண்டுள்ளது.

அவரது மிகவும் பிரபலமான ஹிரூத் வழக்கு 2014-ல் திரைப்படமாக உருவானது, ஹிரூத் தொடர்பான மீஸா அஷாநாஃபி வென்ற முக்கியமான இந்த வழக்கு குறித்து எதியோப்பியா திரைப்பட இயக்குநர் செரசெனாய் பெர்ஹானி மெஹாரி எடுத்த திரைப்படம் 'டிப்ரெட்' உலக அரங்கில் அதிர்வுகளை உண்டாக்கியது. சர்வதேச திரைப்பட விழாக்களில் ஏராளமான விருதுகளை குவித்தது. இப்படத்தின் காரணமாக ஆப்பிரிக்கா முழுவதும் அறியப்பட்டவரானார் அஷாநாஃபி.

ஆனால், இப்படம் பாரம்பரிய பெருமைகளை சீர்குலைப்பதாகக் கூறப்பட்டு ஆப்பிரிக்க நாடுகளில் திரையிடப்பட பல்வேறு தடைகளை சந்தித்தது. அந்நேரத்தில் புகழ்பெற்ற ஹாலிவுட் திரைக்கலைஞரான ஏஞ்சலினா ஜோலி முன்வந்தார். தான் நிர்வாக தயாரிப்பாளராக இருந்து ஆப்பிரிக்க திரைப்பட விநியோகப் பொறுப்பை மேற்கொள்ளும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள திரைப்பட வெற்றிக்கு காரணமாக இருந்தார். டிப்ரெட் திரைப்படம் 2014 சன்டான்ஸ் திரைப்பட விழாவில் உலக சினிமா பார்வையாளர் விருதையும் வென்றது. அத்துடன், ஆஸ்கரில் சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படப் பிரிவிலும் பரிந்துரைக்கப்பட்டது.

மீஸா அஷாநாஃபி நவம்பர் 2018 இல், எத்தியோப்பியாவின் ஃபெடரல் உச்ச நீதிமன்றத்தின் தலைவராக ஃபெடரல் பார்லிமென்ட் அசெம்பிளியால் நியமிக்கப்பட்டார். கடந்த ஜனவரியில் ராஜினாமா செய்வதுவரை தனது பணியில் பல்வேறு சிக்கலான பிரச்சினைகளுக்கு துணிச்சலான தீர்வுகளை வழங்கினார்.

மீஸா அஷாநாஃபி எப்போதும் கூறுவது ஒன்றுதான்: ''பெண்களுக்கான அதிகாரமளித்தல் என்பதைப் பற்றி நாம் யோசிக்கிறோம். ஆனால் அதற்கு அடித்தளமாக இருக்கவேண்டியது; எல்லாவற்றையும் விட முக்கியமானது பெண்களுக்கான கல்விதான் என்று நான் நம்புகிறேன்..''

SCROLL FOR NEXT